ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், வாழ்க்கைச் சூழல், பிரச்சனைகளை ஒன்று சேர்த்து தீர்வு சொல்லும் திரைப்படங்கள் சமீபகாலமாக அதிகமாகி வருகின்றன.
அந்த வகையில், ஒருவரது மரணத்தை அடிப்படையாகக் கொண்டு கிளைகள் விரிக்கும் நான்கு சிறு கதைகளை ஒன்றாகக் கோர்த்திருக்கிறது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.
ஜெயகாந்தனின் புகழ் பெற்ற நாவலைப் பெயரில் கொண்டிருக்கும் இத்திரைப்படம், முந்தைய படைப்புக்கு ஏதேனும் களங்கம் சேர்க்கிறதா அல்லது அந்த டைட்டிலுக்கு நியாயம் செய்திருக்கிறதா என்பதே இதனைக் காண விழையும் பார்வையாளர்களின் முதல் கேள்வியாக இருக்கும்.
தகிக்கும் குற்றவுணர்ச்சி!
மனைவியை இழந்து தவிக்கும் செல்வராஜ் (நாசர்), மகன் விஜயகுமாரே (அசோக் செல்வன்) வாழ்க்கை என்றிருக்கிறார்.
தான் என்ன சொல்ல வருகிறோம் என்பதிலிருக்கும் கவனத்தை எதிரேயிருப்பவர்கள் என்ன சொல்ல வருகின்றனர் என்பதை அறிவதில் காட்டாமலிருப்பது விஜயகுமாரிடம் இருக்கும் ஒரே பிரச்சனை. அது, பெரும்பாலும் அவரது தந்தையையே பாதிக்கிறது.
விஜயகுமாருக்கும் மலருக்கும் (ரேயா) திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில், நல்ல முகூர்த்த நாளில் பத்திரிகை கொடுப்பதைத் தொடங்க விருப்பப்படுகிறார் செல்வராஜ்.
ஆனால், ‘இன்று வேண்டாம் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று மறுப்பு தெரிவிக்கிறார் விஜயகுமார். வேறு நிறுவனத்தில் வேலையில் சேர்வது தொடர்பான பணிகளைக் கவனிக்கச் செல்கிறார்.
பெரிய ஹோட்டலொன்றில் வேலை பார்க்கும் ராஜசேகருக்கு (மணிகண்டன்), தான் பார்க்கும் ஹவுஸ்கீப்பிங் பணியில் விருப்பமேயில்லை. மேலாளர் பதவிக்கு அவர் விண்ணப்பிக்க, நிர்வாகமோ தற்போது செய்யும் வேலையைக் கவனத்தோடு செய்யுமாறு அறிவுறுத்துகிறது. இது, ராஜசேகரை எரிச்சலுக்குள்ளாக்குகிறது.
தற்பெருமைக்காக வீணாகச் செலவு செய்வதில் ஆர்வம் காட்டும் பிரவீனுக்கும் (பிரவீன் ராஜா) எதிலும் யதார்த்தமாக இருக்க விரும்பும் அவரது மனைவி கயலுக்கும் (ரித்விகா) எப்போதும் ஏழாம் பொருத்தம்.
மூன்று நாட்களில் அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் செல்லும் பிரவீன், மனைவி குழந்தையோடு அங்கேயே செட்டிலாகும் கனவில் இருக்கிறார்.
மாபெரும் இயக்குனர் அறிவழகன் (கே.எஸ்.ரவிகுமார்) மகனான பிரதீஷ் (அபி ஹசன்), தந்தையின் நிழலில் இல்லாமல் தனித்து நாயகனாக விரும்புகிறார். அவ்வாறே நண்பனின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
அப்படத்தின் விழாவில், ’வழக்கமான தமிழ் சினிமா கண்றாவிகள் இதில் இருக்காது’ என்ற தொனியில் பிரதீஷ் பேச, ஊடகங்களில் அது பெரிய சர்ச்சையாகிறது. தயாரிப்பாளர் தரும் விருந்தில் இப்பிரச்சனை உச்சகட்டமடைகிறது.
மனைவி வழி உறவினர்களுக்குப் பத்திரிகை கொடுக்கும் செல்வராஜ், இரவில் தனது நண்பரை (இளவரசு) பார்க்கச் செல்கிறார்.
வீடு திரும்பும்போது தனது உறவினர் ராஜசேகரிடம் (மணிகண்டன்) செல்வராஜை பஸ் ஸ்டாப்பில் விடுமாறு சொல்கிறார் அவரது நண்பர்.
வேலை மீதான எரிச்சலில் இருக்கும் ராஜசேகர் மது குடிப்பதற்காக பாதி வழியில் செல்வராஜை இறக்கிவிட, நெடுஞ்சாலைக்கு வரும் அவர் மீது பிரவீன் ஓட்டிவரும் கார் மோதிவிட்டுச் செல்ல, அவ்வழியே வேகமாக வரும் பிரதீஷ் சாலையில் யாரோ விழுந்து கிடப்பதைக் கண்டு வாகனத்தை நிறுத்த முயல்கிறார். சாலைத் தடுப்பில் இடித்து வாகனத்தை நிறுத்துகிறார்.
ஆனால், அப்பகுதியில் இருப்பவர்கள் செல்வராஜ் மீது மோதியது பிரதீஷின் கார்தான் என்று முடிவு செய்து போலீஸுக்கு புகார் தெரிவிக்கின்றனர்.
