பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்போம்!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு ஏற்கனவே பல ஏரிகள் நிரம்பிவிட்டன. வட மாவட்டங்களிலும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்தம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக சென்னையில் பல இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் தலைமையில் வடகிழக்குப் பருவமழையையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை, தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அமைச்சர்கள், பல்வேறு துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், “இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் காலத்தில் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுப்பது மட்டுமல்ல, எத்தகைய பேரிடரையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

தமிழ்நாட்டில் 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது என்றும், இந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டிற்கு இயல்பான மழைப்பொழிவு கிடைக்கப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்திலேயே கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. 17 மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. எனவே, நாம் கவனத்துடன் பணியாற்ற வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம்.

இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளில் இருந்து வரும் முன்னெச்சரிக்கை செய்திகள், சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக, பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் நன்கு சேவையாற்றக் கூடிய தன்னார்வ தொண்டு அமைப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

சென்னையில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களும், 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோடு செயல்படவேண்டும்.

இந்த மையங்களை பொதுமக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த நேரத்தில் மீனவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தியாக வேண்டும்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும், வானிலை முன்னறிவிப்பு குறித்து, நவீன தொலைதொடர்பு சாதனங்கள் மூலமாகவும், மீன்வளத் துறை மூலமாகவும் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த மழைக்காலத்தில், அவர்களுடன் எப்போதும் தொடர்பிலிருந்து கொண்டேயிருக்க மீன்வளத் துறை தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் பகுதிக்கென தனித்தனியே பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடிசை பகுதிகள், கடலோர மீனவ குடியிருப்புகள் ஆகிய இடங்களின் நிலைமையை இந்த குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தூர்வாரப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், வரத்துக் கால்வாய்கள், நீர்வழி பாதைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கடந்த மாதம் 25-ம் தேதி சென்னையின் பல்வேறு இடங்களுக்கு நானே சென்று, நேரிடையாக பார்வையிட்டேன்.

மழை, வெள்ளநீர் தங்குதடையின்றி செல்லக்கூடிய வகையில் வேளச்சேரி ஏரி மற்றும் பக்கிங்காம் கால்வாயில் ஆகாயத் தாமரையை அகற்றும் பணியையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுகளை அகற்றும் பணியையும், நாராயணபுரம் ஏரியில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் பணியையும் நேரிடையாக சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதேபோல் நீங்கள் அனைவரும் பணிகளை முடுக்கி விட வேண்டும். செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை கடந்த 20-ம் தேதியன்று பார்வையிட்டு, உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மழைபெய்து வரும் நிலையில் பெரும்பாலான அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன.

எனவே, முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அணைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி, அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உபரி நீர் திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்க வேண்டும்.

பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும், தாழ்வாக செல்லக்கூடிய மின்கடத்திகளை சரிசெய்திடவும், பில்லர் பாக்ஸ்களை உயர்வான இடங்களில் வைக்கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழைநீர் தேங்குவதால் பயிர்கள் மூழ்கி சேதமாகும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, வடிகால்களை தூர்வார வேண்டும். அறுவடை செய்த நெல்மணிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மழை காலங்களில் நோய்கள் அதிகம் உருவாகி, பரவிடக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உயிர்காக்கும் மருந்துகள், மருந்து உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருந்தும், ஆக்சிஜன் உருளைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும்.

இதற்கு அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து துறைகளுடைய ஒருங்கிணைப்புதான், அனைத்து பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அனைத்து பாதிப்புகளையும் தடுக்கும்.

‘இயற்கையை இணைந்து வெல்வோம்’ என்ற அந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்” எனக் கூறினார்.

You might also like