– உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவp பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
அந்தப் பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 9-ம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19-ம் தேதி உயிரிழந்தார்.
அந்த மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாலேயே அவர் விஷம் குடித்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தன. இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.
இதையடுத்து, வீடியோவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய அந்த செல்போன் சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்றும் முயற்சியே காரணம் என்ற புகார் போலி என்பது அம்பலமாகியுள்ளது. பாஜக நிர்வாகி பதிவு செய்த வீடியோவில் மதம் மாற்றும் முயற்சி நடக்கவில்லை என மாணவி கூறும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை முடிவுக்கு பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி வேலை வாங்கியதே காரணம் என்று மாணவி வாக்குமூலம் அளித்த புதிய வீடியோ வெளியானது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியது.
பிரியங்கா கனூப், மருத்துவர் ஆனந்த் உள்ளிட்ட நால்வர் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது.
தஞ்சையில் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைவேலுவிடம் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவியின் பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து சிபிஐக்கு மாற்றி ஆணையிடப்பட்டுள்ளது.