இனி வருவது எல்லாம் நல்ல காலம் தான்!

 ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் – பகுதி 7

‘தாய்’ வார இதழில் நம்புங்கள் நாராயணன் என்ற ஒரு பகுதி மிகவும் பிரபலமாக அந்தக் காலத்தில் இருந்தது.

திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த பத்திரிகைகளில் இப்படி நம்பிக்கை சார்ந்த ஜோசியம் சார்ந்த பகுதிகள் வருவது என்பது பகுத்தறிவும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட வாசகர்களிடையே மிகப்பெரிய கவலையையும் அச்சத்தையும் எழுப்பியது.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வலம்புரிஜான் அவர்கள் அந்த பகுதிக்கு முக்கியம் கொடுத்து வெளியிட்டிருந்தார்கள்.

தாய் இதழில் 3 பக்கம் அந்த ஜோசியப் பகுதி வரும்.

எல்லா ராசிகளுக்கும் ஒரு வாரத்திற்கு என்ன நடக்கப் போகிறது என்று முன்கூட்டியே அவர் எழுதியிருந்தார்.

‘நம்புங்கள் நாராயணன்‘ என்ற பகுதி மக்களால் குறிப்பாக பெண்களால் வரவேற்கப்பட்டது.

சொன்னதெல்லாம் நடக்கிறது என்று சொல்லி நிறைய வாசகர் கடிதம் எல்லாம் அப்போது வந்தது.

வலம்புரி ஜான் அவர்கள் ஏன் நாராயணனை நம்புங்கள் நாராயணன் என்று தலைப்பிட்டு அந்த பகுதியை வெளியிட்டார் என்பதற்கு ஒரு சுவாரசியமான ஒரு கதையும் இருக்கிறது.

நாராயண அய்யர் என்பவர் ராமநாதபுரத்தில் பிறந்தவர். அப்போது அவர் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

நாராயணன் அவர்கள் ‘அலை ஓசை’ நாளிதழில் 1980 பிப்ரவரி 7 ஆம் தேதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உடைய ஆட்சி கவிழும் என்று ஜோசியம் கணித்து வெளியிட்டார்.

அதேபோல் அவருடைய அமைச்சரவை கலைக்கப்பட்டது.

இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் நாராயணனை தோட்டத்திற்கு அழைத்து எப்படி நீங்கள் முன்கூட்டியே கணித்தீர்கள் என்று கேட்டார்.

நாராயணன் அவர்கள் எண் கணித ஜோதிடத்தில் மிகவும் ஆய்வு செய்து இன்று இந்த காரணத்தினால் இந்த ஆட்சி கவிழும் என்று கணித்து எழுதினேன் என்று சொன்னார்.
எம்.ஜி.ஆர். அசந்து போனார்.

இந்தச் சம்பவம் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களை நெகிழ வைத்தது.

அந்த வியப்பும், எண்ணமும் தான் ‘நம்புங்கள் நாராயணன்‘ என்று தலைப்பிட்டு தாய் வார இதழில் மூன்று பக்கம் ஒதுக்கி தொடர்ந்து அவரை எழுத வைத்தார்.

அந்த எழுத்துக்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

அவர் சொல்வது நடக்கிறது என்று வாசகர்கள் பெரும்பாலும் நம்பி கடிதங்கள் எழுத ஆரம்பித்தனர்.

வலம்புரி ஜான் அவர்களுக்கு ஜோசியத்தின் மிகப்பெரிய பரிச்சயமும் ஆர்வமும் உண்டு.
அதில் ஆய்வு செய்திருக்கிறார்.

நாராயணன் குடும்பத்தை ஆச்சரியமாக பார்க்க வைக்க இன்னொரு சம்பவம் இருக்கிறது.

அவருடைய தந்தை ராமகிருஷ்ண அய்யர் இராமநாதபுரம் சுவார்ட்ஸ் ஸ்கூலில்
கணித ஆசிரியர். அப்துல் கலாம் இவரிடம் பயின்றவர்தான்.

