– இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை
இந்தியாவில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,007 பேரிடம் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பும் உச்சம் அடைந்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த ஐசிஎம்ஆர் விஞ்ஞானி சாமிரான் பன்டா, “டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும் கூட முற்றிலுமாகவே இந்த வைரஸை மிதமானது என்று வகைப்படுத்திவிடக் கூடாது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் ஒமிக்ரான் வைரஸ் டெல்டாவை ஒப்பிடும்போது சற்றே மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், இதற்கு முந்தைய திரிபுகளைப் போல் ஒமிக்ரானாலும் மக்கள் அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதி பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
ஆனால், அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள் சில வாரங்களில் குறையத் தொடங்கும். அடுத்த 3 மாதங்களில் பாதிப்பு வெகுவாகக் குறையும். 3 மாதங்களில் கொரோனா வைரஸின் வீரியம் குறையும்.
ஒமிக்ரான் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டிய ஒமிக்ரான் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. அந்த நம்பிக்கையில் இவ்வாறு கணித்துள்ளோம்.
இருப்பினும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், இது வேகமாக பரவக்கூடியதாக இருக்கிறது. எனவே முகக்கவசம், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
நமது நாட்டில் அதிக மக்கள்தொகை உள்ளது. மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தாலும் அது மிகப்பெரிய எண்ணிக்கையாக இருக்கும்.
எனவே ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்னவென்றால் ஒமிக்ரான் லேசான தொற்று என்று எண்ணி முகக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது.
நாங்கள் நடத்திய ஆய்வின்போது ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்தினால் அது அடுத்த மாதங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஆனால் மூன்று மாதங்களில் அது வெகுவாகக் குறையும் என்றும் தெரியவந்துள்ளது.
எனவே, கூட்டமான இடங்களை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். முகக்கவசத்தை மறக்கக்கூடாது.
ஒமிக்ரான் வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக டாடா நிறுவனத்துடன் ஐசிஎம்ஆர் இணைந்து ஆர்டி-பிசிஆர் சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.
இதை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அங்கீகரித்துள்ளது. இந்த வகை சோதனைக் கருவிகள் மூலம் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பதை 4 மணி நேரத்தில் கண்டறிய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.