‘குருப்’ ஆடும் குழப்பமான மங்காத்தா!

முழுக்க முழுக்க சினிமாத்தனமாகவும் அல்லது யதார்த்தமாகவும் அல்லாமல், இரண்டையும் கலந்து கட்டி அமைக்கப்படும் திரைக்கதைகள் சில நேரங்களில் ‘போங்கு’ காட்டிவிடும்.

துல்கர் சல்மான், இந்திரஜித், டைனி டாம் சாக்கோ, சன்னி வெய்ன், பரத், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘குருப்’ அந்த வகைப்பாட்டில் எளிதாகச் சேர்கிறது.

குருப் என்பவர் யார்? அவர் செய்யும் தொழில் நல்லதா கெட்டதா? அவர் ஏன் தேடப்படும் குற்றவாளி ஆகிறார்?

பல்வேறு வேடமிட்டு தப்பிக்கும் திறமை அவரிடம் இருந்ததா என்பது உட்படப் பல்வேறு கேள்விகளுக்குத் திரைக்கதையில் பதில் கிடைக்கும் விதம்தான் மேற்சொன்ன முடிவுக்கு மேலும் அழுத்தம் கூட்டுகிறது.

குழப்பமான கதை சொல்லல்!

எந்த வேலையைச் செய்தும் பிழைக்கலாம் என்றெண்ணும் இளைஞரான கோபாலகிருஷ்ணன் (துல்கர் சல்மான்), இந்திய விமானப்படை பயிற்சிக்குத் தேர்வாகிறார்.

பயிற்சியளிக்கும் தலைமையதிகாரிக்குத் இவரைச் சுத்தமாகப் பிடிப்பதில்லை.

ஆனாலும், தான் வாழ்வில் முன்னேறுவேன் என்று அவரிடம் உறுதிபடக் கூறுகிறார்.

உடன் பயிற்சி பெறும் பீட்டருக்கு (சன்னி வெய்ன்) கோபியின் மன உறுதி வித்தியாசமாகப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில், தனது உறவினரின் வீட்டில் தங்கிப் படிக்கும் சாரதாம்மா (சோபிதா துலிபலா) மீது கோபிக்கு காதல் பிறக்கிறது. இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகின்றனர்.

திடீரென்று ஒருநாள், சொந்த ஊருக்குச் சென்ற கோபி தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வர, அதிர்ச்சியடையும் பீட்டர் சாரதாவைப் பார்க்கச் செல்கிறார். அவரும் அது போன்றதொரு நிலையிலேயே இருக்கிறார்.

அதன்பிறகு, சாரதாவின் முன் உயிருடன் தோன்றும் கோபி ‘இனிமேல் தனது பெயர் சுதாகர் குருப்’ என்று கூறுகிறார். விமானப்படை வேலையில் இருந்துவரும் ஓய்வூதியப் பலன்களையும் பெறுகிறார்.

இருவரும் பெர்சியா செல்கின்றனர். அங்கு இரண்டு குழந்தைகளோடு சவுக்கியமாக வாழ்ந்துவரும் கோபி, மீண்டும் ஊருக்குச் செல்ல வேண்டும் என்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார் சாரதா.

தனது பெயரில் இன்சூரன்ஸ் தொகை 8 லட்சம் உள்ளதென்றும், தன்னைப் போலவே ஒரு பிணத்தைக் கொண்டு மோசடி செய்து அத்தொகையைப் பெற்று பங்கு பிரிக்கலாம் என்றும், ஊரில் இருக்கும் நண்பர்களிடம் கூறுகிறார் கோபி.

அப்படி எந்த பிணமும் கிடைக்காமல்போக, நண்பன் பாஸியோ (டைனி டாம் சாக்கோ) நாமே ஒரு ஆளைக் கண்டுபிடித்து கொலை செய்யலாம் என்கிறார். அந்த கணத்தில், அவர்களது கண்ணில் சார்லி (டொவினோ தாமஸ்) படுகிறார்.

அடுத்தநாள் காலையில் சுதாகர் சென்ற கார் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதாக ஊரே பதைபதைக்கிறது. ஆனால், டெபுடி சூப்பரிண்டண்ட் கிருஷ்ணதாஸ் மட்டும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக எண்ணுகிறார்.

அவரது விசாரணையின் முடிவில், பெர்சியாவில் இருக்கும் யாரோ ஒருவருக்குத் தான் இறந்துவிட்டதாகச் சுதாகர் தகவல் சொல்ல முனைந்ததைக் கண்டறிகிறார்.

உண்மையில் சுதாகர் குருப் என்பவர் யார், இப்படியொரு மோசடியில் ஈடுபடக் காரணம் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகள் தெரிய வருவதுடன் படம் முடிவடைகிறது.

பிளாஷ்பேக்கில் கதை விரிந்தாலும், இறுதியில் புதிர் விடுபடுவது போன்று அமைக்கப்பட்ட திரைக்கதை திருப்திகரமாக இல்லை. தொடர்ச்சியாக அறிமுகமாகும் பல்வேறு கதாபாத்திரங்களால் குழப்பம்தான் அதிகமாகிறது.

