பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!

குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது தவிர, விரைவில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன.

குடியரசு தின விழாவிலும், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அரசியல் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர் தங்கும் முகாம்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவை பயங்கரவாதிகளின் குறியாக இருக்கலாம் என உளவு அமைப்புகள், மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன.

இதையடுத்து குடியரசு தின விழா மற்றும் தேர்தல் நடக்கும் மாநில அரசுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில், உயர் மட்ட அரசியல் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர் தங்கும் முகாம்கள், பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் மிக முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நிலை பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து பயங்கரவாத தடுப்பு பயிற்சிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, மூத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் மையங்கள், உளவு அமைப்புகளுடன், 24 மணி நேரம் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வசதி செய்யும்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையம் போன்ற இடங்களில் தாக்குதல் முயற்சி நடக்கும்பட்சத்தில் அதை சமாளிக்க, அதிரடியாக செயல்படும் திறன் உள்ள படையினரை தயார் நிலையில் நிறுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like