திரைமொழி சொல்கிற தீண்டாமை மிகையா? யதார்த்தமா?

பரியேறும் பெருமாள், அசுரன் திரைப்படங்களை முன்வைத்து மீள்பதிவு

#

கீழடியின் சிறப்பு குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் பெருமைப்படத்தக்க விதத்தில் வெளிவந்தாலும் – முக்கியமாகத் தெரிய வந்த விஷயம் ஒன்றுண்டு.

தமிழர்கள் அப்போதே பண்பாட்டிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிய வாழ்வு வாழந்திருக்கிறார்கள் என்பது ஆதாரங்களுடன் தெரியவந்தபோதும், எந்தவிதமான மத, சாதீய அடையாளங்கள் எதுவும் அங்கில்லை என்பது வியப்புக்குரிய அம்சம்.

கீழடி இருக்கிற அதே சிவகங்கை மாவட்டத்தில் தான் கணியன் பூங்குன்றன் என்கிற சங்க காலப் புலவரும் வாழ்ந்திருக்கிறார்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்கிற மகத்தான வரிகளை அவர் தான் எழுதியிருக்கிறார். மனதைச் சாதீயத்தாலும், மதத் தீவிரத்தாலும் குறுக்கிக் கொண்ட மனதிலிருந்து இவ்வளவு விரிந்த அர்த்தம் செறிந்த வாக்கியங்கள் விளைந்திருக்காது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழர் நாகரீகத்தில் அங்கங்கே சமண மத அடையாளங்கள் இருக்கின்றன.

காலத்தின் பின் அடுக்கில் தான் மற்ற மதச் சாயல்கள் தெரிய வந்திருக்கின்றன. இதில் சாதியம் கொடுமையான வியாதியைப் போலப் பரவத் துவங்கியது எந்தக் காலகட்டத்தில்?

தொழில் ரீதியாகப் பிரிந்து இயங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் (இங்கு குறிப்பிடுவது தமிழ் மொழி பேசும் மண்ணை மட்டுமே) மனதில் சாதியப் பாகுபாடு திணிக்கப்பட்டது எப்போது? யாரால் திணிக்கப்பட்டது என்கிற கேள்விகள் எல்லாம் விரிவான விவாதத்திற்குரியவை.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற சமச்சீரான சிந்தனை விளைந்த மண்ணில் எப்போது சாதியப் பாகுபாடுகள் விளைந்து, தீண்டாமை என்கிற கொடுமை பரவியது என்பதைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும்போது மனம் அதிரும்படி எத்தனை கொடுமைகள் அப்போது மிக இயல்பான செயலைப் போல நடந்தேறியிருக்கின்றன? தாழ்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிற அவலத்தைப் பார்க்க முடிகிறது.

மன்னர்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், பலி கொடுக்கப்பட்டிருப்பது தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த உயிர்கள் தான்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டை கட்டித் திறக்கப்பட இருந்த நிலையில் சில இளைஞர்களின் குடும்பத்திற்கு மானியம் கொடுக்கப்பட்டுப் பலி கொடுக்கப்பட்டதை முகமது அலி எழுதிய “புதுக்கோட்டை வரலாறு” என்கிற நூல் பதிவு செய்திருக்கிறது.

ஜாய் ஞானதாசன் எழுதிய “ஒரு மறக்கப்பட்ட வரலாறு” நூல் வெளிப்படுத்தும் செய்திகள் இன்னும் கொடுமை. கேரளாவில் இருந்த மன்னர் ஒருவர் 1746ல் தன்னுடைய வெற்றிக்காக தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பதினைந்து குழந்தைகள் திருவனந்தபுரம் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவர்களுடைய உடல்களில் செப்புத்தகடுகள் பொருத்தப்பட்டு அவர்கள் உயிருடன் நான்கு மூலைகளில் புதைக்கப்பட்டிருக்கிற அவலத்தைச் சொல்கிறது.

வெள்ளக்காலத்தில் ஏதாவது ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால் கூட அடிமைகளாக இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை அந்த உடைப்பில் தள்ளி மூடப்பட்ட செய்திகளை எல்லாம் படிக்கிறபோது நமக்கு முன்பிருந்த சமூகத்தின் கெட்டிதட்டிய அழுக்கு காலம் கடந்தும் ஒட்டுகிற மாதிரி இருக்கிறது.

தோளில் துண்டு போடுவதற்கும், தலைப்பாகை அணிவதற்கும், சில தெருக்களில் நடப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட சில சமூகத்தினர் கண்ணில் பட்டாலே தீட்டு, மார்புக்கு மேலே ரவிக்கை அணிந்தால் வரி, தண்டனை என்று எத்தனை அவலங்களை எதிர்த்து எத்தனை எதிர்ப்புக் கலகங்கள்?

இவையெல்லாம் சாதியப் பெருமிதம், கர்வம் காரணமாக இங்கு நடந்திருக்கின்றன என்பதெல்லாம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதெல்லாம் தெரியவில்லை.

சாதியச் சிக்கலைச் சொல்கிற படங்கள் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் வெளிவந்திருக்கின்றன என்றாலும், கபாலி, காலா, மெட்ராஸ் என்று அண்மைக்காலத்தில் வெளிவந்த படங்கள் அதிகம் பேசப்பட்டன.

