பெண் விடுதலை எப்போது சாத்தியம்?

அமிர்தம் சூர்யா எழுதும் நினைவை வீசும் சந்திப்பு தொடர் – 18 / எழுத்தாளர் இமையம்

****

கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் என்று ஆறு நாவல்களையும் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல், சாவுச் சோறு, நறுமணம், நன்மாறன் கோட்டை கதை என்று ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும்,

பெத்தவன் என்ற நெடுங்கதையையும் எழுதியிருக்கிற இமையத்திற்கு 2018 ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கியது.

சமீபத்தில் ‘செல்லாத பணம்’ நாவலுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றார் இமையம்.

வரலாற்றிலேயே தமிழ் இலக்கிய உலகில் ஒரு தலித் (ஆதிதிராவிடர்) பெறும் முதல் சாகித்ய அகாடமிவிருது இது தான். திராவிட எழுத்தாளர்களில் பாரதிதாசனுக்கு பின் இரண்டாவது நபராக இமையம் இவ்விருதைப் பெறுகிறார்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட எழுத்தாளர் இமையம் உடனான எனது சந்திப்பூவின் நினைவு வாசம் தான் இந்தப் பேட்டி.

2016 – ல் முகநூலில் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினேன்.

அன்புக்குரிய இமையம் அண்ணாச்சிக்கு

வணக்கம்.

உங்கள் அன்புத் தம்பி அமிர்தம் சூர்யா எழுதும் மடல்,

உயிர்மை கூட்டத்தில் உங்களோடு ஒரே மேடையில் நானும் கலந்துக்கொண்டு பேசியது பெருமை. ஒரு விஷயத்தில் எனக்கு எழுந்த சந்தேகத்தைத் தெளிவுப்படுத்த வேண்டும்.

அன்று நடத்தது வெளீயீட்டு விழாவா? விமர்சன கூட்டமா? அறிமுக நிகழ்வா? அல்லது திறனாய்வு அரங்கமா?

ஒவ்வொன்றுக்கும் பேசும் தொனி, வெளீப்பாட்டு முறை மாறும் அல்லவா. கரை வேட்டி கட்டிக் கொண்டதாலேயே அரசியல்வாதி மாதிரி ஏண்ணா அப்படி பேசினீங்க..

அது ஒரு விழா… பெண்கள் எழுத வருவதே அபூர்வம், அதிலும்  புத்தகம் எழுதும் அளவுக்கு முன்னேறியது அருமை. காலம் இன்னும் இருக்கும்.

தானா சரியாவங்க.. அதுக்குள்ளே கத்தி, கபடாவெல்லாம் எடுத்து வந்து ரணகளமாக்கணுமா?

மலேசியக் கவிஞர் யோகியின் கவிதை நூல் பற்றிப் பேசினீங்க. அந்த நூலில் 5 கவிதைகள் கூடவா சிலாகித்துப் பேச முடியாது?  “தேறாது, இன்னும் படிக்கனும், சரி இல்லை…” –  ஒரு மகிழ்ச்சியான விழாவில் இப்படியா பேசுவது?

எல்லாக் கவிதையும் கோளாறு என்றால் அதை நூலாகப் போட்ட நண்பர் மனுஷ்ய புத்திரன் மதிப்பீடு தப்பா? அல்லது கவிதையைக் கொண்டாடத் தெரியாத நாவலாசிரியரை மனுஷ்ய புத்ரன் அழைத்தது தப்பா?

புதிதாக எழுத வந்த பெண்ணின் நூலை சபையில் நாகரிகமின்றி இப்படியா மட்டையடியாக விமர்சிப்பது?

இயல்பிலேயே பெண்கள் மீது இருக்கும் உங்கள் கோவத்தை, காழ்ப்பை நூலின் மீது காட்டக்கூடாது

நீங்கள் சிறந்த நாவலாசிரியர். சிறந்த திமுக தொண்டர். அன்பானவர். ஆனால். சிறந்த கவிதை ரசிகர் இல்லை. சிறந்த விமர்சகர் இல்லை. இனி தயவு கூர்ந்து கவிதை நூலை விமர்சிக்காதீர்.

இதைக்கூட சொல்லலேனா என் கவிதை மதிப்பீடு மீதான தப்பான அபிப்ராயம் வந்துடும். அது ஒண்ணு தான் என் சொத்து. அதுக்கு தான் இதை எழுதுறேன்.

அன்புடன் அமிர்தம் சூர்யா.

