சில திரைப்படங்களை மிகத்தாமதமாகப் பார்க்க நேர்கையில், ‘அடடா இதை தியேட்டர்ல பார்த்திருக்கலாமே’ என்று தோன்றும். அந்த வகையில் அமைந்திருக்கிறது ‘பீமண்ட வழி’.
ஒரு நீண்ட காலப் பிரச்சனை, அதற்கான தீர்வு, அதை நோக்கிச் செல்லும் முயற்சி, அந்த நேரத்தில் உறுதுணையாகவும் எதிராகவும் நிற்கும் மனிதர்கள், அந்த பயணத்தில் நேரும் தடங்கல்கள், அவற்றைக் கடப்பதற்கான உத்வேகம் என்று ஒரு வழக்கமான கமர்ஷியல் படத்திற்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இக்கதையில் உண்டு.
மாறாக, கொஞ்சம் கூட ஹீரோயிசம் இல்லாமல் முதன்மையான கதாபாத்திரங்களின் இயல்பை வெளிக்காட்டி திரைக்கதை அமைத்ததில் ரொம்பவே வித்தியாசப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாகி அபார வரவேற்பைப் பெற்ற ‘பீமண்ட வழி’ தற்போது அமேசான் பிரைம் தளத்தில் காணக் கிடைக்கிறது.
ஒரு தீர்வும் பல சிக்கல்களும்!
ரயில்வே ட்ராக்கை ஒட்டிய ஒரு குடியிருப்பு பகுதி. ஒவ்வொரு வீட்டிற்குமான காம்பவுண்டு சுவருக்கும் ரயில்வே எல்லைச் சுவருக்கும் இடையே மூன்று அடி கூட இடைவெளி கிடையாது.
இதனால், அங்கு வசிப்பவர்கள் அவசரத் தேவைகளுக்கும் கூட சுற்றி வர வேண்டியுள்ளது.
இந்த நீண்டகாலப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நாள், கதையின் நாயகன் பீமன் என்ற சஞ்சீவின் (குஞ்சாக்கோ போபன்) தாயார் (ஷைனி) கீழே விழுந்து அடிபடும்போது வாய்க்கிறது.
மழையில் நனைந்து காம்பவுண்டு சுவரைத் தாண்டி தாயைத் தூக்கிக் கொண்டு சாலைக்கு வந்து காரில் ஏறியது, சஞ்சீவின் மனதில் இதற்கொரு வழி காண வேண்டுமென்ற எண்ணத்தை விதைக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நிலத்தில் சிறிது பகுதியை வாங்குவதும், வாகனங்கள் செல்லும் வகையில் தெருவை அகலப்படுத்த முனைவதும் நிகழ்கிறது.
அம்முயற்சியை அப்பகுதி மக்கள் எப்படி வரவேற்றனர், யாரெல்லாம் உதவத் தயாராக இருந்தனர், யார் இடைஞ்சல்கள் தந்தனர், அதையெல்லாம் மீறி அரசு விதிமுறைகளையும் நடைமுறைகளையும் கடக்கும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன,
தெருவை அகலப்படுத்தும் பயணத்தில் அங்குள்ள மனிதர்களின் மனநிலை எவ்வாறிருக்கிறது என்பதையெல்லாம் தெளிவாகக் காட்டி, முடிவில் அந்த பாதை அமைந்ததா இல்லையா என்பதைச் சுவைபடச் சொல்கிறது ‘பீமண்ட வழி’.
ஒரு பெரும்பிரச்சனைக்கான தீர்வைச் சுலபமாக முடிவு செய்வதும், அதன்பின்னர் சிறு பிரச்சனைகளைக் கடக்கப் பிரம்மப் பிரயத்தனப்படுவதும் திரைக்கதையில் அடுத்தடுத்து வருகிறது.
அதனை இதுவரை நாம் பார்த்துவந்த திரைக்கதை வடிவமைப்பில் சொல்லாததுதான் இயக்குனர் அஸ்ரப் ஹம்சாவையும் கதை திரைக்கதை வசனம் எழுதித் தயாரித்து சிறு பாத்திரத்தில் நடித்திருக்கும் செம்பன் வினோத் ஜோஸையும் பாராட்ட வைக்கிறது.
ஆளுக்கொரு திசையில்..!
‘பீமண்ட வழி’ படத்தின் ஆகப்பெரிய பலம், இதில் வரும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களும் அவற்றின் மனநிலையும்தான்.