சமீபத்தில் சாதிய ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருக்கின்றன.சாதியப் பார்வை எந்த அளவுக்கு ஆணவக் கொலைகளை நிகழ்த்துவதற்குக் காரணமாக இருக்கிறது என்பதைப் பல நிகழ்வுகள் மூலம் இன்டர்நெட், செல்போனே கதியென்று கிடக்கும் இளைஞர்கள் உணந்திருக்கலாம்.

அதே சமயம் தெருவில் செருப்பை அணிந்து நடந்தற்காக குறிப்பிட்ட சமூகத்தினரின் தாக்குதலுக்கு ஆளாகி, அவமானப்பட்டுக் குமுறும் தாழ்த்தப்பட்ட இளம் பெண்ணின் அனுபவங்கள் அவர்களுக்குப் புதிதாக இருக்கலாம்.

மிகைப்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் கூட கிராமத்தின் சாதிய வேர்களை உணராதவர்களுக்குத் தோன்றலாம்.இன்னும் கிராமங்களில் தீண்டாமை என்பது பல வடிவங்களில் நீடித்துக் கொண்டிருப்பதை அவர்களில் எத்தனை பேர் நேரடியாக உணர்ந்திருப்பார்கள்?

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால அச்சு மற்றும் காட்சி ஊடக அனுபவத்தில் சில விஷயங்களை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும்.எண்பதுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சலூன் கடைகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மீறி சலூனுக்குள் நுழைந்த ஒருவரின் கை வெட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் இஸ்திரி செய்த ஆடைகளை உடுத்தவும் தடைகள். அதைப் பற்றி எழுத அந்த ஊருக்கு நண்பர்களுடன் போனபோது முகத்தில் அறைந்த உணர்வு.

சலூன் வைத்திருந்தவர்கள் தாழ்ந்த குரலில் பேசினார்கள். பாதிக்கப்பட்டிருந்த சமூகத்தினரின் பேசிக் கொண்டிருந்த போதே சிக்கல் வந்து என்னிடம் “தம்பி.. நீங்க கடைசி பஸ்ஸூக்குக் கிளம்பிருங்க.. இருந்தா சிக்கலாயிடும்” என்று சொன்ன பிறகு, ஒரு கும்பல் தேடி வர, அவசர அவசரமாக பஸ்ஸைப் பிடிக்க வேண்டியிருந்தது.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள டீக்கடையில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்து நானும், கிராமத்து இளைஞர்களும் பேசிக் கொண்டிருந்தோம்.பேசிவிட்டு அங்கிருந்து நான் கிளம்பியதும் பெஞ்சில் அமர்ந்து என்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் தாக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவானது.இரட்டை டம்ளர்கள் என்பது கண்ணாடிக்கிளாஸ், எவர்சில்வர் டம்ளர் என்பதாக மாறியிருப்பதையும் உணரமுடிந்தது.

தொலைக்காட்சி ஒன்றிற்காக காவல்துறையின் உதவியோடு மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பல முறை ஒத்திவைக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்றபோது, கடுமையான வசவுகளையும், காமிரா மீது மண் அள்ளி வீசப்பட்ட அனுபவத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.தென்மாவட்டத்தில் நடந்த பல சாதிக்கலவரங்களில் பல இடங்களில் கலாட்டாக்களும், மறியல்களும் நடந்து கொண்டிருந்த பதட்டமான சூழலில் சென்றபோது, கம்பு, அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவர்கள் வெக்கையுடன் கேட்ட கேள்வி.

“நீ என்ன சாதிப்பா? அதைச் சொல்லு… அதுக்குப் பிறகு நீ உள்ளே போகலாங்கிறதை நாங்க முடிவு பண்ணுறோம்”.விழுப்புரத்திற்கு அருகில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் தெரு ஒன்றில் செருப்புப் போட்டபடி பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் மீது தாக்குதல்.

செய்தியைக் கேள்விப்பட்டு அந்தக் கிராமத்திற்குப் போனபோது பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளிடம் எங்களைப் பேசவிடாமல் தடுக்க முயன்று கொண்டே இருந்தார்கள். பேசுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

இம்மாதிரியான யதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டே, ஊடகங்களில் இங்கே பதிவிடுவது சாத்தியமாகி இருக்கிறது. திராவிட இயக்கங்களும், பொதுவுடமை இயக்கங்களும் சாதியத் தீண்டாமைக்கு எதிராக ஒலித்த குரலுக்கு முன்பே அயோத்தி தாசரைப் போல பலருடைய குரல்கள் இங்கு ஒலித்திருக்கின்றன.

பிறகு அதை இயக்கமாக முன்னெடுத்திருக்கின்றன பல தலித் இயக்கங்கள்.ஒன்றுபடுவதற்கான பல காரணங்கள் இருந்தும், பிரிந்தே இருப்பதற்கான உத்திகளைக் காண்பித்துப் பிரித்துக் கொண்டிருக்கின்றன சாதியக் கூறுகள்.

கீழடியில் தென்படாத சாதீயம் பலருடைய மனங்களில் இன்னும் பெரு வியாதியைப் போல ஒட்டிக் கொண்டிருப்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது யதார்த்தம். அசுரன் படத்தில் நிறைவாக வரும் வசனம். “ஒரே மண்ணில் இருக்கிறோம்… ஒரே மொழியைப் பேசுகிறோம்… இதை வைச்சு நாம ஒண்ணு சேர முடியாதா…?” இப்போதைக்கு இந்த உணர்வு ஏக்கமும், எதிர்பார்ப்பும் மட்டுமே!

– மணா

You might also like