‘பொம்மை’க்கு காத்திருந்த இயக்குநர்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில், ஆங்கில, பிரிட்டீஷ் படங்களின் இன்ஸ்பிரேஷனில் பல படங்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பாலசந்தர் அப்படித்தான் சில படங்களை தயாரித்து, இயக்கியுள்ளார். அதில் சில படங்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அப்படி அவர் தயாரித்து இயக்கிய படங்களில் ஒன்று ’பொம்மை’.

ஆல்பிரட் ஹிட்காக் இயக்கத்தில், சில்வியா சிட்னி, ஆஸ்கர் ஹோமோல்கா, ஜான் லோடர் உட்பட பலர் நடித்து 1939 ஆம் ஆண்டு வெளியான பிரிட்டீஸ் படம், சபோடேஜ் (Sabotage).

உளவு திரில்லர் படமான இதன் கதையை, அப்படியே தமிழ்ப்படுத்தி ’பொம்மை’ என்று உருவாக்கினார் எஸ்.பாலசந்தர். அவர் நண்பர் வித்வான் வே.லட்சுமணன் வசனம் எழுதினார். எஸ்.பாலசந்தர், எல்.விஜயலட்சுமி, வி.எஸ்.ராகவன், லக்‌ஷ்மிராஜம், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி உட்பட பலர் நடித்தனர்.

பாலசந்தர் ஏற்கனவே ’அந்த நாள்’, ’அவனா இவன்’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கி இருந்ததால், அதே பாணியில் இதையும் உருவாக்கினார். தமிழ் ரசிகர்களுக்காக மாற்றங்களையும் செய்தார். படத்துக்கான பாடல்களுக்கான இசையும் அவர்தான். பின்னணி இசையை டி.பி. ராமச்சந்திரன் அமைத்தார்.

பாலசந்தர் இசையில், ’நீயும் பொம்மை நானும் பொம்மை’ சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இப்போதும் இருக்கிறது. கே.ஜே.யேசுதாஸுன் முதல் தமிழ்ப் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், படத்தில் இடம்பெற்ற, ’தத்தி தத்தி நடந்துவரும் தங்கபாப்பா’, ‘நீதான் செல்வம் நீதான் அமுதம்’, ‘கையருகே கனி இருக்க’ உட்பட அனைத்துப் பாடல்கள் அப்போது ஹிட்.

படத்தில் முக்கிய கேரக்டரில் ஒன்று, ’பொம்மை’. வித்தியாசமான பொம்மைக் காக காத்திருந்தார் பாலசந்தர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் நினைத்த மாதிரியான பொம்மை கிடைக்கவே இல்லை.

அமெரிக்காவில் இருந்து கூட அப்படியொரு பொம்மையை கொண்டு வர முயன்றார். கிடைக்கவில்லை. அந்தப் பொம்மை-க்காக பல மாதங்கள் காத்திருந்தார். பிறகு சென்னை, பாரிஸ் கார்னரில் கிடைத்தது பேட்டரியில் நடக்கும் அந்தக் குழந்தை பொம்மை.

அந்தப் பொம்மை அந்தக் காலகட்டத்தில் அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ’தத்தி தத்தி நடந்துவரும் தங்கபாப்பா’ பாடலில் வரும் அந்த பொம்மைக்காகவே அந்த பாடல் அப்போது அதிகம் ரசிக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் கமர்சியலாக வெற்றி பெற்றது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நூறுநாட்களுக்கு மேலாக ஓடியது. ’அவனா இவன்’ படத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க, எஸ்.பாலசந்தருக்கு இந்தப் படம்தான் உதவியது.

– அலாவுதீன்

You might also like