சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன செய்வோம்? சாதாரண நபர்களாக இருந்தால் அதை கடந்து வருவோம். அதுவே அரசியல் கட்சிகளாய் இருந்தால் கண்டித்து போராட்டம் நடத்தும். அவ்வளவுதான்.
ஆனால், கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி அப்படியில்ல. தொடர்ந்து சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதை பார்த்து வெறுத்துப் போனவர், ஒருகட்டத்தில் காலன்குழி என்கிற ஹேஷ்டேக்கை தன்னுடைய முகநூல் பக்கத்தில் உருவாக்கி உலகறிய செய்துவிட்டார்.
கொச்சியில் விளம்பரத்துறை கன்சல்டன்ட்டாக பணியாற்றும் ஜெய்சன் ஆண்டனி ஆரம்பத்தில் குண்டும் குழியுமான சாலைகளை புகைப்படம் எடுத்தும், ஆபத்தானவற்றை வீடியோவாக பதிவு செய்தும் தன் வலைப்பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், தெரிந்தவர்களும் இதற்கு கமெண்ட் இட்டனர்.
ஆனால் சில சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர், தான் எடுத்த குண்டும் குழியுமான சாலைகளின் புகைப்படங்களில் போட்டோஷாப் மூலம் எமதர்மன் உருவத்தை வரைந்து காலன்குழி அதாவது மரணக்குழி என்பதாக உருவகப்படுத்தினார்.
இது பலரின் பார்வைச் செல்ல கொச்சியின் ‘ஹாட் டாபிக்’ ஆகிவிட்டார் ஜெய்சன்.
இதை எந்ததொரு சலசலப்புக்காகவும் செய்யவில்லை எனும் ஜெய்சன், ‘‘இந்த ஐடியா என் மனதில் இரண்டு ஆண்டுகளாக இருந்ததுதான். நானே பல்வேறு பிராண்ட்டுகளுக்கு விளம்பரம் செய்திருக்கிறேன். இப்போது முதல்முறையாக பொதுமக்களின் நன்மை கருதி செய்துள்ளேன்’’ என்கிறார்.
தனக்கு நேர்ந்த இரண்டு சம்பவங்கள்தான் இந்த பிரச்சாரத்தை வேகமெடுக்கச் செய்ததாகக் குறிப்பிடும் அவர், அதனை விவரித்தார். முதல் சம்பவம் அவரும், அவர் மனைவி ஷைமோலும் சாலை குழியால் விபத்து ஒன்றை சந்தித்தது.
‘‘தெரியாமல் சாலையின் பள்ளத்தில் பைக் இறங்கியதால் என் கட்டுப்பாட்டை இழந்து நாங்கள் கீழே விழுந்துவிட்டோம். இரண்டு பேருமே லேசான காயத்துடன் தப்பினோம். அப்போது எனக்குக் கோபம் தலைக்கேறியது.
என்ன செய்வதென்றும் தெரியவில்லை் அந்த இடத்தில் மரக்கிளைகளோ, புதர்ச்செடிகளோ வைத்து சுட்டிக்காட்டியிருந்தால் அந்த விபத்து நடந்திருக்காது. உடனே, நான் அந்த வேலையைச் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
இரண்டாவது, பாலரிவட்டம் பகுதியில் ஒரு குழியை நான் அடிக்கடி கடந்துசெல்வேன். அதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென பலநாட்கள் நினைத்திருந்தேன். ஒருநாள் அதில் ஒரு தம்பதியினர் சிக்கிக் கீழே விழுந்துள்ளனர்.
அதிலொருவர் இறந்துபோனார் என்கிற செய்தியை கேட்டதும் எனக்கு மிகுந்த வேதனையானது.
அதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு செய்திருந்தால் வாகன ஓட்டிகள் கொஞ்சம் கவனமாக இருந்திருப்பார்கள் எனத் தோன்றியது.
உடனடியாக, இந்த காலன்குழி ஹேஷ்டேக்கை உருவாக்கி விட்டேன்’’ என்கிறார் ஜெய்சன்.
இந்தப் பிரச்சாரத்தில் ஜெய்சனின் நண்பர்களும் பங்கு கொள்கின்றனர்.
‘‘நான் இதை எந்த அரசியல் கட்சியையும் எதிர்த்தோ, அரசை விமர்சித்தோ செய்யவில்லை. ஒருமாற்றம் நடக்க வேண்டியே செய்கிறேன்’’ என்கிறார் ஜெய்சன் ஆண்டனி.
– சாய்