கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவர் மறைந்தாலும் அவர் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.
புனித் ராஜ்குமார் கண் தானம் செய்ததால், அவரது ரசிகர்களும் கண்தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தங்களது கண்களை தானம் செய்வதாகக் கூறி பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி, புனித் ராஜ்குமார் மறைந்த பின்பு கடந்த 15 நாட்களில் மட்டும் கர்நாடக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கண்களை தானம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரு நாராயண நேத்ராலயா மருத்துவமனையில் மட்டும் 15 நாட்களில் 78 பேர் தங்களது கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.
அந்த மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 100-க்கும் குறைவானவர்களே சராசரியாக கண் தானம் செய்துவந்துள்ளனர்.
ஆனால் புனித் ராஜ்குமார் மறைவுக்குப் பின் 15 நாட்களில் 78 பேர் தாங்களாகவே வந்து கண்களை தானம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.