உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்பவும்!

– சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழிலை ஏ.எச்.எம்.டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்டு கோ என இரு நிறுவனங்கள் நடத்துகின்றன.

இரு நிறுவனங்களும் கட்டுமானம் மேற்கொள்வதாக கூறி, அதற்கான திட்ட அனுமதி தாக்கல் செய்யவும் பணிகளை நிறுத்தவும் மாநகராட்சி தரப்பில் ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. அவற்றை மூடி ‘சீல்’ வைக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில், நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, “நிரந்தர கட்டுமானம் மேற்கொள்ளவில்லை; தற்காலிகமானது தான் என்பதால், திட்ட அனுமதி பெறும் கேள்வி எழவில்லை” என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் மாநகராட்சி தரப்பில், “அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும், ஆவணங்களை சரிபார்த்த பிறகே அது தற்காலிகமானதா, இல்லையா என்பது தெரிய வரும் என்றும் நோட்டீசுக்கு மனுதாரர்கள் பதில் அளிக்கவில்லை” என்றும்  தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான உத்தரவுகளை மறு ஆய்வு கோரும் மனுக்களின் மீது, உரிய காலத்துக்குள் முடிவு காண வேண்டும். கட்டுமானத்தின்போது அடித்தளம் கட்டி முடிக்கப்பட்டால் திட்ட அனுமதியின்படி கட்டப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.

அதன்பிறகே அடுத்ததாக கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போது தான் விதிமீறல்கள் நடக்காது. ஆக்கிரமிப்புகளை அறிய, நவீன தொழில்நுட்பமான டிரோனை பயன்படுத்தலாம்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது இல்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கும்படி, அவ்வப்போது உத்தரவிட்டும் அமல்படுத்துவது இல்லை.

நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் பொருட்படுத்துவது இல்லை. கடமை ஆற்றுவது இல்லை. அத்தகைய அதிகாரிகளை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பதவிகளைப் பறிக்க வேண்டும்.

உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்றால், முதலில் சிறை; இரண்டாவது தான் அபராதம் என விதிக்க வேண்டும்.

இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க முடியாது. மனுதாரர்களுக்கு வழக்கு செலவுத் தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், திருவேற்காட்டில் உள்ள பசு மடம் அமைப்புக்கும், இந்தத் தொகையை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.

You might also like