அச்சப்படத் தேவையில்லை; ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்!

– ஒமைக்ரான் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர்

புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் வராமல் தடுக்க முழு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் கூடுதல் உஷாராக இருக்குமாறு பணித்துள்ளோம். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

ஒமைக்ரான் வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனைத்தான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திருச்சியிலும், சென்னையிலும் ஒமைக்ரான் வந்து விட்டதாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு கோவிட் பாசிட்டிவ் வந்துள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மரபியல் ரீதியிலான சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” எனக் கூறினார்.

இதேபோல் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்.

பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது.

ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நீச்சல் குளங்களை மூட வேண்டும்.

இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது” என  உத்தரவிட்டுள்ளது.

03.12.2021 12 : 30 P.M

You might also like