அன்றைய சோஷலிஸ்டுகள் எப்படி இருந்தார்கள்?

ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெ.பி.கிருபளானி ஆகியோர் தொடங்கிய பிரஜா சோசலிஸ்ட் கட்சி, பிஎஸ்பி (PSP) என்பார்கள். 1951ல் துவங்கப்பட்ட அரசியல் கட்சி. வடபுலத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினராகளாக இந்த கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த கட்சியின் சின்னம் குடிசை சின்னம்.

இந்தக் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ராம்மனோகர் லோகியா, இதிலிருந்து பிரிந்து 1955-ல் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியை (SSP) உருவாக்கினார். அதன் சார்பிலும் தமிழகத்தில் சில உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு சென்றார்கள். அதனுடைய சின்னம் ஆலமரம்.

தமிழகத்தில் பழைய சோஷலிஸ்டுகள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்துள்ளனர்.

எ.சுப்பிரமணியம், எம்.சுரேந்திரன், பட்டுக்கோட்டை எ.ஆர்.மாரிமுத்து ஆகியோர் இதற்கு உதாரணம். எ.ஆர்.மாரிமுத்து பிற்காலத்தில் காங்கிரசில் இணைந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தார்.

இவர்களெல்லாம் ஜே.பி தலைமையிலான பிரஜா சோசலிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள். அதேபோல், சட்ட மேலவை உறுப்பினராக இருந்த பூதலூர் ஆறுமுகமும் இந்தக் கட்சியில் இருந்தவர் தான். என் மீது பாசம் கொண்டவர். இஸ்கஸ் என்ற அமைப்பில் இருந்த அவரோடும் என்.டி.சுந்தரவடிவேல், என்.டி.வானமாமலை அவர்களோடும் பணியாற்றிய காலங்கள் உண்டு.

அன்பு வேதாச்சலம் பார்வர்ட் பிளாக் கட்சியில் பங்காற்றிய முன்னாள் தமிழக சட்ட மேலவை உறுப்பினர்.  தலைவர் கலைஞர் அமைத்த முதல் டெசோவின் உறுப்பினர்.

மதுரை அய்யன் அம்பலம், சோலை இருசன், மதுரை ராமர், ஹெச்.எம்.எஸ் என்ற தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமையா போன்றவர்களெல்லாம் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள்.

அது மட்டுமல்ல, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேந்திரன், எ.ஆர்.மாரிமுத்து பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து பி.வேலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லடத்தில் இருந்து கே.குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்றைக்கு இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கும் போதும், காவேரி பிரச்சனைகளின்போதும் சோஷலிஸ்டுகள் சட்டமன்றத்தில் கடுமையாக வாதிட்டனர். ஈரோடு ஆர்.நல்லசிவன், சின்னத்துரை உள்ளிட்டோர் அதற்கு சான்று. 

சின்னத்துரையும் நல்லசிவமும் லோகியோவுடைய ஆதரவாளர்களாக எஸ்எஸ்பி கட்சியில் இருந்ததாக நினைவு. பெருந்துறை பாலசுப்ரமணியனும் லோகியோ தலைமையிலான சம்யுக்த சோசியலிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்தார்.

சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த பலர் பிற்காலத்தில் காங்கிரசில் இணைந்து கொண்டார்கள்.

1967-ல் அண்ணா ஆட்சி அமைக்கும்போது மாபெரும் கூட்டணி அமைத்தார். ராஜாஜியும் அந்த கூட்டணியில் இருந்தார்.

அப்போது ஒரு முறை கழுதை மேல் 7 கட்சி கூட்டணி என்று ஒரு கார்ட்டூன் வந்தபோது அதில் சோஷலிஸ்டு கழுதைகளெல்லாம் ஏற்றிக் கொண்டுள்ளது என்று சொன்னபோது அதற்கு ராஜாஜி சொன்னார், “அந்தக் கழுதை மெதுவாக நகர்ந்து சென்னையிலுள்ள கோட்டையை அடைந்துவிடும், கவலைப்பட ஒன்றுமில்லை” என்று வேடிக்கையாகச் சொன்னார்.

