பிழைத்துக் கொண்ட திரையரங்குகள்!

கொரோனா பரவல், தமிழக சினிமா தியேட்டர்களை விழுங்கி விடும் என்று திரை உலகத்தினர் கன்னத்தில் கை வைத்துக் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.

ஆனால், யாரும் எதிர் பாராத வகையில் பிழைத்துக்கொண்டது.

இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

அலசலாம்.

கொரோனா முதல் அலையின் போது மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது.

சின்னப் படங்களுடன் பெரிய படங்களும் அந்த நேரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்ததால் தியேட்டர்கள் காத்தாடின.

இந்த ஆண்டு ஜனவரியில் 13 ஆம் தேதி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களும் சம்பாதித்தார்கள்.

(மாஸ்டர் – தியேட்டர்கள் மூலம் 300 கோடி வசூலித்துள்ளதாக தகவல்)

கொரோனா இரண்டாம் அலை மீண்டும் முடக்கத்தை ஏற்படுத்தியது. தியேட்டர்கள் மட்டுமின்றி அனைத்துத் துறைகளும் ஸ்தம்பித்தன. நிலைமை ஓரளவு சீரடைந்த பின், கடந்த ஆகஸ்டு மாதம் 23ஆம் தேதி தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

50 சதவீதப் பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஒரே ஒரு நிபந்தனையை தமிழக அரசு விதித்திருந்தது.

ஆரம்ப நாட்களில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் 10 சதவீத இருக்கைகள் கூட நிரம்பவில்லை.
ஆபத்பாந்தவனாய் – அனாதை ரட்சகனாய் ‘டாக்டர்’ வந்தார். சிவகார்த்திகேயன் படத்தைத்தான் குறிப்பிடுகிறோம். கூட்டம் கூட்டமாய் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்தார்கள்.

குடும்பத்தோடு வந்து, தியேட்டரில் பாப்கார்ன் கொரித்தார்கள். தியேட்டர்களுக்கு ‘டாக்டர்’ குளுக்கோஸ் ஏற்றினார் என சொன்னால் தப்பில்லை.

அந்தப் படத்துக்கு கிடைத்த நல்ல விமர்சனம் மட்டுமல்லாது, ஓடிடி தளங்களில் படம் பார்த்து ஏற்பட்ட சலிப்பும், மக்கள் தியேட்டர்களுக்கு வர காரணமாக இருந்தது.

(டாக்டர் 10 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன)

அரண்மனை-3 யும் தியேட்டர்களுக்கு கும்பலை இழுத்தது. இந்த இரு படங்களும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நம்பிக்கை விதையை விதைத்துள்ளது.

தீபாவளி பண்டிகை தியேட்டர்களை முன்பு இருந்த வசந்த காலத்துக்கு கொண்டு செல்லும் என நம்பப்படுகிறது.

அதற்கு இரண்டு காரணங்கள்.

குடும்ப ஆடியன்சை வரவழைக்கும் ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இன்னொரு காரணம் – தியேட்டரில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.

குறைந்த பட்சம் ஒரு வாரமாவது தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்கும். 600 முதல் 700 தியேட்டர்களில் ‘அண்ணாத்த’ ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

திரையரங்க உரிமையாளர்கள் முகத்தில் மலர்ச்சியும் தெரிகிறது. ‘அண்ணாத்த’ படத்தின் தொடர்ச்சியாக அஜீத்தின் ‘வலிமை’ வெளியாக உள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள், சினிமாவை பிழைக்க வைத்த மாதங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

-பி.எம்.எம்.

You might also like