ராமகிருஷ்ணரின் கணித அறிவைப் பற்றியும் என் கணித ஜோதிடம் பற்றியும் பின்னாளில் தன்னுடைய நூலில் அப்துல்கலாம் குறிப்பிட்டிருந்தார்.

‘நம்புங்கள் நாராயணன்’ பகுதி பிரபலமான பிறகு பிரபலங்களுக்கு ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்.

இந்தியாவைத் தாண்டி அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இவர் தான் வெற்றி பெறுவார் என்று சொல்லி நிகழ்ந்த சம்பவங்களும் உண்டு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

வலம்புரி ஜான் அவர்கள் நாராயணனை அலுவலகத்திற்கு அழைத்து பலசமயம் விவாதித்தும் அவரிடம் கற்றுக் கொண்ட சம்பவங்களும் இருக்கிறது.

நம்புங்கள் நாராயணன் கடைசி நேரத்தில்தான் வரும். அது முதலில் வலம்புரிஜான் அவர்களுக்கு செல்லும். அவர் பார்த்து திருப்தியுடன் கையெழுத்து போட்ட பிறகு சகாயம் அவர்களுக்கு சேர்ந்துவிடும்.

சகாயத்திற்கு அந்தப் பகுதி வரும் போது மட்டும் ஏதோ இரண்டு கொம்பு முளைத்து விட்டது போலவும் ஆகாயத்தில் பறக்கிற சக்தி வந்துவிட்டது போலவும் சுறுசுறுப்பாக ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு நபரிடம் கொடுத்து கம்போசிங் செய்ய வைப்பார்.

நாராயணன்

சுறுசுறுப்பாக இருப்பார். யாரிடமும் பேசமாட்டார். அந்தப் பகுதியைப் பிரித்தெடுத்து அதை அச்சுக்கு ஏற்றுவது அவரை அலுவலகம் பரபரப்பாகி விடும்.

அதற்குக் காரணம் தமிழகம் தாண்டிய வாசகர்களால் அது நம்பப்பட்டதும். இதில் எழுதுவது அப்படியே நடக்கிறது என்ற கருத்து பொதுவெளியில் இருந்தது தான்.

அது தொடர்ந்து 10 ஆண்டுகள் வெளிவந்தது.

நாராயணன் அவர்களை ‘தாய்’ அலுவலகத்திற்கு அடிக்கடி வரவழைத்து வலம்புரிஜான் அவர்கள் விவாதம் செய்வதும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதும் பின்னாளில் அவரே ‘என் கணித ஜோதிடம்’ சொல்வதற்கு தொடக்கமாக அமைந்தது என்று சொல்லலாம்.

நாராயணன் பார்ப்பதற்கு எளிமையாக தான் இருப்பார். அவருக்கு ஒரு பழக்கம் உண்டு.
தபால்தலைகளை சேர்த்து வைத்திருப்பார்.

எல்லா வெளிநாட்டு பணத்தையும் சேர்த்து வைத்துக்கொண்டு அழகு பார்ப்பார். சேகரிப்பில் விருப்பம் அவருக்கு உண்டு.

நாராயணனைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லுவார்கள். அமெரிக்க அதிபர் இவர் தான் வருவார் என்று சொன்னதும் நடந்திருக்கிறது.

தமிழகத்தில் இவர் ஆட்சிக்கு வருவார் என்று சொன்னதும் நடந்திருக்கிறது.

இன்னும் பல பிரபலங்களுக்கு முன்கூட்டியே சொன்னதும் நடந்திருக்கிறது என்று சொல்வார்கள்.

இளம் வயதில் அவருக்கு ஒரு பிரச்சனையில் ஆபரேஷன் செய்ய வந்த டாக்டரையே “நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்” என்று என்னிடம் சொன்னபோது,

“நீங்கள் இன்று இரவு 2 மணிக்கு இறந்து விடுவீர்கள். எப்படி எனக்கு ஆபரேஷன் செய்வீர்கள்” என்று கேட்டு ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

அதேபோல் அவர் இறந்துவிட்ட நிகழ்வையும் அவரே வியந்து சொல்லியிருக்கிறார்.

