கண்ணதாசனும் கம்பனின் காதல் கவியும்!

கவிப்பேரரசர் கம்பர், கம்பராமாயணம் மட்டும் எழுதியவரல்லர். பல்வேறு தனிப்பாடல்களையும் அவர் பாங்காக எழுதியவர்.

கம்பரின் தனிப்பாடல் ஒன்றில் ‘வளை வளை‘ என்று வார்த்தைகள் சும்மா வந்து வந்து விளையாடும்.

அந்த தனி பாடலில் கம்பர் சொல்வது இதைத்தான்.

‘மாத்தத்தன் என்பவன் ஒரு மாபெரும் அழகன். அவன் மீது மையல் கொண்ட மகளிர் பலர் பலர்.
தாமரைப்பூ மேல் தவளை தத்தித் தத்தி விளையாடி, அதனால் தாமரை தேன் சொரியும் காவிரி (பொன்னி) நாட்டில், அந்த மாத்தத்தன் வீதியில் வந்து பல பெண்களின் வளையல்களை பறித்துப்போய் விட்டானாம்.

(அதாவது ஏக்கத்தால் பெண்களின் கைவளையல்களைக் கழன்று விழவைத்து விட்டானாம்).

ஒரு பெண் சொல்வதுபோல அமைந்துள்ள அந்த பாட்டில், ‘இருந்தவளை, போனவளை, என்னை, அவளை எல்லாம் ஏக்கத்தில் ஆழ்த்தி மாத்தத்தன் வந்து வளைபறித்துப் போய் விட்டான்’ என்கிறாள் அந்தப் பெண்.

கம்பரின் அந்தப் பாடல் இதோ.

‘இருந்தவளை போனவளை என்னை அவளை
பொருந்த வளைபறித்துப் போனான் – பெருந்தவளை
பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியில் வந்து’

கம்பரின் இந்தப் பாடலில் வளை, வளை என்று வார்த்தைகள் வந்துவந்து வட்டமிடுவது கவியரசர் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

அதனால் இதையே அகத்தூண்டுதலாகக் கொண்டு ‘புதிய பூமி’ (1968) படத்தில் அவர், ‘சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம்தொட்டு, என்னவளை காதல் சொன்னவளை நான் ஏற்றுக்கொண்டேன் வளையிட்டு’ என்று எழுதினார்.

அந்தப் பாடல் முழுக்க ‘வளை வளை’ என்று நம் உள்ளங்களை வளையாய் வளைத்திருப்பார் கவியரசர்.

இன்று கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள் (அக்டோபர் – 17, 1981)


நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like