பொங்கல் தினமே தமிழர்களின் அடையாளம் காட்டும் திருவிழா தான்.
சர்க்கரை வாசனை பொங்கும் பொங்கல், மாக்கோலம், மஞ்சள் கிழங்கு, கரும்பு, கிராமங்களில் பெண்கள் எழுப்பும் குலவைச் சத்தம் இவற்றுடன் மாடுகளை அலங்கரித்துப் படைக்கும் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று பல பரபரப்புகள்.
இதில் முக்கியமானது ஜல்லிக்கட்டு. நீண்ட கால தமிழ் மரபோடு இணைந்த ஜல்லிக்கட்டை, தமிழக இளைஞர்கள் ஒன்று கூடிக் குரல் எழுப்பி மீட்டார்கள்.
அந்த இளைய தலைமுறைக்கும், தமிழக மக்களுக்கும், தாய் இணைய தள வாசக நேயர்களுக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல், தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
இனி உங்களுக்காக கட்டுரை.
*
அலங்காநல்லூர் – ஜல்லிக்கட்டுக்குப் பிரசித்தி பெற்ற ஊர்.
அவனியாபுரம், பாலமேடு, திருவாப்பூர், தம்மனம்பட்டி, சிராவயல், கண்டுபட்டி, வேந்தன்பட்டி, பல்லவராயன்பட்டி என்று சுற்றியுள்ள பல கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு பிரபலம்.
ஊருக்குள் நுழைந்தாலே மாடு பிடிக்கிறவர்களைப் பற்றி ஒரு பட்டியலையே வாசிக்கிறார்கள். மாடு வளர்க்கிறவர்களைப் பற்றியும் அடுக்குகிறார்கள்.
சிறு ஊர் தான். திரைப்படங்களில் பதிவாகி, கேமிராக்களில் பதிவாகி, உலகளவில் பிரபலமாகிவிட்டது இந்த ஊர்.
இங்குள்ள மாடு பிடிக்கிறவர்களின் கணக்குப் படி முன்பு மாடு பிடிக்கும் விளையாட்டுகள் நடந்த ஊர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில்.
நாளடைவில் இது ஐநூறுக்குள் சுருங்கித் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் சில நூறு ஊர்களாகச் சுருங்கிவிட்டது.
மாடுகளிலும் தான் எத்தனை வகைகள்? சுமார் எண்பதுக்கு மேற்பட்ட மாடுகள் ஜல்லிக்கட்டுக்கென்றே தமிழகத்தில் இருந்திருக்கின்றன.
இவற்றிற்கான பெயர்களை வரிசையாக மாடு வளர்ப்போர் அடுக்கும்போது வியப்பு மேலிடுகிறது. இத்தனை வகை மாடுகளில் தற்போது மிஞ்சியிருக்கும் ரகங்கள் எத்தனை என்கிற கேள்வி பிறக்கிறது.
காங்கேயம் மாடுகள் இதில் சிறப்பு ரகம். களத்தில் இறக்குவதற்காகவே பிரத்யேகமாக வளர்க்கப்படும் மாடுகள், வளர்க்கிறவர்களிடம் செல்லம் கொஞ்சும் குழந்தைகளைப் போலிருக்கின்றன.
அவர்களிடம் நெருங்கிப் பாசம் காட்டுகின்றன. பிரிந்தால் மெல்லிய கோபம் காட்டிச் சீறிக் காண்பிக்கின்றன.
இந்த வகை மாடுகளை ஈரோடு பகுதியிலிருந்து மதுரைக்கு அழைத்துவந்து பந்தயத்தில் விளையாடி முடிந்ததும் விட்டுவிட்டால், அப்படியே சாலை வழியாகவே நாலைந்து நாட்கள் ஆனாலும் சரியாகத் தன்னை வளர்த்தவர்களைத் தேடி வந்துவிடுமாம்.
இந்த அனுபவங்களை மிகுந்த வாஞ்சையோடு சொல்கிறார்கள் இந்த மாடுகளை வளர்க்கிறவர்கள். விசேஷ மோப்ப சக்தி அவற்றிற்கு இருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் .
