தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுகிறதா?

திகிலூட்டும் மர்மப் படங்களைப் பார்க்கிற மாதிரித் தான் இருக்கிது, அண்மையில் தமிழகத்தில் நடந்திருக்கிற சில துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் பார்க்கும்போது.

சென்னை மற்றும் திண்டுக்கல்லில் துப்பாக்கிகளைப் பயன்படுத்திச் சில வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கோவை விமான நிலையத்திலிருந்து விமானத்தில் துப்பாக்கியைத் தோட்டாக்களோடு எடுத்துச் செல்ல முயன்ற அரசியல் கட்சிப்பிரமுகர் சோதனையின் போது சிக்கியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வடஇந்திய மாணவர்கள் மோதிக் கொண்டபோது, துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

துப்பாக்கிகள் இந்த அளவுக்குப் புழக்கத்தில் இருப்பதற்கு என்ன காரணம்?

பல ஆண்டுகளுக்கு முன்பு வட இந்திய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வருகிற இளைஞர்களை ரயிலில் சோதனையிட்ட போது, அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டபோது, அதிகாரிகளுக்கே வியப்பு.

விதவிதமான வடிவங்களில் அந்தத் துப்பாக்கிகள் – வட மாநிலத்தில் உள்ள சில கிராமங்களில் தயாரிக்கப்பட்டு மலிவான விலைக்கு விற்கப் பட்டிருக்கின்றன. முறையான லைசென்ஸ் இல்லாமல் தயாரிக்கப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்ட அவற்றை எந்த வன்முறையாளர்களும் தங்கள் விருப்பப்படி பயன்படுத்திவிட முடியும். சுலபமாகத் தப்பிவிடவும் முடியும்.

ஏற்கனவே இதன் தீவிரம் செய்திகளாகவும் இங்கு வெளிவந்திருக்கின்றன. தீரன் அதிகாரம்-1 போன்ற திரைப்படமாகவும் வெளி வந்திருக்கிறது.

இதற்கு என்ன செய்யலாம்?

துப்பாக்கிகள் விநியோகம் ஆவதற்கான ஊற்றுக்கண்ணை அடைப்பது தான் ஒரே வழி.

வட இந்தியாவில் இருந்து வந்திறங்கும் எல்லா இளைஞர்களையும் சந்தேகப்பட நாம் வலியுறுத்தவில்லை. அவர்களில் ஒரு சதவிகிதத்திற்குத் குறைவானவர்கள் செய்யும் செயல்களால் தான் அப்படியொரு மனநிலை பரவி விடுகிறது.

வட இந்தியாவில் இருந்து வரும் இளைஞர்கள் தங்களுடன் கொண்டு வரும் பொருட்கள் அடங்கிய லக்கேஜ்களை முறையாகத் தொடர்ந்து கண்காணித்தாலே துப்பாக்கிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவிட முடியும்.

முதலில் ஊற்றுக்கண்களை அடைப்போம்!

– அகில் அரவிந்தன்

05.01.2022 1 : 30 P.M

You might also like