நூல் வாசிப்பு:
“பத்திரிகையுலகம் வித்தியாசமானது.
அரசியல், சமூகத் தளத்தில் உயர் மட்டத்தில் இருக்கிறவர்களுடன் இருக்கிற நெருக்கம், யாரையும் விமர்சித்து எழுதி விடக்கூடிய சௌகர்யம், தான் சார்ந்திருக்கிற பத்திரிகைகள் வளர்த்திருக்கிற ‘இமேஜ்’ – இதெல்லாமே பத்திரிகையுலகில் நுழைகிறவனுக்குச் சுலபமாக ‘ஈகோ’வை வளர்த்து விடக்கூடிய விஷயங்கள்.
பல லட்சம் பேரைச் சென்றடைந்து சலனப்படுத்தக்கூடிய மீடியா பின்னணியில் இருக்கிறபோது இப்படித்தான் நடக்கிறது.
மிகவும் பரபரப்புடன் தன்னைக் காண்பித்தவாறு, தந்திரபூர்வமாகவும், எதிலும் வியாபார நோக்கம் பிதுங்கித் தெரிகிற ‘ஜெர்னலிச இயக்கத்தில்’ சமூக மதிப்புகள், உண்மை சார்ந்த தகவல்கள் இரண்டாம் பட்சமாகி வருகின்றன.
தெருவில் நடக்கும்போது நமது செருப்பின் ஒரு முனை அறுந்து விடுகிறது.
சாலையோரத்தில் உள்ள செருப்புத் தைக்கிற தொழிலாளியிடம் அறுந்த செருப்பைக் கொடுக்கிற போது, மடியில் ஒருவித நெருக்கத்துடன் வைத்தபடி செருப்பைத் தைக்கிறார்.
சிறு வேலை தான். இருந்தாலும் கவனம் முழுவதும் கவிந்த தொழில். அதில் காட்டப்படும் ஈடுபாடு, செய்தொழில் நேர்த்தி மனதில் நெகிழ்வை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது.
அந்த விதமான எளிமையான, பாசாங்கில்லாத தொழில் திறன் – பத்திரிகைத் தொழிலில் நமக்கு இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பிக் கொள்கிற போது – என்னையும் சேர்த்தே கூச்சப்பட வேண்டியிருக்கிறது.”
- விரைவில் ‘பரிதி பதிப்பகம்’ இரண்டாம் பதிப்பாக வெளியிட இருக்கும் ‘தமிழகம்- பிரச்சினைக்குரிய முகங்கள்’ புத்தகத்தின் – முதல் பதிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி.