தமிழ்த்தாய் வாழ்த்து எந்தவொரு விழாவிலும் இசைக்கப்படும்போது எழுந்த நிற்பது ஒரு மரபு, தேசிய கீதத்திற்கும், கடவுள் வாழ்த்துக்கும் இதே மரபு பொருந்தும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்தபோது, காஞ்சி சங்கராச்சாரியார் எழுந்து நிற்காதது ஒரு சர்ச்சை ஆனது. அப்போது அவர் தியானத்தில் இருந்தார் என்று பிறகு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கப்பட்டது.
தற்போது குடியரசு தினத்தன்று சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, எழுந்து நிற்காததைப் பார்த்து செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
உடனே நீதிமன்றத்தில் எழுந்து நிற்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று வாதாடியிருக்கிறார்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள். ஊடகங்கள் காமிராவை இயக்கிக் கொண்டிருக்க இவை எல்லாம் நடந்திருக்கின்றன.
அதனால் ஊடகங்களில் அவை வெளிவர சிலர் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். சிலர் நீதிமன்றத்திற்கும், காவல்நிலையத்திற்கும் சென்றிருக்கிறார்கள்.
பிறகு சாவகாசமாக யோசித்து நிதானித்து தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்க வேண்டும் என்கிற மரபை உணர்ந்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்து ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் வசிக்கும், தமிழ் பேசத்தெரிந்த தமிழ் அதிகாரிகளுக்கு தமிழகத்தில் இருக்கும் இந்த மரபு கூடத் தெரியாதா?
அவர்களுடைய வங்கிக்குள் அவர்களுடைய இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, யாரும் வந்தால் அவர்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் கொடியேற்றி அவர்களுடைய அலுவலக வளாகத்திலேயே நடக்கும் விழாவில் எழுந்து நிற்க மறுத்து அதை நியாயப்படுத்துவது நியாயமாகத் தெரியவில்லையே.
தேசிய கீதம் இசைக்கப்படும்போதும், இப்படியே நடந்து கொள்வார்களா?
மாற்றுக் கருத்துக் கொண்ட தலைவர்கள் கூட ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போது, அங்கிருக்கும் மரபைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கைக்கு எதிராக வாழ்நாள் எல்லாம் முழங்கி வந்த பெரியார் கூட அவர் கலந்து கொண்ட சில விழாக்களில் கடவுள் வாழ்த்து இசைக்கப்பப்பட்டபோது, முதுமையிலும் எழுந்து நின்று மரியாதை காட்டியிருக்கிறார்.
ஒரு விழாவில் திருநீறு பூசப்பட்டபோதும் அதை அந்த மரபு கருதியே அதை அழிக்காமல் மதிப்புத் தந்திருக்கிறார்.
இவை எல்லாம் நமக்கு முன்னிருக்கிற மதிப்பான அனுபவங்கள்.
ஒரே நாளில் சட்டென்று பண மதிப்பிழப்பை அறிவித்து ரிசர்வ் வங்கி அமல்படுத்திய போது, அதற்குக் கட்டுப்பட்டு எத்தனை பேர் வரிசையில் நின்று உயிரிழந்த அனுபவங்களை எல்லாம் அண்மையில் பார்த்திருக்கிறோம்.
மக்கள் அவர்களுடைய நடவடிக்கைக்கு மதிப்புக் கொடுத்து அடிபணிய வேண்டும்.
ஆனால், அதில் பணியாற்றும் அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் சில நிமிட நேரத்திற்கு எழுந்து நிற்க யோசித்து விவாதம் செய்வார்கள்.
அதிகாரிகள் மக்களுக்கான சேவகர்கள் என்கிற போது, இதைப் போய் வீணே சர்ச்சையாக்கி இருக்க வேண்டுமா?
– யூகி