கிராமப்புற மக்களுக்கு 5 ரூபாய் ஸ்நாக்ஸ்!

கோவை தம்பதியின் புதுமை

“உள்ளூர் வினியோகஸ்தர்கள் மனதில் பட்டதைப் பேசுபவர்கள். அவர்களது தேவைகளை அறிந்து தயாரிப்புகளில் மெல்ல மாற்றங்களைச் செய்தோம். வாங்கும் மக்களின் உணர்வுகளை அறிந்து விற்பனை செய்தோம்” என்று பேசும் பிருந்தா – பிரபு தம்பதி வணிகத்தில் புதுமை படைத்துச் சாதித்து வருகிறார்கள்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்த தம்பதி தொடங்கிய TABP ஸ்நாக்ஸ் மற்றும் பானங்களைத் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஏழை எளிய மக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

நான்கைந்து மாநிலங்களில் 700 வினியோகஸ்தர்களை வைத்திருக்கிறார்கள். ஒரு லட்சத்து 19 ஆயிரம் கடைகளில் ஸ்நாக்ஸ் மற்றும் பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவின் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தரச் சான்று அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், ஸ்நாக்ஸ் மற்றும் பானங்களை 5 மற்றும் 10 ரூபாய்க்கு சாமானிய மக்களை இலக்காக வைத்து விற்பனை செய்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் விற்பனையில் 35.5 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. அது 2017 ஆம் ஆண்டைக் காட்டிலும் 350 சதவீதம் கூடுதலான வருமானம்.

இந்தத் தம்பதியின் ஸ்நாக்ஸ் தயாரிப்புகள் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள பெட்டிக் கடைகள், பெட்ரோல் பங்க் மற்றும் சூப்பர் அங்காடிகளில் விற்பனையாகின்றன.

விரைவில் ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களிலும் தொழிலை விரிவுபடுத்தவுள்ளார்கள்.

பெரும் தொழில் குடும்பத்தில் பிறந்த பிரபு, ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர். குடும்பத்தின் தொழில் நிறுவனங்களைக் கவனிப்பதற்கு முன் அவர் சில்லறை வர்த்தக ஆலோசகர் பணி அனுபவத்தைப் பெற்றார்.

அமெரிக்காவில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்தார். பிறகு 2012 ஆம் ஆண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், தந்தையின் தொழிலில் இணைந்தார்.

“அமெரிக்காவில் பேக்ட் புட்ஸ் அடைந்த வளர்ச்சியைக் கண்டேன். சில்லறை உணவுப் பொருட்களி்ன் எதிர்காலம் அதனுடன் தொடர்புடையதாக இருந்தது. மெல்ல இந்தியாவிற்குள் அந்த வணிகம் அடியெடுத்துவைத்தது. அது தொடர்பான சில எண்ணங்கள் என்னிடம் இருந்தன” என்கிறார் பாபு.

“கோவையின் கிராமம் ஒன்றில் ஒரு குழந்தை குளிர்பானத்தை வாங்கி தன் நண்பர்களுக்குப் பகிர்ந்து அளித்ததை அறிந்தேன். அந்த பாட்டில் வசதியின் அடையாளமாகப் பார்க்கப்படுவதை உணர்ந்தேன்.

தினமும் 100 ரூபாய் சம்பாதிக்கும் தினக்கூலி தொழிலாளர்களால் குளிர்பானத்தை வாங்க முடியாது. அதன் விலை ரூ. 30. அங்கே விருப்பம் சார்ந்த தேவை இருக்கிறது” என்று பொருளாதார நிலையை விளக்குகிறார்.

கிராமங்களில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள் பற்றிய முதல்கட்ட ஆய்வில் பிரபுவும் அவரது மனைவி பிருந்தாவும் ஈடுபட்டார்கள்.

பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை அவர்கள் விரும்புவதைக் கண்டறிந்தனர்.

ஆனால் விலையோ அவர்கள் நிலைக்கு எதிராக இருந்தது. எனவே அந்த தம்பதி பானத்தின் சுவையில் கவனம் வைத்தது.

ஸ்நாக்ஸ் மற்றும் பானங்களின் விலை குறைவாக இருப்பதால், பொருளின் தரம் மற்றும் பேக்கிங்கில் எந்த சமரசமும் செய்யவில்லை. பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இணையாகத் தயாரிக்கிறார்கள்.

பா. மகிழ்மதி

You might also like