– டெல்லி காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி பட்டப்பகலில் பிரபல தாதா ஜிதேந்தர் ஜோகியை, வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தின் போது காவல்துறையினர் சுட்டதில் 4 கொலையாளிகளும் இறந்தனர்.
இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், “டெல்லியில் உள்ள நீதிமன்றங்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது; இதனால் நீதிமன்றங்களுக்கு வருவதற்கே மக்கள் அச்சமடைகின்றனர்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு, காவல் துறையினருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், “டெல்லி நீதிமன்றங்களில் பாதுகாப்பு குறைபாடுள்ளது கவலையளிக்கிறது.
டெல்லியில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் செய்யப்பட்டுள்ள, பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை ஆணையர் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் பாதுகாப்பு நிபுணர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முடிவு செய்ய வேண்டும்.
நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைபவர்கள் அனைவரையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும். சோதனை செய்யாமல் வாகனங்கள், பொருட்களை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.