தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நல்லது. விவசாய வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாட்டிலும் மழை பெய்ய வேண்டியது அவசியம். மழைக்காலத்தைப் போன்று மகிழ்ச்சியான காலமும் இருக்க முடியாது.
சில்லென்ற காற்று. பலத்த சத்தத்துடன் பெய்யும் மழை, குளிர்ச்சியான சூழல், எங்கெங்கும் பசுமை என்று மனதைக் கொள்ளை கொள்ளும் பல விஷயங்கள் மழைக்காலத்தை இனிமையாக்குகின்றன.
அதே நேரத்தில் ஒருசில சிக்கல்களும் மழைக்காலத்தில் உள்ளன. வெயில் காலத்தைவிட மக்களை அதிக நோய்கள் தாக்குவது மழைக்காலத்தில்தான்.
டெங்கு, மலேரியா, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என பல்வேறு பெயர்களில் நோய்கள் பேயாட்டம் போடுவது இந்தக் காலத்தில்தான்.
அதிலும் இப்போது இந்த நோய்களுக்கெல்லாம் அண்ணனாக கொரோனா தொற்று வேறு வந்து நிற்கிறது.
பெரியவர்களே இந்த காலகட்டத்தில் நோய்களால் கடுமையாக பாதிக்கப்படும்போது சிறு குழந்தைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
அவர்களை பல்வேறு நோய்கள் தாக்கும் காலமாக மழைக் காலம் உள்ளது. மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
உணவுகள் ஜாக்கிரதை
மழைக்காலத்தில் சூடாக எதையாவது சூடாக சாப்பிட குழந்தைகளுக்கு பிடிக்கும். அதிலும் தெருவோர பஜ்ஜி கடைகளிலோ, பானிபூரி கடைகளிலோ வாங்கிச் சாப்பிட அதிகம் விரும்புவார்கள். அதை ஊக்குவிக்காதீர்கள்.
அவர்கள் எந்தத் தண்ணீரில் அத்தகைய உணவுகளைச் செய்கிறார்கள் என்று தெரியாது. எனவே முடிந்தவரை சிரமம் பார்க்காமல் வீட்டிலேயே உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த ருசியான உணவுகளை செய்து கொடுங்கள்.
சளியைத் துரத்துவோம்
குழந்தைகளுக்கு பொதுவாக ஐஸ் கிரீம் பிடிக்கும். வெளியில் விளையாடுவதும், சாக்லேட் சாப்பிடுவதும் பிடிக்கும். அதேநேரத்தில் இந்த விஷயங்கள் எல்லாம் எந்தக் குழந்தைகளுக்கு பிடிக்கிறதோ, அந்தக் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு சளிப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, மழைக்காலத்தின் தொடக்கம் முதலே அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுள்ள சத்தான உணவுகளை வழங்குவது நல்லது.
குறிப்பாக வைட்டமின் சி அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்களின் சாறுகள் மற்றும் பால் ஆகியவற்றை குழந்தைகளுக்கு அதிகம் கொடுங்கள். அத்துடன் துளசி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றையும் அவ்வப்போது கொடுத்து வாருங்கள்.
விளையாட்டில் கவனம் தேவை
மழைக்காலத்தில் வெளியில் சென்று விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நம்மாலும் குழந்தைகளை கட்டுப்படுத்த முடியாது. இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
விளையாடச் செல்லும்போது, உடலில் பெரும்பாலான இடங்களை மறைக்கும்படியான ஆடைகளை அணிவிக்க வேண்டும். எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் இருப்பது நல்லது.
அத்துடன் மாலையில் வெளியில் விளையாடச் சென்றால், திரும்பி வந்ததும் வெந்நீரில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
இதனால் கிருமிகள் அவர்களைத் தாக்காமல் தடுக்கலாம். மிகவும் முக்கியமான விளையாடிவிட்டு வந்ததும், ஈரமாக இருக்கும் அவர்களின் உடைகளை மாற்றிவிடுங்கள்.
தண்ணீர் முக்கியம்
பொதுவாக மழைக்காலங்களில் அதிக தாகம் எடுக்காது. அதனால் குழந்தைகள் அதிகம் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதுபோன்ற சமயத்தில் நாம்தான் அவர்கள் தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
அவர்களைக் கட்டாயப்படுத்தியாவது அடிக்கடி தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். அப்படி கொடுக்கும் தண்ணீரை காய்ச்சி கொடுப்பதிலும் அக்கறை காட்டுங்கள்.
வெளியில் செல்லும்போதும் கொதிக்க வைத்த தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள்.
அழுக்குத் துணிகளை வீட்டில் சேராமல் பார்த்துக் கொள்ளுதல், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினால், இந்த மழைக்காலத்தில் நம் குழந்தைகளை நோய்கள் அண்டாது.
– பிரணதி