மதுரைப்பக்கம் வளர்க்கப்படும் சில மாடுகளை ‘நாட்டு மாடுகள்’ என்கிறார்கள். இவற்றிற்குக் கொம்புகள் தடித்திருக்கின்றன. உயரம் சற்றுக்குறைந்திருந்தாலும், சீறுவதிலும், மண்ணைக் கொம்பால் குத்திக் காட்டுவதிலும் கெடு கெட்டி.
இவற்றுக்கென்று தனியாகப் பயிற்சி, தனியாகச் சத்துமிக்க உணவு எல்லாம் அளிக்கப்பட்டு போஷாக்குடன் சொந்த உறவைப் போன்ற அந்நியோன்யத்துடன் வளர்க்கப்படும் காளைகள் வாடிவாசலுக்கு வந்துவிட்டால் உடம்பில் ஆக்ரோஷம் புகுந்த மாதிரி துள்ளலுடன் பாயத் தயாராகி விடுகின்றன.
தழுவ முயல்கிறவர்கள் சற்றுப்பிசகினாலும், வயிறு சரிந்து அவர்களின் உயிர் நழுவிப்போய் விடுகிற ஆபத்து மிக அருகிலேயே இருக்கிறது.
இவ்வளவு ஆபத்துகளும், பலத்த காயம் பட்டு வாழ்நாள் முழுக்கத் தொடரும் ஊனத்துக்கான சாத்தியங்கள் ஜல்லிக்கட்டின் இருட்டான பக்கங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், தென் மாவட்டங்களில் மாடு பிடிக்கும் இளைஞர்கள் ஏராளம்.
இவர்களுக்கென்று விசேஷமான இன்சூரன்ஸ் வசதிகள் இல்லாவிட்டாலும், ஏறு தழுவி ஓடுகிற அந்தக் கண நேரச் சந்தோஷம் தான் ஜல்லிக்கட்டை உயிர்ப்புடன் பலவிதமான எதிர்ப்புகளை மீறி நடக்க வைத்திருக்கிறது.
இவ்வளவு பெருமைகள் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு 2006 ஆம் ஆண்டிலிருந்தே பலதரப்பட்ட சோதனைகள். நீதிமன்றங்கள் அவ்வப்போது தலையிட்டு சில நெறிமுறைகள் வகுத்தன.
2011 ஆம் ஆண்டு ஜனவரியில் மத்திய வன அமைச்சகம் ஒரு சிக்கலான காரியத்தைச் செய்தது. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளைச் சேர்த்ததிலிருந்து துவங்கியது சிக்கல். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டடது.
2016 ஆம் ஆண்டில் சரியாக முறைப்படுத்தப்படாத அவசரச்சட்டத்தைப் பிறப்பித்து, ஜல்லிக்கட்டை நடத்த முயன்றும் அந்த முயற்சிகள் அரைகுறையாகவே முடிந்தன.
இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்கிற குரல் பமாக ஒலித்தும், நீதிமன்றங்களை நாடியும் உரிய தீர்வு காணப்படாத நிலையே நீடித்துவந்தது.
அதை மாற்றிக்காட்டியிருக்கிறார்கள் இளைய தமிழர்கள்.
ஜல்லிக்கட்டில் துவங்கிய இளைஞர்கள் போராட்டம் படிப்படியாக தமிழகம் தாண்டி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரவியது.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்கிற ஒற்றைக் கோஷம் ஓங்கி ஒலித்தது. அரசியல் கட்சிகளைச் சாதுர்யமாக ஒதுக்கி மக்கள் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு, மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது.
“தமிழர்கள் ஒன்று கூடி தங்கள் பாரம்பரியம் சார்ந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான உரிமையை மீட்டெடுத்து வந்திருக்கிறார்கள்.
வீரம் செறிந்த இந்த விளையாட்டில் எம் தமிழர்கள் மிகுந்த கவனத்துடனும், உயிர் நழுவாத பாதுகாப்புடனும் களத்தில் இறங்க வேண்டும் என்பதே இதை ஆதரிக்கும் ஒவ்வொரு தமிழனின் வேண்டுகோளும்.
