சாகடிக்கப்பட்டவன் நினைவிலிருந்து…!

உனக்காகவே

விட்டுப் போகிறேன் இதை.

 

எனக்கு முன்பு

மூச்சுருவப்பட்டவர்கள்

சுவாசித்த காற்று

வழி தவறி அலைகிறது இன்னும்.

சாகும் முன்பு

அவர்களது குரல்களைத் தின்ற காற்று

உயிர்க்க வைத்தது

என்னை.

நாளை உன்னை.

பிறகு அவர்களை.

 

தகிக்கும் இம்மண் விட்டு

எங்கோ அனாதரவாய்ச் சொரியும்

மழையின் மேலுள்ள

மேகங்களின் திசைகளை

யார் கலைத்தெறிவது?

அந்தக் கனத்த

இயந்திரச் சத்தங்கள்

வந்து தாக்குகின்றன

என்னை; உன்னை; அவர்களை;

ஆனால் திருப்பியெழும்

அதிர்வு

என்னிடமிருந்து மட்டும் ஏன்?

 

வெப்பம்

கனத்த போர்வை போல

உணம்புகளை அனத்துகிறது.

புழுக்கம் எனது

கால்களில் துளிர் விடுகிறது.

உனக்கு மட்டுமேன் புழுக்கமில்லை?

 

குரல்களைப் பிறப்பிக்கும்

குரல்வளை எனக்கு

மட்டுந்தானா

உனக்கில்லையா நண்பா?

எந்தச் சந்தடியில்

உன் குரல்

தொலைந்து போனது?

 

தேசத்தின் வியர்த்த முகங்களின்

மீது வைத்த நேசத்திற்காகத் தான்

நடக்கின்றன

நரம்பழுத்துகிற சித்திரவதைகள்.

எந்த அடிகள்

இந்த உணர்வை

உறிஞ்சி எடுத்துவிடும்?

 

நைந்து போன

உடம்பிலிருந்து வழியும் குருதியோடு

அதுவும் வடிந்து விட்டதா?

இல்லை.

அதைத் தான்

இப்பொழுதில்

என்னிடமிருந்து உனக்கு;

நாளை உன்னிடமிருந்து அவர்களுக்கு.

— மணா.

‘இன்னொரு விழிப்பு’ – கவிதை தொகுப்பிலிருந்து ஒரு கவிதை

You might also like