– உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, போட்டியாளர்கள், ஆட்சியர், அமைச்சர் என ஒரே இடத்தில் பலர் கூடினர்.
சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை. தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. வைரஸ் பரவல் அதிகரிப்பதால், ஒரு இடத்தில் 10 பேருக்கு மேல் கூட்டம் சேர அனுமதிக்கக் கூடாது” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் விதிக்கப்பட்டதாக கூறப்படும் நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதாக மனுதாரர் தெரிவித்தார்.
அதன்பின் நீதிபதிகள் “நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றால், அவமதிப்பு வழக்கு தொடரலாம். எதற்காக, மீண்டும் வழக்கு தொடர்கிறீர்கள்?
விளம்பரத்துக்காக வழக்கு போடுகிறீர்களா? முறையாக ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அபராதம் விதித்து தள்ளுபடி செய்யப் போகிறோம்” என்றனர்.
அதன்பின், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகக் கூறியதைத் தொடர்ந்து, மனுவை முதல் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
நீர் நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறித்து கேள்வி எழுப்பி, கே.கே.ரமேஷ் தொடர்ந்த மற்றொரு வழக்கும், முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே நீர் நிலை தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், “எதற்காக மீண்டும் மீண்டும் வழக்கு தொடர்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியதையடுத்து, இனிமேல் பொதுநல வழக்கு தொடர தடை விதிக்கப் போவதாக எச்சரித்தனர்.
இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியதால், மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு தாக்கல் செய்யும் போது கவனமுடன் இருக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.