சில பாடல்கள் மனதை விட்டு எப்போதும் நீங்காது. அது உடலில் ஓர் உறுப்புப் போல, உடன் வந்துகொண்டே இருக்கும். உள்ளுக்குள்ளிருந்து பாடிக்கொண்டே இருக்கும்.
நம்மை அறியாமலேயே ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படி பல பாடல்களை பலர் வரிசைக் கட்டி வைத்திருப்பார்கள், மனதில்.
டிவி, இன்டர்நெட், செல்போன் ஏதுமற்ற, பாடல்களும் சினிமாவும் ரேடியோவும் மட்டுமே ஒரே பொழுதுபோக்கு என்றிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களிடம் இந்த லிஸ்ட் பெரிதாகவே இருக்கும்.
2-கே கிட்ஸ்களுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. அந்தப் பாடல்களில் மறக்க முடியாத, எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும் பாடல்களில் ஒன்று, ’மயிலே மயிலே, உன் தோகை எங்கே?’
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார், சுமித்ரா ஜோடியாக நடித்த படம், ’கடவுள் அமைத்த மேடை’. 1979 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் போஸ்ட்மேனாக நடித்திருப்பார் ஹீரோ சிவகுமார்.
ஹீரோக்கள் பல படங்களில், இரட்டை வேடங்களில் நடித்திருப்பதைப் பார்த்திருப்போம். ஹீரோயின்கள் டபுள் ஆக்ட்டில் நடித்திருக்கும் படங்கள் குறைவுதான். அப்படி சுமித்ரா இரட்டை வேடங்களில் நடித்த படம் இது. இதில் அக்கா, தங்கையாக நடித்திருப்பார் அவர். இதில் ஒரு கேரக்டரால் வாய்பேச முடியாது.
மேஜர் சுந்தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், சுருளிராஜன், வடிவுக்கரசி உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு கவிஞர் வாலி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியிருக்கிறார். இளையராஜா இசை.
பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில், ’தென்றலே நீ பேசு’, இளையராஜா, ஜானகி குரலில், ’ஹே தண்ணி நீ நீராட நான் மீனாக’, ஜானகியின் குரலில் ’வானில் பறக்கும் பறவைக் கூட்டம்’, ‘தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி’ சைஜலா பாடிய ’தங்கத்துரையே மூனாம்பிறையே’ என அனைத்துப் பாடல்களையும் ஒவ்வொரு ராகத்தில் அமைத்திருப்பார் ராஜா.
அதிலும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஜென்ஸியும் பாடிய, ’மயிலே மயிலே உன் தோகை எங்கே?’ பாடல் அப்போது பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல்.
இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் சிலிரிக்கும்.
ஹம்சத்வனி ராகத்தில் ராஜா அமைத்த இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை. அதுதான் இளையராஜா ரகசியம். இந்தப் பாடல்தான் எஸ்.பி.பியும், ஜென்ஸியும் சேர்ந்து பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாடலை இப்போது யூடியூப்பில் பார்த்தால் சிவகுமாருக்குப் பதில், அவர் மகன் சூர்யா பாடுவது போலவே இருக்கும். படம் ரிலீஸ் ஆகி 42 வருடம் ஆகிவிட்டாலும் இப்போதும் ’மயிலே மயிலே’ ஜென்ஸியின் குரலில் ஈர்க்கும் பாடலாகவே இருக்கிறது.
– அலாவுதீன்