– உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை
வட மாநிலங்களில் ‘கர்வா சவுத்’ எனப்படும் கணவர் நலனுக்காக மனைவி விரதமிருந்து பூஜை செய்யும் விழாக் காலத்தை குறிக்கும் வகையில் டாபர் நிறுவனம் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது.
அதில், கணவன், மனைவி போல இரு பெண்கள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விளம்பரத்தைத் திரும்பப் பெறக்கோரி கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து விளம்பரத்தை டாபர் நிறுவனம் திரும்பப் பெற்றது.
இது குறித்து, வாரணாசியில் தேசிய சட்ட விழிப்புணர்வுத் திட்டத்தின் துவக்க விழாவில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “சமீபத்தில் ஒரு நிறுவனம், அதன் விளம்பரத்தை திரும்பப் பெற்றது.
அது, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் கர்வா சவுத் பூஜையை குறிக்கும் விளம்பரம். இதை சகித்துக் கொள்ளாத மக்களின் எதிர்ப்பால், விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது.
விழிப்புணர்வு என்பது பெண்களுக்கு மட்டுமே தேவை என கூற முடியாது; அது, ஆண், பெண் இருபாலாருக்கும் உரியது.
பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது அதற்கான விடையை தேட வேண்டும். அதற்கு, ஆண், பெண் ஆகியோரின் மனநிலை மாற வேண்டும்” எனக் கூறினார்.