– இவ்விதமாக எழுதி முகநூலில் போஸ்ட் செய்தேன். அன்று இரவு 11 மணிக்கு இமையத்திடம் இருந்து போன் வருகிறது.

அடடா முகநூலில் நாம் போட்ட போஸ்ட்டுக்கு  திட்டத்தான் போன் போடுறாரு போல. என்ன திட்டப் போறாரோ?

ஒரு சீனியர் ரைட்டரை இப்படி எழுதியிருக்கக் கூடாதோ. நீ என்னடா பெரிய அப்பா டக்காரான்னு பொறிஞ்சி தள்ளிடுவாரோ? எப்படி இதை எதிர்கொள்வது என்று பயந்து தான் போன் எடுத்தேன்.

மறுமுனையில் ”டேய் தம்பி சூப்பர். இப்படித்தான் தில்லா நெஞ்சில உரத்தோடு எழுதணும். முகநூலில் பார்த்தேண்டா” என்றார். நான் பிரமை பிடித்தவன் போல் “அண்ணா ஸாரிண்ணா” என்றேன்.

“எதுக்கு டா ஸாரி. ஒரு எழுத்தோ, பேச்சோ அதுகுறித்து எதாவது ஒரு வகையில் பேசப்படணும். என்ன எழுதினாலும் பேசினாலும் அமைதியா எருமாடு மாதிரியா கிடக்கிறது?

என்னை ஏதும் கண்டுக்காம இருந்தவனுங்க, இப்போ எனக்கு போன் போட்டு சூர்யா உன்னைத் திட்டியிருக்கான் போய்ப் பாரு. என்னேன்னு கேளுன்னு சொன்னபிறகு தான் வந்து பார்த்தேன்.

இந்த எதிர்வினை கூட நல்லாதாண்டா இருக்கு. அண்ணனுக்கு உன்மேல எந்தக் கோவமும் இல்லை. வருத்தப்படாதே சரியா? அதைச் சொல்ல தான் போன் போட்டேன். நீ நீயா இரு” என்று சொல்லி வைத்தார்.

நீங்களே சொல்லுங்க நண்பர்களே… ஒரு சீனியர் ரைட்டர் இது மாதிரி எழுதி, எதிர்த்தவனை  கருத்தியல் ரிதியாக எதிர்கொண்டு, பாராட்டி உறவு வளர்க்கும் எழுத்தாளர்கள் வேறு யாராவது உண்டா? அபூர்வம்தானே. அதான் அண்ணன் இமையம். அதன் பின் அவருடனான நெருக்கம் அதிகமானது.

அவரிடம் ஒரு பேட்டியில்… உங்களை தலித் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தலாமா? என்று கேட்டேன்.

அண்ணன் கோபமாயிட்டார், முதல் முறையாக.

பின் சாந்தமாகி.. “டேய் தம்பி (என்னை உரிமையோடு டேய் தம்பி என்று அழைக்கும் ஒரே எழுத்தாளன் இமையம் மட்டுமே. அந்தச் சொல் விளிப்பில் நான் மயங்குவதும் உண்டு.) நான் தமிழ் மொழியில் எழுதுகிற எழுத்தாளன். என்னுடைய எழுத்து தமிழ் இலக்கியம்.” என்றார் தீர்க்கமாக.

தொடர்ந்து தலித் இலக்கிய விரோதியாகவே அடையாளப்படுத்தப்பட்டு வருகிறீர்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்றபோது,

“நான் இதுவரை ஐந்து நாவல்களையும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும், பெத்தவன் என்ற நெடுங்கதையையும் எழுதியிருக்கிறேன். இவையெல்லாம் என்னுடைய அறிவின் பலத்தால், சிந்தனையின், கற்பனையின், மதி நுட்பத்தின் பலத்தால் எழுதப்பட்டதில்லை.

எழுத்தாளனாகியே தீரவேண்டும் என்ற வேட்கையினாலோ, எழுத்தாளனாகிவிட்டேன், அதனால் தொடர்ந்து எழுதித்தான் தீரவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ எழுதப்பட்டதல்ல.

நடைமுறை சமூகத்தின் நிஜ வாழ்க்கை என்ற கந்தக நெருப்புத்தான் என்னை எழுதத் தூண்டியது. இப்போதும் எழுதத் தூண்டிக்கொண்டிருக்கிறது.

நான் வாழ்கிற நிகழ்கால சமூகத்தை என்னுடைய சொந்த கண்களாலேயே விருப்பு வெறுப்பின்றி பார்க்கிறேன்.

