தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

  • இந்திய வானிலை மையம் தகவல்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று (நவம்பர் – 16) ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது.

இதுதவிர மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து வட கேரளா, தென் கர்நாடகா, மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை (4.5 கி.மீ உயரம் வரை) நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் அனேக இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய பத்து மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளது.

You might also like