ஒரு நாளில் நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது போன்று தோன்றுவதை ‘DEJA VU’ என்றும், மீண்டும் மீண்டும் நிகழ்வதை ‘TIME LOOP’ என்றும் சொல்வதுண்டு.
’டைம் லூப்’ முறையில் அமைந்த கதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழித் திரைப்படங்களில் அதிகம் வந்திருக்கின்றன.
தமிழில் சமகாலத்தில் ‘டைம் லூப்’ கான்செப்டை மையமாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில், அவற்றில் ஒன்றாக வந்திருக்கிறது ‘ஜாங்கோ’.
ஒரே நாளின் நிகழ்வுகள் இப்படித்தான் இருக்குமென்று அறிந்து நாயகன் டென்ஷன் ஆவதும், அதன்பின் அதையே ஒரு வரம் போல பயன்படுத்துவதும்தான் ‘ஜாங்கோ’வின் கதை.
நம்பிக்கையை உருவாக்கும் பொய்!
நரம்பியல் நிபுணரான கவுதம் (சதீஷ்குமார்), செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிஷாவை (மிருணாளினி ரவி) திருமணம் செய்துகொள்கிறார்.
மாமியார் (தனம்) உடனான சண்டைகளால், கவுதமை நிரந்தரமாகப் பிரிந்துவிடுகிறார்.
மனைவியின் மீதான காதலை மறக்க முடியாமல் தவிக்கும் கவுதம், எப்படியாவது நிஷாவின் மனதை மாற்ற முடியாதா என்று தவிக்கிறார்.
வழக்கமான ஒரு வார நாளாகத் தொடங்கும் அக்டோபர் 2, கவுதமின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
வீட்டில் வேலைக்காரியின் பேச்சால் எரிச்சல், மனைவியுடன் செய்தித் தொலைக்காட்சியில் பேட்டி, பாகிஸ்தான் சிறுமிக்கு அறுவை சிகிச்சை, அது முடிந்து வீடு திரும்பினால் மது பாட்டிலோடு வரும் நண்பர்கள், இந்த வரிசையில் மது போதையில் தாயைச் சந்திக்க கவுதம் காரில் திடீரென்று கிளம்பிச் செல்வதும் சேர்கிறது.
கவுதம் கார் திடீரென்று ஓரிடத்தில் ‘ரிப்பேர்’ ஆகி நிற்க.. அப்போது வானில் இருந்து வரும் ஒரு விண்கல் கவுதம் அருகே விழுகிறது.
அடுத்தநாள் காலையில், எந்தவிதக் காயமும் இல்லாமல் படுக்கையில் இருந்து எழுகிறார் கவுதம். ஆனால், தேதி மட்டும் அதே அக்டோபர் 2 என்றே இருக்கிறது.
அன்றைய தினம் முழுவதையுமே அவர் ஏற்கனவே வாழ்ந்தது போல உணர, அடுத்தநாளும் அக்டோபர் 2 விடிகிறது. அவ்வளவுதான்.
முதலில் டென்ஷனாகும் கவுதம், மெல்ல மெல்ல ஒவ்வொரு முறையும் அந்த நாளின் நிகழ்வுகளை முடிந்தவரை மாற்றப் பார்க்கிறார்.
அப்போது, நள்ளிரவில் நிஷாவை யாரோ கொலை செய்வதைக் கண்டுபிடிக்கிறார். யார் அந்த நபர்கள்? எதற்காக நிஷாவை கொல்லத் துடிக்கின்றனர்? அதற்கு யாரெல்லாம் கருவியாகச் செயல்படுகிறார்கள்?
இதன் பின்னணியில் இருப்பது யார் என்றெல்லாம் கவுதம் கண்டுபிடிப்பதுதான் ‘ஜாங்கோ’வின் மீதிப்பாதி. அதோடு, மனைவி தன்மீது கொண்ட காதலையும் மீட்டெடுக்கிறார் என்பது அக்மார்க் கோடம்பாக்க மசாலா.
’டைம் லூப்’ சம்பந்தமாக ஆயிரம் கொள்கைகள் சொல்லப்பட்டாலும், அவை அனைத்துமே புனைவுகளாகத்தான் கருதப்படுகின்றன. இதுவரை அப்படியொரு விஷயம் உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், அதனை உண்மை போலத் தோன்ற வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் ‘ஜாங்கோ’ இயக்குனர் மனோ.கார்த்திகேயன். காதில் பூச்சுற்றும் கதை என்றாலும், வித்தியாசமாக அதனைத் திரையில் தர முயன்றிருக்கிறார்.
எரிச்சலூட்டும் ரியாக்ஷன்கள்!
நாயகனாக வரும் சதீஷ்குமார் நோயாளியின் நாடி பிடித்து பார்க்கும் மருத்துவர் போலவே படம் முழுக்க ‘ரியாக்ட்’ செய்கிறார். நாயகன் மீது கோபப்படுவதை தவிர நாயகி மிருணாளினிக்கு பெரிதாக வேலை இல்லை.