மார்க்சிய, பெண்ணிய, தலித்திய, நவீனத்துவ, பின்நவீனத்துவ, இருத்தலியல், சர்ரியலிசம் என்பன போன்ற எந்த கண்ணாடியைப் போட்டுக்கொண்டும் இதுவரை நான் சமூகத்தைப் பார்த்ததில்லை.

இனியும் அவ்வாறு பார்க்கப்போவதில்லை. இலக்கியத்தில் சார்பு நிலையைவிட முக்கியமானது நடுநிலைமை.

நான் வாழும் சமூகத்தை, உலகத்தை மேலும் மேலும் புரிந்துக்கொள்வதற்கு என்னுடைய எழுத்துக்கள் உதவுகின்றன.

நான் எழுத்தை, இலக்கியத்தை கலாச்சார செயல்பாடாகவே கருதுகிறேன். எழுத்தில் நான் ஒரு போதும் எலிகளை சுடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

தன்னை ஒரு தலித் இலக்கியவாதி, தலித் எழுத்தாளர் என்று சொல்லி சலுகை பெறும் நபர்களை அறிவேன். ஆனால் எப்போது கேட்டாலும் நான் தலித் இலக்கியவாதி இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

சரி, இன்றைய தலித் இலக்கியத்தின் வீழ்ச்சிக்கு எது, யார் காரணம்? அதையாவது வெளிப்படையா சொல்லுங்களேன்னு? என்று போனில் கேட்டபோது,

“சமூகச் சூழல்தான். தமிழில் தலித் இலக்கியம் உருவாக யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்கள்தான் காரணம். நான் தலித் எழுத்தாளர், கவிஞர் என்று முன்பு வர்ணித்துக் கொண்டவர்கள், ஊடக, புகழ் வெளிச்சம் தேடிக்கொண்டவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

நான் தலித் எழுத்தாளர், கவிஞர் என்று ஏன் இப்போது யாரும் தங்களை பிரகடனப்படுத்திக் கொள்வதில்லை? அல்லது தயங்குகிறார்கள். மரமும் இல்லை. அது வேரோடு சாயவும் இல்லை.” என்றார்.

ஒரு முறை இமையம் முகநூல் பதிவுகளைச் சாடி இருந்தார்.

ஏன்ணா தொடர்ந்து முகநூல் பதிவுகளை, எழுத்தாளர்களைத் திட்டிக்கொண்டே இருக்கீங்க, ஏன்? என்ன ஆச்சி உங்களுக்கு? என்றபோது,

“முகநூல் பக்கத்திற்கு, முகநூல் பதிவாளர்களுக்கு நான் எதிரியல்ல. முகநூல் பக்கம் என்பது ‘சமூக வலைத்தளம்’ என்று சொல்லப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் என்ன மாதிரியான செய்திகளை பதிவிடலாம் என்ற மனக்கட்டுப்பாடு வேண்டும்.

தனிமனித வாழ்வில் இருக்கக்கூடிய ரகசியங்களை வெளியிடுவது அவ்வளவு சரியல்ல என்பது என் எண்ணம்.

ஒரு கவிஞர், எழுத்தாளர் ஒரு நாளைக்கு இருபது பதிவுகளைப் பகிற்கிறார். அந்த இருபதில் எது முக்கியம்? எது முக்கியமல்ல?

அடுத்தடுத்த பதிவிடுகள் வரும்போது முந்தைய பதிவுகள் ஒவ்வொன்றாக செத்துக் கொண்டேயிருக்கின்றன.

உடனுக்குடன் செத்துப்போகிற தகவல்களை எழுதுகிறவர்களா கவிஞர்கள், எழுத்தாளர்கள்?” என்றார்.

“அண்ணா, இன்றைய இலக்கியப் போக்கில் முகநூல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் ஜனநாயகத் தன்மையை எதிர்க்காதீங்க” என்றேன்.

அதற்கு அவர், “தம்பி முகநூலில் லைக் போடுவது, கமெண்ட் போடுவது தான் இப்போ இலக்கியப் போக்காக இருக்கிறது. எந்த இஸமும் இல்லாத வெற்று மைதானமாக இருக்கிறது. படைப்புகள் செத்துப் போகும் காலம் இது” என்று போனை வைத்து விட்டார்.

இப்படி உணர்ச்சி மிக்க, மனதில் தோன்றியதை வெளிப்படையாகச் சொல்லி விடும் மனத்துக்கு சொந்தக்காரர் இமையம்.

