நீ யார் என்பதை உணர்த்தும் ‘பேச்சு நடை’!

தொழில் நுணுக்கத் தொடர் – 13

கிடைக்கிற இடைவெளியில் காரியம் சாதிக்க, புத்திசாலித்தனமும், வார்த்தைகளில் ஷார்ப்னஸ்ஸூம் இருக்க வேண்டும். வளவளா வார்த்தைகளால் எந்தக் காரியமும் நடக்காது.

மணிரத்னத்தின் ‘குரு’ படத்தில் ஒரு டயலாக் இருக்கும்.

நேர்மையான மந்திரி அவர். ஹீரோ மேல் பெரிதாக அவருக்கு அபிமானம் இருக்காது. அவரை விரட்டுவதிலேயே குறியாக இருப்பார். கிடைத்ததோ பத்து நிமிடம், அதில் மிகப்பெரிய காரியம் சாதித்துவிடும் நோக்கத்தோடு இருப்பார் ஹீரோ.

“மினிஸ்டர் சார், தலைக்கு மேல ஒரு பெரிய சுமை இருக்கு. அதை எப்படி இறக்கி வைக்கிறதுன்னு தெரியலை. என்கிட்டே உங்க பெரியப்பா ஒரு புதையல் கொடுத்துட்டுப் போயிருக்கார். ரொம்ப கனமானது. அதை என்ன செய்யறதுன்னு தெரியலை. யார்கிட்டே கொடுக்கட்டும்..?”

இவர் இவ்வளவு நல்லவரா… அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவரா..? என்று பிரமிக்கும் மந்திரி, அவரது புதிய பிராஜெக்டுக்கு ஒப்புதல் அளித்து, ‘பிராஜெக்டைத் தொடங்குங்கள்… பூமி பூஜைக்கு வருகிறேன்’ என்று தேதி கொடுத்து விடுவார். மத்திய மந்திரி பூமி பூஜை செய்து துவக்கி வைக்கும் திட்டத்துக்கு ஆதரவு கட்டாயம் இருந்துதானே ஆக வேண்டும்..?

அங்கே தொடங்குகிறது ஹீரோவின் வெற்றி.

கிடைக்கிற கேப்பில், நறுக்கென நான்கு டயலாக்குகளில் காரியம் சாதித்துக் கொள்வார் ஹீரோ.

இப்படி என்ன பேச வேண்டும்… எங்கே பேச வேண்டும்… எப்போது பேச வேண்டும்… என்று தெரிந்து நடந்து கொள்வது காரியக்காரத்தனம். அது கைவந்த அனைவரும் வெற்றியாளர்கள்.

பெரிய வெற்றிக்கான சூத்திரமாக இதைப் பார்க்க வேண்டாம். அன்றாடச் செயல்பாடுகளில்கூட இதை ‘அப்ளை’ செய்ய முடியும்.

“மத்தியானம் என்ன… புளிக் குழம்பா… சாம்பாரா..?” என்று மனைவி கேட்கிறார். உங்களது பதில்கள் என்னவாக இருக்கலாம்..?

“எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ என்ன புண்ணாக்கையோ பண்ணித் தொலை. ஏதோ என்னைக் கேட்டுத்தான் எல்லாம் செய்கிற மாதிரி…”

“நீ முதல்ல ஏதாவது ஒன்னை வை. அதுக்கு என்ன பேர் வைக்கிறதுன்னு. அப்புறம் முடிவு செய்யலாம்…”

“செல்லக்குட்டி. நீ புளிக் குழம்பா, சாம்பாரா..?-ன்னு கேட்கிறது. கத்தியா, துப்பாக்கியா..?ன்னு கேட்கிறா மாதிரியே இருக்குடி!

“டெய்லி வைக்கிற சாம்பாரையே வை. தெரியாத தேவதையைவிட, தெரிஞ்ச பிசாசு மேல்ன்னு ஒரு பழமொழி இருக்கு!”

உங்கள் நகைச்சுவை உணர்வை இந்த விஷயத்தில் எந்த மனைவியும் ரசிப்பதில்லை. நீங்கள் வஞ்சப் புகழ்ச்சியில் பாராட்டினாலும், அது பஞ்சாயத்தில் தான் முடியும் என்பது உலகளாவிய கண்டுபிடிப்பு.

இதன் க்ளைமாக்ஸ் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு கட்டத்தில் இரண்டுமே வைக்கப்படாத உண்ணா மதியமாக அது முடிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அது உண்மையாகவே இருந்தாலும், வாயைக் கொடுப்பானேன்..? வாங்கிக் கட்டிக் கொள்வானேன்..?

“புளிக் குழம்பு நீ சூப்பரா வைப்பியே… அதையே பண்ணிடு, வெள்ளப்பூண்டு கொஞ்சம் தூக்கலா…” என்று சொல்லிவிட்டுச் செல்வது உடம்புக்கு நல்லது.

வெளியில் பேசுவதையும் கட் அண்ட் ஷார்ப்பாக வைத்துக் கொள்வது நல்லது. ‘அதிகம் பேச மாட்டார். பேசினா கரெக்ட்டா பேசுவார்… என்பது ஒருவருக்கு வழங்கப்படும் பாராட்டுப் பத்திரமாகும்.

பெரிய வி.ஜ.பி.க்களைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களின் செயல்பாடுகளை கவனித்துப் பாருங்கள். திருப்பதி க்யூ மாதிரி அவரைப் பார்க்க ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அனைவரையும் குறுகிய நேரத்துக்குள் பார்த்து விடுவார் அவர்.

அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவரைப் பாராட்டும் வார்த்தைகளை தயார் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை.