கிளைமேக்ஸ் அருகே ‘நான் செத்துடுவேனா’ என்று அதிர்ச்சியடையும் காட்சியில்தான் அவரது முகபாவம் மாறுகிறது. இதனை உணர்ந்தோ என்னவோ, ஆரம்ப காட்சிகளிலேயே இவர்களது ரியாக்ஷன்களை தங்கதுரை கிண்டலடிக்கும் வசனத்தை இடம்பெறச் செய்திருக்கின்றனர்.
மிருணாளினியுடன் வேலை செய்பவர்களாக வரும் டேனியல் போப், அனிதா சம்பத் உள்ளிட்ட பலரும் திரையில் வந்து போகின்றனர். வில்லனாக வரும் ஹரீஷ் பேரடிக்கோ, விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகரனுக்கோ திரையில் போதிய இடம் கிடைக்கவில்லை.
குறிப்பாக, நாயகனின் நண்பர்களாகவரும் ரமேஷ் திலக்கும் கருணாகரனும் என்ன வேலை செய்கின்றனர் என்பது இரண்டாம் பாதியிலேயே நமக்கு முழுமையாகத் தெரிகிறது. அந்த இடம் மட்டுமே நகைச்சுவைக்கானதாகவும் மாறியிருக்கிறது.
வீட்டு வேலைக்காரியாக வரும் தீபா வரும் காட்சிகளும் ‘வழவழ கொழகொழ’ வகையறாவாக இருந்து விடுகிறது. சதீஷ்குமார் மீது பொறாமைப்படும் மருத்துவராக வரும் ராஜாஜி இறுதியில் எப்படி மனம் மாறுகிறார் என்பதும் தெளிவாகக் காட்டப்படவில்லை.
கார்த்திக் தில்லையின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் ‘ஹேண்டி’யாக அமைந்திருக்க, அதற்கேற்றாற்போல பரபரப்பு ஊட்டுகிறது சான் லோகேஷின் படத்தொகுப்பு.
கிப்ரான் இசையில் ’அனலே அனலே’, ‘கனவா கனவா’ பாடல்கள் மெதுவாக மனதுக்குள் சுழன்றடிக்கின்றன. கிளைமேக்ஸை நோக்கி நெருங்கும் காட்சிகளின் பின்னணி இசை அருமை.
திரைக்கதையில் குழப்பங்கள்!
ஒரு நாளின் அனைத்து நிகழ்வுகளும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனர், கதையின் முடிச்சை நோக்கிச் செல்ல நிறைய நேரம் செலவழித்திருக்கிறார்.
அதாவது, நாயகியின் உயிருக்கு ஆபத்து என்பதை படம் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே காட்டியிருந்தால் இன்னும் கொஞ்சம் ‘பெப்’ ஏறியிருக்கும். அதைத் தவறவிட்டதால், இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் முற்றிலும் புதிதாகத் தெரிகின்றன.
கீழே உள்ள தகவல்களில் ‘ஸ்பாய்லர்’ நிறைய இருப்பதால், விமர்சனத்தில் கதையைத் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.
ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் சில காட்சிகளை அமைக்க முயன்றிருந்தாலும், அதற்கேற்ற பட்ஜெட் இல்லை என்பது தெளிவாகத் தென்படுகிறது.
அதையும் மீறி, திரைக்கதையை நேர்த்தியாக்குவதில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் மனோ.கார்த்திகேயன்.
பூமிக்கு வருவது விண்கல்லா அல்லது வேற்றுக்கிரவாசிகளின் சாதனமா அல்லது இரண்டுமே ஒரே நேரத்தில் வருகின்றனவா என்ற குழப்பத்திற்குத் தெளிவான பதில் இல்லை.
ஹீரோவும் வில்லனும் ஒரே நேரத்தில் ‘டைம் லூப்’பில் சிக்குகின்றனர் என்பதை ‘சர்ப்ரைஸ்’ ஆக சொல்லியிருப்பதும் ஏமாற்றம் தருகிறது.
அதனை முதல் பாதியிலேயே சொல்லி, இரண்டு பேரின் பார்வைகளையும் சரிபாதியாக பிரித்திருந்தால் திரைக்கதையில் 80% யை நிறைவு செய்திருக்க முடியும்.
உலக சினிமாவான ‘LOOP’, ஹாலிவுட் படமான ‘VANTAGE POINT’ படங்களில் ஒரே காட்சி மீண்டும் மீண்டும் நிகழும்போது, புதிது புதிதாக சில கதாபாத்திரங்களின் குணாதிசயங்களோ அல்லது திரைக்கதையில் புதிய நிகழ்வுகளோ காட்டப்படும்.
அது, ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை அதிகப்படுத்தும். அப்படியொரு வாய்ப்பு ‘ஜாங்கோ’வில் மிஸ் ஆகியிருக்கிறது.
கிடைத்த வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு இப்படியொரு கதையைப் படமாக்கியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மனோ.கார்த்திகேயன்.
ஆனாலும், திரைக்கதையை மிக நேர்த்தியாகச் செதுக்கியிருந்தால் ‘இன்று நேற்று நாளை’ பெற்றது போன்ற வெற்றியைப் பெற்றிருக்கலாமே என்ற வருத்தமே இறுதியில் எஞ்சுகிறது.
– உதய்.பா