புராணங்கள் காட்டும் சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களையும் விடுதலைப் போராட்ட வீரர்களையும் நடிப்பால் காட்டிய சிவாஜி கணேசன், கட்டபொம்மன் உள்ளிட்ட சில அரசர்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
அதில் ஒருவர், தமிழர்கள் கொண்டாடும் ’ராஜராஜசோழன்’!
ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளியான ராஜராஜசோழன் படத்தில் சிவாஜி கணேசன், ராஜராஜசோழனாக மிரட்டி இருப்பார். இதுபோன்ற கேரக்டர்கள் என்றால், சும்மாவே கிளப்பும் சிவாஜி, இதில் வேற லெவல் நடிப்பைக் கொட்டியிருப்பார்.
அந்தக் கம்பீர நடையும் பார்வையும் பேசும் வசனங்களும் ராஜேந்திர சோழனே கண்முன் நிற்பது போல தோன்றும்.
விஜயகுமாரி சோழமாதேவியாகவும், முத்துராமன் விமலாதித்யனாகவும், சிவகுமார் ராஜேந்திர சோழனாகவும் குந்தவையாக லட்சுமியும் நடித்திருக்கிறார்கள் இந்தப் படத்தில்.
நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், புஷ்பலதா, டி.ஆர்.மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், சுருளிராஜன், மனோரமா, காந்திமதி என பெரிய நட்சத்திரப் பட்டாளம்.
இவர்களை கண்ட்ரோல் பண்ணுவதற்குள்ளேயே இயக்குநர் ஏ.பி.நாகராஜன் பெரும் பாடுபட்டிருப்பார். சாதாரண விஷயமா என்ன?
குன்னக்குடி வைத்யநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்கு கண்ணதாசன், கே.டி.சந்தானம், பூவை செங்குட்டுவன், உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.
தென்றலோடு உடன் பிறந்தாள்/
செந்தமிழ் பெண்ணாள் – அவள்/
தென்மதுரை கோயிலிலே சங்கம் வளர்த்தாள்/
– என்ற உளூந்தூர்பேட்டை சண்முகத்தின் பாடல் செம ஹிட்.
‘தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே’, ‘மயக்கும் மன்னன்’, ‘மாதென்னை படைத்தான் உனக்காக’, ‘ஏடு தந்தானடி தில்லையிலே…’ உட்பட அனைத்துப் பாடல்களும் அப்போது வரவேற்பைப் பெற்றன. ‘ஏடு தந்தானடி’ பாடலுக்கு இப்போதும் வரவேற்பு இருக்கிறது.
ஆனந்த் மூவிஸ் சார்பில் ஜி.உமாபதி தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.பி.நாகராஜனும் அரு.ராமநாதனும் திரைக்கதை அமைத்தனர். அரு.ராமநாதன் இந்தக் கதையை நாடகமாக எழுதி நடத்தி வந்தார்.
இந்தப் படத்துக்காக தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் படமாக்க நினைத்தது படக்குழு. அனுமதி மறுக்கப்பட்டதால், அதே போல பிரமாண்ட செட் அமைத்து படமாக்கினார்கள்.
தமிழில் வெளியான முதல் சினிமாஸ்கோப் படம் இதுதான். அதனால், இந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
பட ரிலீஸ் அன்று, திருச்சியில் படத்தின் பெட்டியை யானை மேல் வைத்து தியேட்டருக்கு ஆர்ப்பாட்டமாகக் கொண்டு செல்ல, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வியக்க வைத்தார்கள் ரசிகர்கள். அந்தக் காலகட்டத்தில் இதை ஆச்சரியமாக பேசினார்கள்.
ஆனால், சரியாக சினிமாவாக்கப்படவில்லை என்பதால், ஒரு நாடகத்தைப் பார்த்த உணர்வுதான், இந்தப் படம் பார்த்தபோது இருந்தது என்றார்கள் விமர்சகர்கள்.
இதனால், வணிக ரீதியாக பெரிய வெற்றியை ராஜராஜசோழன் பெறவில்லை. ஆனாலும் நூறுநாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.
– அலாவுதீன்