அன்றைக்கு தமிழகத்தைப் பொறுத்தவரை பிஎஸ்பி, எஸ்எஸ்பி என்று அழைக்காமல்  சோசியலிஸ்ட்கள் என்றே அண்ணா அழைத்தார். 1969ல் கிட்டத்தட்ட ஏழு உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள். பல பிரச்சினைகளை கையில் எடுத்து சட்டமன்றத்தில் அறிவுப்பூர்வமாக பேசியதெல்லாம் மறுக்கமுடியாது.

இன்றைய இளைஞர்களுக்கு சோசலிஸ்ட் கட்சி என்ற ஒன்று இருந்ததா, அது என்ன பகதூர் சோசியலிஸ்ட் கட்சியா என்று வேடிக்கையாக கேட்பதுண்டு.

எஸ்எஸ்பி, பிஎஸ்பி ஜேபி, நரேந்திரதேவ் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதேபோல ராம் மனோகர் லோகியா அமைத்த எஸ்எஸ்பி பற்றியும் தெரியவில்லை. இதுதான் இன்றைய தமிழக அரசியலின் புரிதலின் தன்மை.

அரசியல் என்பது கடந்தகால வரலாறு. கடந்த கால அரசியலில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் புரிந்து கொண்டால் தானே இன்றைக்கு அரசியலில் என்ன என்று தெரிந்துகொள்ள முடியும்.

இன்று தான் தமிழக அரசியல் தோன்றியது போல, இன்றைக்குள்ள சூழல்தான் என்று பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் எப்படி இருக்க முடியும். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டு அதன் தொடர்ச்சி தானே இன்றைய அரசியல் என்ற புரிதல் இல்லாமல் பலரும் இருக்கின்றனர்.

சோஷலிஸ்டுகள் 1960 மற்றும் 70 களில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றினார்கள். தன்னலமற்று மிகவும் எளிமையாக அவர்கள் அன்று கம்யூனிஸ்டுகள் போல வாழ்ந்தார்கள். எவ்வளவு பெரிய தொழிற்சங்கவாதிகள் இந்த சோசியலிஸ்ட்கள்.

ஏ.சுப்பிரமணியம், ஹெச்.எம்.எஸ் ராமையா போன்ற சோஷலிஸ்ட் தொழிற்சங்க தலைவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தமிழகத்தில் தொழிற்சங்கங்களை வளர்த்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் பட்டம் தானுப்பிள்ளை முதல்வராக, இவர்களின் ஆட்சியும் அமைந்தது. மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிபோகக்கூடாது என்று சோஷலிஸ்டுகள் வாதாடினார்கள். 356 யை கொண்டு மத்திய அரசு விரும்பியவாறு மாநில அரசுகளை கலைக்கக் கூடாது என்று பேசியவர்கள்.

இந்த வரலாறை நாம் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லாதது யாருடைய பிழை? இந்தப் பிழைகள் தான் நமக்கு காட்சி பிழைகளாகவும்… இடமாற்று பிழைகளாகவும் அமைந்து, புரிதல் இல்லாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இன்றைக்கு உள்ள அரசியலை மட்டுமல்ல, கடந்த கால அரசியலை அறிந்து கொண்டால்தான் இன்றைக்குள்ள அரசியலுக்கான புரிதல் வரும்.

கடந்தகால அரசியல் வரலாறு நமக்கு எதற்கென்றால் நீங்கள் அரசியலுக்கு லாக்கற்றவர்கள் என்பேன்.

அரசியலில் வருவோர்க்கெல்லாம் வரலாறு தெரிய வேண்டும், பொருளாதாரம் தெரியவேண்டும், உலக நாட்டு அரசியல் தெரிய வேண்டும், உலக நாட்டு உறவுகள் தெரிய வேண்டும்.

அகில இந்திய அரசியலில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். இந்த புரிதல் இல்லாமல் அரசியல் வந்து என்ன செய்யப் போகிறீர்கள்?

எஸ்எஸ்பி, பிஎஸ்பி-யின் கொள்கைகளை படியுங்கள். அருமையான கொள்கைகள். திராவிட இயக்கத்திற்கு எப்படி கொள்கைகளை அண்ணா வகுத்தாரோ, அதேபோல சரிசமமாக அரசியலுக்கு ஏற்றவாறு, நேர்மையோடும் மக்களுக்கு ஏற்றவாறும், மக்கள் நல அரசியலை சோஷலிஸ்டுகள் வளர்த்தார்கள்.

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

06.01.2022 12 : 30 P.M

You might also like