– பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக் கல்வி ஆணையரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
“டெல்லியில் உள்ள கலாசார வளம் மற்றும் பயிற்சி நிறுவனத்தால், புதிய கல்விக் கொள்கை – 2020 அடிப்படையில், கலை மற்றும் கலாசாரம் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு, ஏழு கட்டங்களாக ‘ஆன்லைன்’ பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதலில் நவம்பர் 15 – 27 வரை 10 நாட்கள் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களின் பெயர்களை, பள்ளிக் கல்வி இயக்குனரக ‘இ-மெயில்’ முகவரிக்கு அனுப்ப வேண்டும். இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கை, அரியலுார், சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மற்றும் ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கைக்கு செயல் வடிவம் அளிக்கும் வகையில், அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை இணைத்து, இல்லம் தேடி கல்வி திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே துவக்கி வைத்துள்ளார்.
இதையடுத்து, புதிய கல்விக் கொள்கையின்படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வி ஆணையரகம் அறிவித்துள்ளது.