மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

– சுகாதாரத்துறை உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்காக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இதில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் 1-ம் தேதி கல்லுாரிகளும், நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்தன.

இதனிடையே, கொரோனாவின் புதிய வடிவமான ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவியதாலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் காரணமாகவும், டிசம்பர்- 24 முதல், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் சமீப நாட்களாக தொற்று பரவல் குறைந்துள்ளதால் இன்று (பிப்ரவரி-1) முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் துவங்கின.

அதன்படி 40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் இன்று முதல் பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த முறை பள்ளி, கல்லுாரிகளில் 100 சதவீத மாணவர்களையும் அமர வைத்து, பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், நேரடி வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ப்ரீ கே.ஜி., – எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் மற்றும் பிளே ஸ்கூல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கல்லுாரி மாணவர்கள் வீட்டில் இருந்து, ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை எழுத உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைகளுக்கு உட்பட்ட கல்லுாரிகளில், இந்தாண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்குகின்றன.

இந்நிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

“பள்ளிக்கு வரக்கூடிய 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்துவதுடன், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில், மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியால் பள்ளி வகுப்பறைகளை தினசரி சுத்தம் செய்வது அவசியம்.

கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மாணவர்கள், பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வலியுறுத்துவதுடன் மாணவர்கள் தொடர்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

உணவருந்தும் இடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மாணவர்களுக்கு நோய் பரவல் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

01.02.2022 12 : 30 P.M

You might also like