அனைவருக்குமான நன்மையை விரும்பும் பீமனாக குஞ்சாக்கோ போபன், மற்றவர்களால் தனக்கு மட்டுமே பயன் கிடைக்க வேண்டுமென்ற கயமைத்தனம் கொண்ட ஊத்தம்பிள்ளி கொஸ்தெப்புவாக ஜினு ஜோசப்,
அவ்வட்டாரத்தில் இருக்கும் ஒவ்வொருவரது ரகசியங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் மகர்ஷியாக செம்பன் வினோத் ஜோஸ், ஆண்களை மீறி தனித்து நின்று சாதனை படைக்கத் துடிக்கும் கவுன்சிலர் ரீதாவாக திவ்யா,
பிறருடைய நாய்களை விஷம் வைத்து கொல்லும் நிபுணர் குலான் பால் ஆக நசீர் சங்கராந்தி, வாய்மையே உருவான மிஸ்டர் பெர்பெக்ட் மஞ்சலி டார்சேஸ் ஆக சூரஜ் வெஞ்சாரமூடு, இளம் வயதிலேயே விதவையான சஞ்சீவியின் தாயாராக ஷைனி சாரா,
பீமனோடு நெருக்கமாகப் பழகியும் வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளும் ப்ளெஸ்ஸியாக வின்சி அலாய்சியஸ், குங்ஃபூ மாஸ்டராக வரும் சின்னு சாந்தினி, வெளிநாடு சென்று திரும்பும் மருத்துவர் சிமோன் ஆக அஸ்வின் மேத்யூ,
அக்குடியிருப்பில் தனியாக வசிக்கும் பெண் சீதாவாக ஜீவா ஜனார்த்தனன், கர்நாடகாவில் இருந்து வந்த ரயில்வே என்ஜினியர் கின்னாரியாக மேகா தாமஸ்,
குடிகார ஆட்டோ டிரைவராக வரும் பினு பாப்பு என்று கிட்டத்தட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் திசைக்கொன்றாக இருப்பது இக்கதையில் முதன்மையாகக் காட்டப்படுகிறது.
ஒவ்வொருவருக்கும் நான்கைந்து காட்சிகள் என்று வைத்துக்கொண்டு ஒரு பாத்திரத்திற்கும் மற்றொன்றுக்குமான தொடர்பையும் வெறுப்பையும் தனித்துவத்தோடு காட்டியதோடு அதில் யதார்த்தத்தைக் கலந்திருப்பதுதான் இப்படத்தின் சிறப்பு.
உதாரணமாக, பார்க்கும் பெண்களைக் கவிழ்க்க நினைக்கும் பீமனுக்கு ஏன் காதலித்து திருமணம் செய்துகொள்ள மனம் வராதது கோடி ரூபாய் கேள்வி.
அதற்கான பதிலாக, அப்பகுதியில் இருக்கும் அனைவரையும் பெண்டாளத் துடிக்கும் கொஸ்தெப்புவின் பாத்திரம் அமைகிறது.
கொஸ்தெப்புவைக் கண்டு பீமனுக்குப் பயமா அல்லது துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்றிருக்கிறானா? திரைக்கதையில் எதுவும் சொல்லப்படாதபோதும், இப்படி ஒரு பாத்திரத்தையும் நம்மால் ‘ஜஸ்டிபை’ செய்துவிட முடியும்.
இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்தால் நாயகன் குஞ்சாக்கோ போபன் தொடங்கி சிறு பாத்திரங்களில் நடித்தவர்கள் வரை ஒருவரையும் ‘ரீகிரியேட்’ செய்ய முடியாது. குறிப்பாக, கொஸ்தேப்புவாக வரும் ஜினு ஜோசப் தான் இக்கதையின் ‘அல்டிமேட்’ பாத்திரம்.
அதேபோல, வழக்கமான கட்டமைப்பை உடைத்திருக்கும் இதன் திரைக்கதையை ‘ஆர்ட் ஹவுஸ்’ வகைப்பாட்டிலோ அல்லது சீரியல் பாணி என்ற முத்திரைக்குள்ளோ அடக்க முடியாததும் பெரிய பிளஸ்.
திரையில் வடியும் யதார்த்தம்!
கண் முன்னே சிலர் ஒரு தெருவை அகலப்படுத்தும் உணர்வு தோன்றுவதை மிக எளிதாக உருவாக்கிட முடியாது. ஆனால், கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
நிஜாம் கதிரியின் படத்தொகுப்பு எந்த குழப்பமுமில்லாமல் பார்வையாளர்கள் திரைக்கதையோடு ஒன்ற உதவியிருக்கிறது.
விஷ்ணு விஜய்யின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளின் நோக்கத்தை நமக்கு கடத்துகின்றன.
என்னதான் கதையையும் காட்சிகளையும் புட்டு புட்டு வைத்தாலும், இப்படத்தை ஒருவரால் கண்டிப்பாக ரசிக்க முடியும் என்று சவால்விட்டிருக்கும் இயக்குனர் அஸ்ரப் ஹம்சாவின் திறமை அளப்பரியது.
ஆர்ப்பாட்டமான கமர்ஷியல் கொண்டாட்டத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் திருப்தி தராது என்றாலும், வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் அளவுக்கு இதில் நகைச்சுவையும் உண்டு என்பது சிறப்பம்சம்.
கூடவே, பெண்களின் காமமும் போதை விருப்பமும் சாதிக்கும் உத்வேகமும் ஆண்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல எனும் எண்ணத்தையும் நம்முள் விதைக்கும்.
’சின்னவீடு’ பாக்யராஜ், ’இனிமே இப்படித்தான்’ சந்தானம் உட்பட தமிழ் சினிமா நாயகர்கள் சாதாரண தோற்றமுள்ள பெண்களைத் திருமணம் செய்வதாக திரைக்கதை அமைக்கப்படுவது வெகு அரிதான விஷயம்.
‘பீமண்ட வழி’யில் குஞ்சாக்கோ போபனின் பாத்திரமும் அப்படியே வடிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமை எதுவுமில்லை என்றாலும், இப்புள்ளியில் இருந்து தொடங்கினால் ஒட்டுமொத்த திரைக்கதையும் வேறொரு பரிமாணம் பெறுவதை உணர முடியும்!
-உதய் பாடகலிங்கம்
31.01.2022 12 : 30 P.M