தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து மாநிலம் முழுக்கப் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடந்த 5 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அதிலும் நவம்பர் 10, 11 ஆம் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகி விட்டது.
இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், சசிகலா சென்னை தியாகராய நகர் கிரியப்பா சாலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார்.
காலை 9 மணிக்கு மழையினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் வழங்கிய சசிகலா, மக்களுக்கு சாப்பாடு, துணி, பால், பிஸ்கட் போன்ற பொருட்களை வழங்கினார்.
தி.நகரைத் தொடர்ந்து, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அசோக் நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் சசிகலா, அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க இருக்கிறார்.
சசிகலாவுடன் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர் டாக்டர் குமார் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்து நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.