தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வரலாற்றுச் சாதனை!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவியது.

இதைதொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலர் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் பலர் உயிரிழந்தனர்.

கொரோனா பரவலைத் தடுக்க உடனடியாக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகின் பல நாடுகளில் நடந்து வந்தது. இந்தியாவிலும் மருந்தை கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கோவிஷீல்டு மருந்தை தயாரிக்க முன் வந்தது.

அதே நேரத்தில் புனேவில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வைராலஜி ஆய்வு நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து புதிய தடுப்பூசி மருந்தை உருவாக்கின. இதை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற பெயரில் தயாரித்தது.

இதைதொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி கோவிஷீல்டுக்கும், 3-ம் தேதி கோவேக்சினுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இரு தடுப்பூசிகளையும் மக்களுக்கு போடும் பணி ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதலாவதாக சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 3 கோடி சுகாதார ஊழியர்கள் ஊசி போட்டுக்கொண்டனர்.

இதன்பின்னர் பிப்ரவரி 2-ம் தேதி முன்கள பணியாளர்களுக்கு ஊசி போடப்பட்டது. மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அதன் பின்னர் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த தடுப்பூசிகளை குறிப்பிட்ட இடைவெளி விட்டு 2 முறை செலுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள 133 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற திட்டத்துடன் பணிகள் நடந்தன.

மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி போடப்பட்டது. ஆனாலும் தடுப்பூசி உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லாததால் உடனடியாக எல்லோருக்கும் செலுத்த முடியவில்லை. படிப்படியாக ஊசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தியாவில் 75 சதவீதம் மக்கள் ஒரு தடவையாவது தடுப்பூசி போட்டுள்ளனர். 31 சதவீதம் பேர் 2 தடுப்பூசியும் போட்டு இருக்கிறார்கள்.

ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கி 85 நாளில் 10 கோடி டோசை எட்டியது. அடுத்த 45 நாளில் 20 கோடியை எட்டியது. அடுத்த 29 நாளில் 30 கோடியை கடந்தது. அதன் பிறகு அடுத்த 24 நாளில் 40 கோடி ஆனது.

அதற்கடுத்த 20 நாளில் அதாவது ஆகஸ்டு 6-ந் தேதி 50 கோடி ஆனது. அடுத்த 76 நாட்களில் (இன்று) 100 கோடியை கடந்து இருக்கிறது.

நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில்தான் அதிகம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 12 கோடியே 21 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரா பிடித்துள்ளது. 9 கோடியே 32 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கிறது.

மூன்றாவது இடம் பிடித்துள்ள மேற்கு வங்காளத்தில் 6 கோடியே 85 லட்சம். 4-வது இடம் பிடித்துள்ள குஜராத்தில் 6 கோடியே 76 லட்சம் டோஸ்களும், 5-வது இடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தில் 6 கோடியே 72 லட்சம் டோஸ்களும் போடப்பட்டுள்ளன.

சீனாவில் கடந்த ஜூன் மாதம் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியது. இப்போது இந்தியா 100 கோடி டோஸ் தடுப்பூசியை செலுத்தி பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று மாலை வரை 5 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரத்து 307 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

You might also like