நலன் விசாரிப்புகள் அவசியமில்லை. எதற்காக வந்தோம் என்று இரண்டு வார்த்தைகளில் முடித்துக் கொண்டால், வேலை நடந்து விடும் தேவையற்ற பீடிகை சொல்ல வந்ததைத் தடுக்கும். சந்தித்தும் பயன் இருக்காது.

சந்திப்புகளில் மட்டுமில்லை, போனில் பேசுவதிலும் ஒரு ஒழுங்கைத் கடைபிடிப்பது நல்லது. போக்குவரத்து நெரிசல், நேசமின்மை அதிகரித்துவிட்ட காலமிது.

எல்லா இடத்துக்கும் நேரில் சென்று கொண்டிருக்க முடியாது.

அதை சம்பந்தப்பட்டவர்களும் விரும்புவதில்லை. எனவே, போன் பேச்சுக்களுக்கு என்று ஒரு திட்டம் வைத்துக் கொள்ளுங்கள்.

யாரிடம் பேசப் போகிறோம்.. எதற்காக பேசப் போகிறோம். நாம் எதிர் பார்ப்பது என்ன.? என்று திட்டம் வைத்துக் கொண்டு, அதற்கான ஒத்திகை பார்த்துக் கொள்வது நல்லது.

எதிர்முனையில் இருப்பவர், என்ன சூழலில், எத்தனை பேர் மத்தியில் இருப்பார் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்றபடி பேசுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் சொல்வதை ஆமோதிக்க மட்டுமே முடியும் எனில், அதற்கேற்ப கேள்வி பதில் பாணியில் நீங்களே பேச்சைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

‘எனக்கு இது தேவை.. முடியுமா சார்..?’ என்று கேட்டால், அவர் ‘ம்’ என்றோ ‘ம்ஹூம்’ என்றோ சொல்லிவிட முடியும். தர்மசங்கடம் குறையும். தெளிவாகச் சொல்லுங்கள் என்று வற்புறுத்தக் கூடாது.

அவரது சூழல் தெளிவாகச் சொல்லும் வகையில் இல்லையெனில், நீங்க அப்புறம் கூப்பிடுங்க என்று போனை வைத்து விடுவார். அப்புறம் போனை எடுப்பாரா..? என்பது சந்தேகமே, காரியம் கெட்டுவிடும்.

உடனுக்குடன் முடிவெடுக்கும் திறன் அதிகம் கொண்டோர் போனில் பேசுவதில் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.

எதிரில் இருப்பவர் பேசும் வார்த்தையை வைத்தும், பின்னணி ஒலிகளை வைத்தும் ஒரு நொடியில் அவரது சூழலை உணர்ந்து கொள்ள வேண்டும்.

‘அப்புறம்…’ என்று ஆரம்பிக்கிற எந்த எதிர்முனைக் குரலும், ‘நான் ஃப்ரீதான்’ என்பதற்கான அறிகுறியாகும். ‘எதுவும் முக்கியமா இருக்கா.? என்றால், நமது தகவலைக் கேட்கும் நிலையில் இல்லை.

இருந்தாலும், அவரது லைன் மீண்டும் கிடைப்பது அரிதென்றால், அப்போதே ரத்தினச் கருக்கமாக விஷயத்தைக் கூறிவிடுவது நல்லது. இல்லை என்றால், பிறகொரு சந்தர்ப்பத்தில் அதைப் பேசிக் கொள்ளலாம்.

போனில் பேசும்போது முடிந்தவரை, சிறிய வார்த்தைகளாகப் பயன்படுத்த வேண்டும். விளக்கிச் சொல்கிறேன் பேர்வழி என்று விலாவாரியாகச் சொல்லிக் கொண்டே போனால், அது கேட்பவருக்கு போர் அடிக்கவும் வாய்ப்பு உண்டு.

பேசுவதில் சுகம் காணுவதை விட்டு, பேச்சினால் கிடைக்கும் பயன் என்ன..? என்று உணர்ந்து பேசுவதே நல்லது. அதிகம் பேசுவோருக்கு ஆயுள் குறைவு என்கிறார்கள்.

பேச்சுத் திறன் இருந்தாலும், அதைக் காட்ட வேண்டிய இடத்தில்தான் காட்ட வேண்டுமே தவிர, சம்பந்தம் இல்லாத இடத்தில் எல்லாம் காட்டக்கூடாது.

அதிகமாகப் பேசுபவர்களையும், அளவு தெரியாமல் பேசுகிறவர்களையும் இந்த உலகம் ரசிப்பதில்லை. அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதுமில்லை.

தன்னை மறந்து பேசுபவர்களை எவரும் மதிப்பதில்லை, அது ஒரு லொட லொட கேஸ் என்று ஓரம் தள்ளிவிடுவார்கள்.

’எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பார். தமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் அதுபற்றிக் கருத்து சொல்லிப் போரடிப்பார்.

வெட்டி விவாதத்தை உண்டாக்கி தமது நேரத்தைப் போக்கும் வெட்டி ஆஃபீஸர்’ என்றெல்லாம் அவருக்குப் பின்னால் கருத்துகள் பரவிக்கிடக்கும்.

இதைத் தெரிந்து கொண்டு ஏதாவது ஒரு கட்டத்தில் வாயை மூடிக் கொண்டிருந்தால், மீதிக் காலத்தில் அவரது மரியாதை உயரலாம். இல்லையேல் அவரது வாழ்க்கை பலனின்றி முடிந்து போகும்.

எனவே, வெற்றியைப் பெருக்க, பேச்சைக் குறைங்க பாஸ்.!

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

You might also like