எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்தநிலையில், அடுத்த படத்தைத் தொடங்குவதற்கு முன் தனது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கில் சுற்றிவரும் தனது பயணத்தை அஜித் தொடங்கியுள்ளார்.
பைக் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித், ஷூட்டிங் இல்லாத நாட்களில் அதிகம் வெளியில் வருவதில்லை. ஆனால், சமீப காலமாக துப்பாக்கிச் சுடுதல் மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றிற்காக வெளியில் வருவதைப் பார்க்க முடிகிறது.
வலிமை பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, பைக்கில் 67 நாடுகளைச் சுற்றி வந்த சாகசப் பெண் யாசர்லூவைச் சந்தித்து, பல நாடுகளுக்கு பைக் டிராவல் செய்த அனுபவங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.
அப்போது அவருடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகின.
இதனிடையே, தற்போது தனது பைக் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ள அஜித், இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைக்குச் சென்ற அஜித், அங்கு தேசியக்கொடி ஏந்தி நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், நேபாள தலைநகர் காட்மாண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
பைக்கில் நிழலில் சாய்ந்தவாறு அமர்ந்து தண்ணீர் குடிக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதேபோல தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் பயணம் செய்யும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், “தன்னுடைய விருப்பப்படி வாழ்வதிலிருந்தும், தன்னுடைய ஒவ்வொரு கனவையும் நனவாக்குவதிலிருந்தும் அஜித்தை எதுவும் தடுக்க முடியாது. அஜித் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.