எழுத்தாளர்களின் படைப்பு இந்தச் சமூகத்துக்கு என்ன நன்மை செய்தது, சாதித்தது என்று கேட்டால் நேரடியான பதில் சொல்லமுடியாது. அது அகவயமான மாற்றத்தைத் தந்துள்ளது என்று தான் சொல்ல முடியும்.

ஆனால், இமையம் எழுத்து அப்படி அல்ல. அவரின் கோவேறு கழுதைகள் நாவலைப் படித்துவிட்டு தமிழக அரசு புதிரை வண்ணார் நல வாரியம் அமைத்ததும், அந்த வாரியம் இன்று வரை சிறப்பாக செயல்படுவதும் அவர் எழுத்து தந்த மாற்றம்.

தமிழகத்தில் இது போன்ற சாதனையை வேறு எந்த நாவலும் நிகழ்த்தியதில்லை என்று சொல்லலாம்.

உங்கள் நாவலில் சாதி, பொருளாதாரம், ஆதிக்கம் இவற்றால் அதிகம் பாதிப்பது பெண்களாக இருக்கிறார்கள். ஒரு மாறுதலுக்கு ஒரு புரட்சிப் பெண்ணை, சாதனைப் பெண்ணை ஒரு முன்னுதாரணப் பெண்ணை ஏன் முன் வைப்பதில்லை? என்று கேட்டபோது,

“உண்மையும் யதார்த்தமும் அப்படியாகத்தானே இருக்கிறது.

நீங்கள் சொல்வது போல் ஒரே ஒரு முன்னுதாரணப் பெண்ணை கற்பனையாகக் காட்டுவது ஏமாற்று வேலையல்லவா. அப்படி காட்டுவது என் வேலையல்ல.

தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வை வலியைக் காட்டுவது தான் என் வேலை” என்றார்.

ஆனாலும், நான் விடாமல், நாவலில் யதார்த்தம் மட்டும் போதுமா ஏன் கற்பனையை வருங்கால கனவில் கலக்கக் கூடாதா? என்றேன்.

“கற்பனை கலந்தாலும், யதார்த்தம் இருந்தாலும் மட்டும் அது நாவல் அந்தஸ்தை அடையாது. கற்பனையையும் யதார்த்தையும் சமமாக கலப்பதே வெற்றிப்பெற்ற நாவலாக அமையும்.” என்று புதியதாக எழுத வருபவர்களுக்கு புதிய நாவல் இலக்கணம் சொன்னதாகவேப் பட்டது.

பெண் விடுதலைக்கு, பெண் முன்னேற்றத்துக்கு இமையம் சொல்லும் வழி, பாதை, தீர்வு என்பது சாதி ஒழியவேண்டும்; கூடவே சாதிச் சடங்கு ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும்; கூடவே மதச் சடங்கு ஒழியவேண்டும். அப்போது தான் பெண் விடுதலை சாத்தியம்.

பெண்ணை அடிமைப்படுத்துவது சாதியும் மதமும் தான். ஆக, இது நடக்கும் போது அதற்கு இணையாக பெண்களுக்கு கல்வியும் பொருளாதாரமும் சேரும் போது முழு விடுதலைக் கிடைத்து விடும் என்பது தான்.

சாதிச் சடங்கு ஒழியட்டும். மதச் சடங்கு ஏன் ஒழியவேண்டும் என்று சொல்கிறீர்கள்? என்று ஒரு உபகேள்வி என்னுள் இருக்கும் மத உணர்வால் எழுந்ததும், கல்வியும் அதிகாரமும் பொருளதாரமும் பெற்றால் இந்த விடுதலை நடக்காதா? என்று மாற்றிக் கேட்டேன்.

அப்போது அவர் திட்டவட்டமாக,

“நடக்காது. அதிகாரம், பணபலம், செல்வாக்கு உள்ள இடத்தில் சாதி பணிந்து சமரசம் செய்து கொள்ளும். ஆனால், விடுதலை கிடைக்காது. ஒரு ஐஏஎஸ் படித்த வசதியான பெண், ஐஏஎஸ் படித்த வசதியான அதே சாதியைச் சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்யும்போது சீதனமாக ஆணுக்கு ஏன் ஒரு பிளாட், கார் கொடுத்து 100 சவரன் நகையோடு போகிறாள்.

அது விரும்பி அவர்களாகக் கொடுத்தாலும், அதை ஏன் கொடுக்கவேண்டும். அந்தச் சமூக நம்பிக்கையை, சடங்கை ஏன் செய்யவேண்டும்.

