இயற்கையின் பூரண கவிக்கூடம்!

நூல் வாசிப்பு

கவிஞர் பழநிபாரதி எழுதிய புதிய கவிதை நூல் பூரண பொற்குடம். பிரபல ஓவியர் மணியம் செல்வனின் நதிபோல நீளும் கோடுகளில் உருவான காதலால் கசிந்துருகும் அழகுப் பெண்ணின் அட்டைப்படம்.

நவீன கவிதை நூலுக்கு இப்படியொரு அட்டைப்படமா என்ற கேள்வி எழலாம். ஆனால் அதுவே நூலின் அழகியல் பெருமையாகவும் மாறியிருக்கிறது.

134 பக்கங்கள். இயற்கையைத் தொடாமல் ஒரு கவிதைகூட எழுதப்படவில்லை. பழநிபாரதியின் கவிதைகளில் நேர்த்தியும் அனுபவமும் கவித்துவமும் சொற்சுருக்கமும் மிகுந்து கவிதைகள் மேன்மையான இடத்திற்கு நகர்ந்திருக்கின்றன.

ஆங்கில இலக்கியத்தில் ரொமான்டிக் பொயட்ஸ் எனப்படும் வோர்ட்ஸ்வொர்த், ஜான் கீட்ஸ், ஷெல்லி, பைரன் உள்பட பலரின் கவிதைகளில் வரிக்கு வரி இயற்கையின் பூரணத்துவம் ததும்பும்.

காதல் கவிதைகள் என்று சொன்னாலும் இயற்கை மீதான காதல்தான் மிகுந்திருக்கிறது. இயற்கையும் காதலும் ஒன்றுதான் என்பதுபோல, அத்தனை கவிதைகளும் அப்படித்தான் தெரிகின்றன நமக்கு.

“நீங்கள் என்னைப்போல ஒருவனாக இருப்பதற்கு அல்லது உங்களைப் போல ஒருவனாக நானிருப்பதற்கு இத்தொகுப்பின் வாசிப்புக்குப் பின் மிகுதியும் மகிழ்கிறேன்.

வெளியில் சொல்லத் தெரியவில்லை அல்லது சொல்லிக்கொள்வதில்லையே தவிர, ஒரு குறிப்பிட்ட வயதில், பருவத்தில், மனநிலையில், மனோலயத்தில் நான் என்னைப் போல இருக்கிற ஒருவன் அல்லது ஒருத்தியையே தேடிக்கொண்டிருக்கிறேன் போல” என்று நூலின் அணிந்துரையில் குறிப்பிடும் வண்ணதாசன், “நீங்கள் நல்ல காதலன் பாரதி, ஏன் எனில் நீங்கள் நல்ல மனிதன்” என்கிறார்.

முதல் கவிதையே “நூறு கிளை நீட்டி / ஆயிரம் பூப்பூத்து…” என்றுதான் தொடங்குகிறது. முதல் வரியிலேயே வாசிக்கும் மனம், காற்றில் பறந்து வானில் திரியும் இலையாக மாறிவிடுகிறது.

“அன்பிலான எதையும் அகழ்வாயாதே” என்று ஒரு கவிதையின் முதல் வரி பழநிபாரதியின் மானுடம் மீதான காதலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

காதலியின் வீட்டிற்கு வரும் வழி, ஒரு மகாநதியைப் போலக் கிளை பிரிகிறது என்கிறார் கவிஞர்.

சில கவிதைகளில் வரிகள் பேரன்பில் மலரும் காட்சிகளாக விரிந்து பரவுகின்றன.

புல் அசைய

பூ மலர

தாழ்வாரக் காற்றில்

அகங்குழைத்து

அங்கேயே நிற்கிறது

தினைக் குருவி

உன் நிலத்தின் சித்திரத்தில்

அதன் கீச்சிடல்

அழைத்துவருகிறது

இன்னொரு குருவியை

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசிப்பில் உற்சாகத்தையும் மகிழ்வையும் தந்த கவிதை நூலாக இருக்கிறது பூரண பொற்குடம். கவிதைகளின் பூரண பொற்குடம். மிக எளிய வரிகளாகத் தோன்றுகின்றன சில கவிதை வரிகள். இந்த எளிமைக்குத்தான் ஒரு கவிஞன் வாழ்நாள் முழுவதும் எழுதித் தீர வேண்டியிருக்கிறது. ஒரு கவிதையின் இரண்டாவது வரி இப்படித் தொடங்குகிறது…

பெருங்கிளையில் அமரவருகிறது

ஒரு பறவை

இடம்விடுவதுபோல

அதற்குச் சற்று முன்

உதிர்கிறது

ஓரிலை

இந்தக் கவிதையில் உதிர்வதைப் போலப் பலமுறை நாம் மரங்களில் இருந்து இலைகள் உதிர்வதைப் பார்த்திருக்கிறோம்.

கவிஞன் அதை ஓர் அனுபவத்துடன் கோர்க்கும்போது அங்கே கவித்துவம் மடல் விரித்துச் சிரிக்கிறது. பெருங்காதலோ தோல்வியோ எதிலும் இயற்கையின் விசித்திரங்கள்தான் சித்திரங்களை வரைந்து செல்கின்றன.

ஓடுகிறது நதி

உன் காலடியில்

ஓடவிட்டு ரசிப்பதுபோல்

உட்கார்ந்திருக்கிறாய்

– என்கிறார் பழநிபாரதி.

எனக்கோ ஊரில் பால்யத்தில் ஓடி விளையாடிய பாண்டைவையாறு நினைவில் வருகிறது. இதுபோல இன்னொரு கவிதை…

காற்றைப்

பாடவிட்டுக் கேட்பதுபோல

உறங்குகிறாய்

– என்ற வரிகள் கவிஞனின் அசாத்தியம்.

நீயில்லாத நதியில்

நிறைந்து தளும்புகிறது நினைவு

நீயென் கண்களில்

மூழ்கி எழுகிறாய்

ஆடிப்பெருக்கில்

உன்னை நனைத்த

அந்த மஞ்சள்

இன்னும்

உதிர்ந்துவிடாமல்

ஊசலாடிக்கொண்டிருக்கிறது

ஒரு பழுத்த இலையாக

பழநிபாரதியின் மிகச்சிறந்த கவிதை நூல்களின் வரிசையில் மட்டுமல்ல, தற்காலத் தமிழின் சிறந்த கவிதை நூல் வரிசையிலும் பூரண பொற்குடம் இயற்கையின் கவித்துவப் பூக்கூடமாக பொங்கிப் பிரவகிப்பதை படிப்பவர்கள் உணர்வார்கள்.

பூரண பொற்குடம்: பழநிபாரதி 

வெளியீடு: கொன்றை வெளியீடு,

கதவு எண்: எஸ்1, 119, ராயல் கேஸ்டில் பேஸ் 2.

கணேஷ் அவென்யூ 6 வது தெரு, சக்தி நகர்,

போரூர், சென்னை – 16 

விலை ரூ. 140

***

பா. மகிழ்மதி

You might also like