பெரிய கோயில் கடைநிலை ஊழியர்களுக்கு பாலிசி!

– கோவை தொழிலதிபரின் பெரிய மனசு

தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் பயன்பெறும் நோக்கில் கோவை தொழிலதிபர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதுபற்றி பேஸ்புக்கில் மாரிராஜன் என்பவர் எழுதிய நெகிழ்ச்சியான பதிவு தாய் இணையதள வாசகர்களுக்காக…

இவர் ஒரு சீரிய சிவபக்தர். தஞ்சைப் பெரிய கோவிலின் மிகப்பெரும் ரசிகர். ராஜராஜன் மீது அளவு கடந்த அபிமானம். இவருக்கு எல்லாமே பெருவுடையார்தான். பெரியகோவில் குடமுழுக்கு நிகழ்வில் பங்கெடுத்தவர். பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்ய அரிசி வழங்கினார்.

தீபாவளி அன்று பெரிய கோவிலில் உள்ள அனைத்து இறை உருவங்களுக்கும் புத்தாடை அணிவித்து அழகு பார்த்தார். தட்சிணமேறு படிமத்திற்குப் பிரம்மாண்ட பூமாலை சாத்தினார். பேரரசர் பிறந்தநாளான சதயத்திருநாளில் அன்னதானம் செய்தார்.

இன்னும் பல செயல்கள். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் சிறப்பான ஒரு செயலை இவ்வருட புத்தாண்டு அன்று பெரியகோவிலில் நிகழ்த்தினார்.

பெரியகோவிலில் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம்தான். கோவிலைச் சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது அவர்களது பிரதான வேலை.

ஆனால், அவர்களின் நிரந்தர வாழ்வாதாரம்? தான் நேசிக்கும் பெருங்கோவிலை தூய்மையாக வைத்திருக்கும் இவர்களுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார் அந்த ராஜராஜனின் ரசிகர்.

ஊழியர்கள் ஐந்துபேர். அவர்களின் பணிநிறைவு காலத்தில் அவர்களுக்குக் கணிசமான ஒரு தொகை கிடைக்க வேண்டும். ஐந்து பேர்களுக்கும் ஒரு காப்பீடு பாலிசி ஒன்றை எடுத்தார். மொத்த பிரீமியத்தையும் ஒரே தவணையில் அவரே செலுத்தினார். பிரீமியம் தொகை.1,36,000 ரூபாய்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஒவ்வொருவருக்கும் கணிசமான ஒரு தொகை கிடைப்பதை உறுதி செய்தார்.

இவ்வருட ஜனவரி 1 புத்தாண்டு அன்று பாலிசி பத்திரங்களை பெருவுடையார் பாதத்தில் வைத்து அந்த ஐந்து பேருக்கும் வழங்கினார்.

பத்திரங்களைக் கொடுக்கும்போது அவர்களிடம் கூறியது, “கோவிலை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” அவர்கள் கண்களில் கண்ணீர்த் துளிகள். ஆமோதித்தனர்.

இந்த செயற்கரியச் செயலுக்குச் சொந்தக்காரர். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீகுமார்.

பா.மகிழ்மதி

13.01.2022 10 : 50 A.M

You might also like