ஒரு பக்கம் புதிய புதிய படைப்பாளிகளை வளர்த்து விடுவதும் சமூக, கலாச்சார, அரசியல் குறித்த பேட்டிகள் ஒருபக்கம் புதுமையாக எடுப்பதும், அதோடு பெருவாரியான மக்களிடம் இருந்த  ஜோசியம் குறித்த கருத்துக்களும் சேர்ந்துகொள்ள தாய் வார இதழ் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது.

இதன் விளைவு ஆசிரியர் வெளியூருக்குச் செல்லும் போது இப்படியான எண்ணம் கொண்டவர்கள் தாய் இதழில் புகுந்து விளம்பரமாக வெளியே வந்துவிடுவார்கள்.

அப்படித்தான் திருச்சியில் சிவசங்கரி என்கிற பெண்மணி, அடிக்கடி ஜோசியம் சொல்லி இதில் எழுதுகிற நிகழ்வும் கூடியிருக்கிறது.

இவர் எப்படி உள்ளே வந்தார் என்றால், தாய் இதழைத் தொடர்ந்து படித்து, வாசகர் கடிதம் எழுதி வலம்புரிஜான் மனதில் நிலைகொண்டிருந்த காலிங்கராயன் மணப்பாறையில் இருந்தவர்.
அவருடைய துணைவியார் தான் திருச்சி சிவசங்கரி.

தாய் வார இதழ் திராவிடச் சிந்தனையுடைய எம்.ஜி.ஆருடைய பத்திரிகை என்றாலும், முதல் இதழ் எந்தப் படம் தாங்கிக் கொண்டு வந்தது தெரியுமா?

தாய் மூகாம்பிகை அட்டைப்படம் தான்.

அதுமட்டுமல்ல வலம்புரிஜான் ஒரு கிறித்துவர். ஆனாலும் கூட, பலரையும் சந்திப்பதுண்டு.

காஞ்சி பெரியவர் சந்திரசேகரர் ஒருமுறை காஞ்சிபுரத்திலிருந்து காசி வரை யாத்திரை சென்றார்.

அப்போது ஒரு ஏழெட்டு இடங்களில் அவரைச் சந்தித்து அவருடன் நடந்து சென்ற அனுபவங்களை அதில் பதிந்து வைத்திருக்கிறார்.

அந்த நிகழ்வுகளின் சாராம்சமாக தான் சொர்க்கத்தில் ஒருநாள் என்ற தொடரை அவர் எழுதினார்.

அந்தப் பெரியவர் ஒரு மகான் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் சாதாரணமாக அன்பு நேயத்தோடு சென்றார் என்பது சொர்க்கத்தில் ஒரு நாளில் படித்தவர்களுக்கு புரிபடும்.

அப்படி ஒருமுறை வலம்புரிஜான் அவர்களோடு குல்பர்கா வரை சென்ற அனுபவத்தைச் சொல்கிறார் தாய் பிரபு.

வலம்புரி ஜான் அவர்கள் இளம் வயதிலேயே பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். மறுபடியும் எம்.ஜி.ஆரால் எம்.எல்.சி.யாகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

பேரறிஞர் அண்ணாவைப் போல் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் அவர்களும் அடுக்கு மொழிகளில் வாடுவதில் வல்லவர்.

பாராளுமன்றத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அடுக்கு மொழியில் பேசியது, பாராளுமன்ற குறிப்பேடுகளில் பதிந்திருக்கிறது

வருடத்தின் துவக்க நாள், தீபாவளி, பொங்கல் என நல்ல நாட்களில் கார் எடுத்துக்கொண்டு தாய் முகாம்பிகையைப் பார்க்க சென்று விடுவார்.

இப்பொழுது நிறைய வசதி இருக்கிறது. தங்குமிடங்கள், நல்ல உணவு வகைகள் இருக்கின்றன. ஆனால், அப்போது அப்படி வசதி இல்லை.

அந்த சமயத்தில் மூகாம்பிகை கோயிலில் இருந்த கணேஷ் என்பவர் வலம்புரிஜான் அவர்களை மரியாதையோடு பார்த்துக்கொள்வார்.

காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரரின் பயணங்கள் குறித்த ‘சொர்க்கத்தில் ஒரு நாள்’ தொடர் தாய் இதழில் வெளிவந்தது. இது தான் பின்னாளில் புத்தகமாக வந்தது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அடிக்கடி மூகாம்பிகை கோயிலுக்குச் செல்வார்.
அதேபோல் வலம்புரிஜான் சென்று வந்த அனுபவங்களை ‘அந்தக இரவில் சந்தன மின்னல்’ என்ற தொடரை எழுதினார். பின்னாளில் அதே தலைப்பில் அது புத்தகமாகவும் வந்தது.

அந்தகன் என்கிற சொல் புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய சொல்லாட்சி. அந்தகம் என்றால் கும்மிருட்டு. அழகான, அடர்த்தியான இருள் பொருள். (‘கும்மிருட்டு’ என்ற தலைப்பில் நானும் ஒரு கவிதை நூல் எழுதி இருக்கிறேன்.) சந்தன மின்னல் என்றால் கொல்லூர் சுவாமிகளின் தலையின் பின்னால் ஒரு மின்னல் கீற்று போல் ஒளி.

இது மிகப் பிரபலமான தொடராக வந்து பின்னாளில் புத்தகமாக வந்தது.

அதுமட்டுமல்ல ஆண்டாளுடைய திருப்பாவை பற்றியும் அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி இருக்கிறார். அதுவும் எல்லோராலும் கவனிக்கப்பட்டது.

ஏன் இப்படி இந்து மதம் சார்ந்த கொள்கைகளில் விருப்பம் அதிகமாக இருந்தது என்று அவரை பலர் கேட்கிறபோது அவர் சொன்னார்.

“மதமல்ல முக்கியம், அறநெறிப் பார்வையும் மனிதப் பொதுமறையும் எங்கெல்லாம் இருக்கிறதோ அதை உள்வாங்கிக் கொண்டு பயணிக்க வேண்டும். அந்த வகையில் நான் பொதுவெளியில் ஒரு மனிதனாக இருந்து எல்லாவற்றையும் பொதுப்படையாகப் பார்க்கிறேன்” என்று தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

பிற்பாடு, இளையராஜா அவர்கள் அதிகமாக கொல்லூர் மூகாம்பிகா கோயிலுக்குச் சென்றார்.
அதன்பிறகு நடிகர் தியாகராஜன் எனப் பலரும் செல்லத் துவங்கினார்கள்.

ஜோசியம் குறித்து சொல்லுகிறபோது வலம்புரி ஜான் கிளி ஜோசியம் பார்க்கிறவனைப் பற்றி அதிகமாக மேடைகளில் பேசியதையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

கிளி ஜோசியக்காரன் மட்டும் தான் வாழ்க்கையில் நீ முன்னேறுவாய்; நல்லபடி வருவாய்; உனக்கு நல்ல நேரம் இருக்கிறது என்று திடமாக மற்றவனுக்குச் சொல்கிறான். மற்ற எல்லோரும் அவநம்பிக்கையை விதைக்கிறார்கள்.

அவனை மூட நம்பிக்கைக்காரன் என்று விமர்சிக்கிறோம். ஆனால், அவன் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு எதிரில் இருப்பவரை, “உனக்கு கஷ்ட காலம் நீங்கிவிட்டது. இனி வருவது நல்ல காலம்.” என்ற நம்பிக்கையைத் தருகிறானே அந்த நம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை.

அதை கிளி ஜோசியக்காரன் தருகிறான். எனவேதான் அவனை உயர்ந்தவன் என்று சொல்கிறேன் என்பார்.

வலம்புரிஜானை விமர்சிப்பவர்கள் ஏராளம். ஆனால், ஒருமுறை அவரைச் சந்தித்து விட்டால் சின்ன திறமை இருப்பினும் அவர்களை உயர்ந்த புகழ் வெளிச்சத்திற்கு வரக்கூடிய அளவிற்கு தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார். பாராட்டி அனுப்புவார்.

அப்படி ஒரு சம்பவத்தை அடுத்து சொல்கிறேன்.

(தொடரும்)

You might also like