கல்லூரிப் பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடைபெறும்!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“கல்லூரித் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறாது என முன்பு கூறியிருந்தோம். ஆனால், தற்போதைய சூழலில் நேரடியாக நடத்த வேண்டுமானால் நாட்கள் தள்ளிப்போகும் என்பதால் ஆன்லைன் மூலம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளோம்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும்.

பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர், கொரோனா சூழலைப் பொறுத்து சுகாதாரத்துறை அறிவுரையின்படி நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வு சுழற்சி முறையில் கட்டாயம் நேரடியாக மட்டுமே நடைபெறும்.

ஆன்லைன் தேர்வில் முறைக்கேடு நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.” என்று கூறிய அமைச்சர் பொன்முடி, பாடத்திட்டங்கள் புதுப்பிக்கும் பணி கல்வியாளர்களின் அறிவுரையின்படி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

You might also like