செல்வராஜ் மரணமடைய, அதன் தொடர்ச்சியாக ராஜசேகர், பிரவீன், பிரதீஷ், விஜயகுமாரின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைச் சொல்கிறது ‘சி.நே.சி.ம.’.
தன் மீது விழும் பழியில் இருந்து விடுபட முடியாமல் பிரதீஷ் தவிக்க, தான் செய்த தவறை பிரவீன் மறைக்க முயற்சிக்க, தனது குற்றவுணர்ச்சியை எரிச்சலாக ராஜசேகர் வெளிக்காட்ட, தான் சொல்வதைக் கேட்காவிட்டால் அனைவருக்கும் பிரச்சனைதான் என்பதை மிக அழுத்தமாக விஜயகுமார் முன்வைக்க, இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டடைவதுடன் படம் நிறைவடைகிறது.
முந்தைய தலைமுறையின் பாடம்!
செல்வராஜாக வரும் நாசர் சிறிது நேரமே வந்தாலும், படம் முழுக்க தான் வியாபித்திருக்கும் உணர்வை உருவாக்குகிறார்.
பானுப்ரியா, இளவரசு, ரமா, கே.எஸ்.ரவிக்குமார், அனுபமா உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் இளைய தலைமுறைக்கு வழிவிட்டு சில காட்சிகளே வந்தாலும் நிறைவைத் தருகிறது அவர்களது அனுபவமும் திறமையும்.
அசோக் செல்வன், மணிகண்டன், பிரவீன் ராஜா, அபி ஹசன் என்று நால்வருக்கும் நடிப்பதற்கான வாய்ப்புகளைக் கொட்டியிருக்கிறது திரைக்கதை.
அழுகையையும் கோபத்தையும் குற்றவுணர்வையும் எரிச்சலையும் வெளிப்படுத்துவதில் நால்வருமே ஜொலிக்கின்றனர்.
ரித்விகா, ரேயா, அசோக் செல்வனின் நண்பராக வரும் ரிஷிகாந்த் ஆகியோரும் இரண்டு காட்சிகள் என்று முறை வைத்து தங்களது முத்திரையைப் பதித்திருக்கின்றனர்.
மெய்யேந்திரன் ஒளிப்பதிவு வெவ்வேறு களங்களை வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறது. பிரசன்னா ஜிகேவின் படத்தொகுப்பு குழப்பமில்லாமல் நான்கு கதைகளையும் ஒரு புள்ளியில் கோர்த்திருக்கிறது.
ஆங்காங்கே காட்சியோடு ஒன்றவைக்கும் பின்னணி இசை தந்திருக்கிறார் ரதன். படத்தின் பாடல்கள் ‘ஓகே’ என்று சொல்ல வைக்கின்றன.
கதாபாத்திரங்களையும் அவர்களது உணர்வுகளையும் மையமாக வைத்துக்கொண்டு, அது தொடர்பான சம்பவங்களைத் திரைக்கதையாக கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.
முரட்டு பிடிவாதம், அலட்சியம், செய்யும் வேலையில் அதிருப்தி, வீண் பகட்டு என்று இன்றைய தலைமுறையிடம் வேகமாக ஒட்டிக்கொள்கிற, எளிதில் கைவிட முடியாத விஷயங்களை அவர் சுட்டிக்காட்டியிருக்கும் விதம் அழகு.
மணிகண்டனின் வசனங்கள் இயக்குனரின் பார்வைக்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றன.
’நான் இந்த வேலையைச் செய்யச் சொல்லி கம்பெல் பண்ணனா’ என்று மணிகண்டனிடம் ரிஷிகாந்த் கோபப்பட்டு பேசுமிடம் சட்டென்று நெற்றிப்பொட்டில் அறைகிறது.
போலவே, நாசர் இளவரசுவிடம் மனம் விட்டுப் பேசுவதும், அசோக் செல்வனின் குறை என்னவென்று ரேயா சுட்டிக்காட்டுவதும் மனதில் பதிகின்றன.
அதே நேரத்தில் அசோக் செல்வன், மணிகண்டன் சம்பந்தப்பட்ட கிளைக்கதைகள் தரும் திருப்தியை மற்ற இரண்டும் தரவில்லை.
உதாரணமாக, தான் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் இறந்துபோனதாக பிரவீன் சொல்கையில் அவரது பெற்றோர் எப்படி ரியாக்ட் செய்கின்றனர் என்பதோ, அபி ஹசன் சமூகவலைதள ட்ரோல்களை சமாளிக்கும்போது அவரது பெற்றோர் இருவரும் கூலாக இருப்பது எப்படி என்பதோ இன்னும் கொஞ்சம் விலாவாரியாக சொல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தான் நினைத்ததே சரி என்று வாழும் இளம் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் விட்டுச் செல்லும் பாடமே ’சி.நே.சி.ம.’.
கூடவே ’குற்றவுணர்ச்சி கொல்லும்’ என்பதை அழுத்தமாக வலியுறுத்தி, இன்றைய நாளை இனிதாக்க வேண்டுமென்ற எண்ணத்தை விதைத்திருப்பதற்கு பாராட்டுகள்!
- உதய் பாடகலிங்கம்
01.02.2022 11 : 50 A.M