கொரோனா பரவல் தடுப்புப் பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இனிமேல் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். இதன் மூலம் தமிழக அரசு ஞாயிறு அன்று முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகள் தொடர்பாக விரிவான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை (06.01.2022) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
05.01.2022 2 : 30 P.M