அந்தச் சடங்கு இன்னும் பெண் இரண்டாம் தர பிரஜை தான்.

இதையெல்லாம் ஆணுக்கு செய்தே ஆகவேண்டும் என்ற மனக்கட்டமைப்பு தானே. அப்படியானால் இன்னும் பெண் விடுதலையைப் பெறவே இல்லை என்பது தானே.

கல்வி, பொருளாதாரம், அதிகாரம் என அனைத்தும் பெற்றபின் கூட அவள் ஆணிடமிருந்து விடுதலைப் பெறவில்லை என்பது தான் இந்த உதாரணம் காட்டும் மறைமுக உண்மை” என்றார்.

ஆனாலும், நான் அவரை மடக்கும் விதமாக, அரசியலில் அதிகாரத்தை மட்டும் அதிகமாக பெண்கள் கைப்பற்றினால், பெண்களுக்கு விடுதலை உடனடி சாத்தியமில்லை என்றா சொல்கிறீர்கள்? என்றேன்.

“அரசியல் அங்கீகாரம் மட்டுமே சரியானது அல்ல. அப்படியே அதிகாரத்துக்கு வந்தாலும் அவள் அதிகார கைப்பாவையாக மாறிப்போவாள்.

சமூகத்தில் சட்டத்துக்கென்று, அதிகாரத்துக்கென்று சில எல்லைகள் உண்டு. அதை மீற முடியாது.

ஆக, சாதி, மத சடங்கே கல்வி, பொருளாதார கைப்பற்றலே அதாவது, இந்தக் கூட்டமைப்பில் தான் விடுதலை சாத்தியம்” என்றார்.

ஒருமுறை கல்கிக்கு ஜாலி பேட்டிக்கு முயற்சி செய்தேன்.

எஸ்.ரா., ஜெயமோகன் மாதிரி ஏன் நீங்க சினிமாவுக்கு வரல?, இல்ல, அப்துல் ரகுமான் மாதிரி சிற்பிக்கு அம்மி கொத்தும் வேலை எதுக்குன்னு தப்பிப்பீங்களா?

தாமரைக்கனி போல் உங்க மோதிரத்தால் யாரையாவது குட்டியதுண்டா?

ஏன் ஒரிஜனல் அரசியல்வாதியா ஆக முடியல?

வீட்டில் மட்டும் சாமி கும்பிடுவீங்களா?

-இப்படியெல்லாம் கேட்டேன்.

மனுஷன் எதைக் கேட்டாலும் சமூகத்துடனே முடிச்சிப் போட்டு சீரியஸாகவே பேசினார்.

ஒருமுறை அண்ணா, “இமையம் எழுத்தாளர் என்று சொல்லாமல், அவர் ஒரு திமுக எழுத்தாளர் என்று பலரும் அடையாளப் படுத்துவதில் உங்களுக்கு சங்கடமோ, வருத்தமோ இல்லையா? என்று துடுக்குத்தனமாக ஒரு கேள்வி கேட்டேன்.

பிறகு, அதை ஏன் கேட்டோம் என்று வருந்தினேன். அவர் சொன்ன பதில் இது தான்:

“இடதுசாரி எழுத்தாளர், தலித் எழுத்தாளர், பெண்ணிய எழுத்தாளர், நவீன எழுத்தாளர் என்று சொல்வதில் மட்டும்தான் பெருமை இருக்கிறதா? தி.மு.க. எழுத்தாளர் என்று சொல்வதில் பெருமை இல்லையா?

நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன். கடைசிவரை திமுகவில் தான் இருப்பேன்.

நான் இறந்தபிறகு என் பிணத்தின் மீது தி.மு.க. கொடி தான் நிச்சயம் போர்த்தப்படும். அந்தக் கொடியுடன் தான் என் இறுதி ஊர்வலம் நடக்கும்” என்று முடித்தார்.

எழுத்தாளர் இமையத்தின் பரிணாமம் பரிமாணம் என்பதைவிட திமுக என்ற இயக்கத்தின் ஆணிவேர், கிளைவேர் எது?, எப்படி இந்த இயக்கம் இன்னும் பல சோதனைகளுக்கு பின்பும் எப்படி வீறுகொண்டு எழுந்து நிற்கிறது என்பதை அப்போது அவரின் பதிலில் அவதானிக்க முடிந்தது.

(நினைவை வீசும் சந்திப்பூ தற்காலிகமாய் நிறைவுற்றது)

You might also like