இவ்வளவும் சரி. ஜல்லிக்கட்டு எப்போது துவங்கியது தெரியுமா?
ஏறு தழுவுதல் என்று சங்க இலக்கியங்களில் சில பதிவுகள் இருந்தாலும், ஜல்லிக்கட்டு துவங்கிய அலங்காநல்லூரில் இதற்கென்று ஒரு செவி வழிக்கதை இருக்கிறது.
கேட்டால் வியப்பாக இருக்கும். இதற்குக் காரணம் முனியாண்டி தான்.
யார் இந்த முனியாண்டி?
அலங்காநல்லூரில்-ஊருக்குள் நுழைந்ததும் தென்படுகிற இயற்கை சார்ந்த கோவிலில் வீற்றிருக்கிறார் அருள்மிகு முனியாண்டி.
ரொம்பவும் துடியான சாமி என்று அழைக்கப்படும் இவருக்கு முன்னால் பூஜை போடப்பட்டுத்தான் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகிறது.
ஆடு, சேவல், சாராயம் எல்லாம் படைக்கப்படும் இந்தச் சாமி உருவானது தனிக்கதை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு. அலங்காநல்லூர் சுற்று வட்டாரத்தில் ஒரே காலரா.
பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருந்தன. ஊர் முழுக்க மரண பீதி. பயம் பலருடைய மனசில்.
முனியாண்டியிடம் தங்கள் பாட்டைச் சொல்லி மன்றாடியிருக்கிறார்கள் ஊர் மக்கள். அந்தச் சமயம் பார்த்து கோவில் பூசாரிக்கு அருள் வந்திருக்கிறது. ஆடியிருக்கிறார். முனியாண்டியே வந்திறங்கி குறி சொல்லியிருக்கிறார்.
“இந்த ஆபத்தைத் தடுக்கணும்னா கிராமத்திலே சல்லிக்கட்டு நடத்துங்க. வெளியூர்களில் இருந்து ஏகப்பட்ட பேர் வருவாங்க.
பார்க்க வர்றவங்களை நான் பலி எடுத்துக்கிடுவேன். எங்கிருந்தோ வர்றவனும், கடல் கடந்து வர்றவன் கூட இதுக்குப் பலியாவான். உள்ளூர்க்காரங்க காப்பாத்தப்பட்டுருவீங்க.’’
இப்படிப்பட்ட ‘அருள் வாக்கு’ வந்த பிறகுதான் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு களைகட்டி நடக்க ஆரம்பித்து, சுற்று வட்டாரங்களிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.
ஆனால் எப்போதோ சொன்ன அருள்வாக்குப் படி (!) இன்னமும் ஜல்லிக்கட்டின் போது கொம்பு உடலுக்குள் பாய்ந்து உயிரை இழக்கிறவர்கள் இருந்து கொண்டு தானிருக்கிறார்கள்.
இப்படி எல்லாம் ஒரு கதையா என்று வியக்கிறவர்கள் அப்படியே அலங்காநல்லூருக்கோ, பாலமேட்டுக்கோ ஒரு நடை நடந்துபோய் விட்டு வந்தால் இந்தக் கதையின் வீர்யத்தைப் புரிந்து கொள்ளலாம்.
சுற்றிலும் வேறொரு சமூகத்தினர் இருந்தாலும் இந்த முனியாண்டி கோவிலில், பரம்பரை பரம்பரையாக பூஜை செய்துவருகிறவர்கள் தலித் சாதியினர்தான்.
“இந்த விஷயத்தில் இங்கு எந்தச் சாதியப் பிரச்சினைகளும் எழுந்ததில்லை என்பது எவ்வளவு ஆரோக்கியமான அம்சம்?
எந்தவொரு அரசியல்வாதிகளை விடவும், எந்த மதவாதிகள், சாதீய வாதிகளை விடவும், சாதாரண மக்கள் எவ்வளவு மகத்தானவர்கள் !
#
விரைவில் ‘பரிதி’ பதிப்பகம் வெளியிட இருக்கிற மணா-வின் ‘தமிழகத் தடங்கள்’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி.