மீண்டும் ஒரு கிரிக்கெட் யுத்தம்!

மீண்டும் ஒரு கிரிக்கெட் யுத்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி துபாய் நகரில் இன்று நடக்கிறது.

கிரிக்கெட், ஹாக்கி, கபடி என்று இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தப் போட்டியில் ஆடினாலும் அனல் பறப்பது வழக்கம். அதே அனல் இன்றைய போட்டியிலும் பறக்கும் என்பது நிச்சயம்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அது ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி, இந்தியாவுடன் ஒருமுறைகூட பாகிஸ்தான் அணி வென்றதில்லை.

1992-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபோதும், இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் அதனால் வெற்றி பெற முடியவில்லை.

இந்த சரித்திரத்தை இம்முறையாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பாகிஸ்தான் வீரர்களும், இம்முறையும் பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் இந்திய வீரர்களும் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மற்ற போட்டிகளைப் போல்தான் இந்தப் போட்டியையும் பார்க்கிறோம். கிரிக்கெட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று செய்தியாளர்கள் சந்திப்புகளில் பேசினாலும், இரு அணிகளின் கேப்டன்களுக்கும் இது பெரும் கவுரவப் பிரச்சினையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2007-ம் ஆண்டு நடந்த முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, அதன்பிறகு  டி 20 உலகக் கோப்பையை வெல்ல முடிந்ததில்லை.

இந்தச் சூழலில் உலகக் கோப்பைக்குப் பிறகு, டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட் கோலி, கோப்பையுடன் விடைபெற விரும்புகிறார். அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கதையும் இதேதான்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் பயிற்சியாளராக இருந்து பல தொடர்களில் வெற்றிகளைக் குவித்த ரவி சாஸ்திரியும் டி20 உலகக் கோப்பையை வென்று பதவியில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறார்.

அப்படி கோப்பையை வெல்லாவிட்டாலும், பாகிஸ்தானையாவது வெல்ல வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கும்.

இந்திய அணியைப் பொறுத்தவரை மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் வகையிலான பேட்டிங் வரிசை உள்ளது. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி என்று இந்திய அணியின் பேட்டிங் அடித்தளமே மிகவும் வலிமையாக உள்ளது.

இவர்கள் நிலையாள அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தால் அதன் மீது மிகப்பெரிய இன்னிங்ஸை கட்டமைக்கும் ஆற்றலுடன் சூர்யகுமார் யாதவ், பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் பொறுத்தவரை, இந்தியாவின் மிகப்பெரிய கேள்வி ஹர்திக் பாண்டியாதான். இந்தியாவின் தலைசிறந்த இளம் ஆல்ரவுண்டராக கருதப்பட்ட ஹர்திக் பாண்டியா, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பந்துவீசாமல் இருக்கிறார்.

இதனால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஒரு கை குறைகிறது. 5 பேரை மட்டுமே வைத்து ஒப்பேற்ற வேண்டியுள்ளது. அந்த 5 பந்துவீச்சாளர்கள் தவறு செய்தால், அதற்குப் பதில் யாரைப் பந்துவீச வைப்பது என்ற மிகப்பெரிய கேள்வி அணியின் முன் உள்ளது.

மேலும் பாண்டியாவால் பந்துவீச முடியாது என்றால் அவருக்கு பதிலாக முழுநேர இஷான் கிஷனை ஆடவைத்தால் என்ன என்ற எண்ணமும் அணி நிர்வாகத்திடம் உள்ளது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை துபாய் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தக்கூடும்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் வெற்றி பெற்றிருப்பதாலும், போட்டி நடக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிக்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கியிருப்பதும் இந்தியாவுக்கு கூடுதல் பலத்தைத் தரும்.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை நடக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை அவர்களின் இரண்டாவது தாய்வீடு என்று சொல்லலாம்.

தீவிரவாதம் காரணமாக பாகிஸ்தானுக்கு பல கிரிக்கெட் அணிகளும் செல்லாத நிலையில், அந்த அணி தங்கள் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் அடி வருகிறது.

எனவே இங்குள்ள மைதானங்கள் அவர்களுக்கு அத்துப்படியாக உள்ளது.

பாகிஸ்தானின் பேட்டிங் வரிசை, கேப்டன் பாபர் அசாமை நம்பியுள்ளது. கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல்களில் சமீப காலமாக விராட் கோலியை முந்திச் செல்லும் பாபர் அசாம் சிறப்பாக ஆடினால், அவரைச் சுற்றி நின்று திறமைகாட்ட முகமது ரிஸ்வான், ஷடப் கான், பசர் சமான் என்று பலரும் உள்ளனர்.

பேட்டிங்கில் இந்தியாவுக்கு இணையாக இல்லாவிட்டாலும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு மிகவும் வலுவாக உள்ளது.

ஷாஹீன் ஷா அப்ரிடி, ஹாரில் ராஃப், ஹசன் அலி ஆகியோரின் பந்துவீச்சு நிச்சயம் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.

இந்தச் சவாலை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

– பிரணதி

You might also like