தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிக கனமழை!

– இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் வங்கக்கடலில், புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாகிறது எனவும், இது இலங்கைக்கும், தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். தென்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

நாளை ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியா குமரி மாவட்டங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். நாளை மறுதினம் மற்றும் 26-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நாளை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கைக்கும், தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையைக் கடக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் நாளை உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, நான்காவது புயல் சின்னமாகும். இந்தத் தாழ்வு பகுதியால், துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

You might also like