உண்மைக் கதை!?

1980களில் ‘ஜேக்கப் கொலை’ வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுகுமார குருப் என்பவரை போபால், புனே நகரங்களில் தேடியலைந்தது கேரள காவல் துறை. அவர் இறந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது.

ஆனாலும், அவரது பிணம் எங்கு புதைக்கப்பட்டது என்று கண்டறியப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, இப்போதுவரை குருப் உயிரோடிருப்பதாகத் தகவல்கள் உலவுகின்றன.

அவற்றை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட இக்கதைக்கு கே.எஸ்.அரவிந்த் மற்றும் டேனியல் சயூஜ் இருவரும் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கின்றனர்.

துல்கர் சல்மானை நாயகனாக அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன், இதனை இயக்கியிருக்கிறார்.

இக்கதையில் உண்மையின் சதவிகிதம் எவ்வளவு என்ற கேள்வி கேரளாவில் எழுப்பப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் ‘குருப்’, விவாதங்களை மீறி ஒரு ஆண்டி ஹீரோ திரைப்படமாக ரசிகர்களைச் சென்றடைந்திருக்கிறது.

கைரேகை தொழில்நுட்பம் பரவலாக இல்லாத காலகட்டத்தில் குற்றங்களில் இருந்து தப்பித்தவிதம் பற்றி திரைக்கதையில் தெளிவான விளக்கம் இல்லை.

தன்னைப் போன்றிருக்கும் ஒரு பிணத்தை குருப் தேடியலைவதே கதையின் முதன்மையான பகுதி.

ஆனால், மிகச்சாதாரண வேலையில் இருக்கும் ஒரு விமானப்படை பணியாளர் ஒருவர் முறைகேடாகப் பெருமளவில் பணம் சம்பாதித்தது தான் இக்கதையின் அடிப்படையாக இருக்கிறது.

இரண்டாவதை திரைக்கதையில் விலாவாரியாகச் சொல்ல முயன்றதுதான், படம் பார்க்கும் நம்மை அயர்வுற வைக்கிறது. இதனைத் தவிர்த்திருந்தால், நல்லதொரு ‘த்ரில்லர்’ ஆக இது மாறியிருக்கும்.

படத்தின் முடிவு, ஹீரோவின் சாகசம் போலவே காட்டப்படுகிறது. இதனைக் குறிப்பிடுவது போன்று திரைக்கதையில் அமைக்கப்பட்ட திருப்பங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுகின்றன. இப்படத்தில் இடம்பெற்ற நடிகர்களின் தேர்வும் இதற்கொரு காரணமாக இருக்கிறது.

செறிவான நடிப்பு!

முன்பாதியில் துல்கர் சல்மானுடன் சன்னி வெய்ன் மற்றும் சோபிதா துலிபலா இடம்பெறுகின்றனர். அதற்கடுத்த காட்சிகளில் டைனி டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், அனுபமா பரமேஸ்வரன் வருகின்றனர்.

டொவினோவுக்கும் அனுபமாவுக்கும் திரைக்கதையில் பெரிய இடம் இல்லை என்றாலும், அவர்களது இருப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

இதன் தொடர்ச்சியாக பரத், இந்திரஜித் உள்ளிடோரின் பெர்பார்மன்ஸ் திரைக்கதையில் இணைகிறது. இந்திரஜித்தின் பாத்திர வடிவமைப்பு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வரும் கார்த்தியை நினைவூட்டுகிறது.

திரையில் வந்துபோகும் நடிகர்களின் செறிவான திறமையே, திரைக்கதை மீது நொடியில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எத்தனை முகங்கள் வந்தாலும், திரையில் பெரும்பாலான நேரம் தன் முகத்தையே காட்டுகிறார் துல்கர். அதுவே, இப்படத்தை ஹீரோயிசம் சார்ந்ததாக மாற்றுகிறது.

சூசின் ஷ்யாமின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு, விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு, பேங்லனின் தயாரிப்பு வடிவமைப்பு அனைத்தும் திரைக்கதையைக் கனமானதாக மாற்றியிருக்கிறது.

ஒரு இயக்குனராக, பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.

வரலாற்றில் மிகத்தெளிவாக ஒரு குற்றம் இழைக்கப்பட்டதையும், அது மறைக்கப்பட்டதையும் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், அதனை ரசிகர்கள் கொண்டாடும் வகையிலேயே கதையில் புனைவு கலந்துள்ளது.

மங்காத்தா, சூது கவ்வும் படங்களின் முடிவு ஆண்டி-ஹீரோதனமாக அமைந்தது பெருமளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ஆனாலும், உண்மைக் கதை என்றொரு அம்சத்தை ‘குருப்’ கொண்டிருப்பது, இக்கொண்டாட்டத்தின் பின்னுள்ள மனநிலையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.

  • லத்திகா
You might also like