வெற்றிக்கான எஸ்கலேட்டர்…!

தொழில் நுணுக்கத் தொடர் – 13

வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற உந்துதல் உள்ளவரா நீங்கள்..? அதற்கான சில நுட்பங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நடைமுறையில் பயன்படக்கூடிய சில உத்திகளைப் பற்றி அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன் கோவே சொன்ன கருத்துகளைப் படித்தாலே அந்த நுட்பம் புரிந்து விடும்.

இவர் எழுதிய ‘தி செவன் ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபக்டிவ் பீப்பிள்’ நூல், சூப்பர், டூப்பர் ஹிட்.

முதலில் வெற்றி பெற்ற மனிதர்களை நேரில் சந்தித்துப் பேசி, பழகி, பேட்டி எடுத்துக் கட்டுரை ஆக்குகிறார். அப்படி 100-க்கும் மேற்பட்ட மனிதர்களைச் சந்தித்த அவர், அத்தனை பேரிடமும் பொதுவாக உள்ள குணங்களைப் பட்டியல் எடுக்கிறார். அதில் 7 பிரதான குணங்கள்
வெற்றி பெற்ற எல்லா மனிதர்களிடமும் பொதுவாக இருக்கிறது. இந்த 7 குணங்கள் இருக்கும் அனைவராலும் வெற்றி பெற முடியும் என்பது தான் புத்தகத்தின் சாரம்.

உலகம் முழுக்க, இரண்டரை கோடி புத்தகம் விற்பனையானது. 1989-ல் இந்த புத்தகம் வெளிவந்தது. ஸ்டீஃபன் கோவே சிறந்த பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், தன்முனைப்பாளர். கஷ்டப்பட்ட
குடும்பத்தில் பிறந்து சுய முன்னேற்றத்தால் வெற்றி பெற்றவர். அதனால் அடுத்தவர்களையும் கைதூக்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே அவருக்குள் இருந்தது. அதுவே இந்தப் புத்தகம் எழுத உத்வேகம் தந்தது.

சரி, அது என்ன 7 உத்திகள்..?

1. ஆவதெல்லாம் தன்னாலே!

மனிதர்களில் 2 வகை உண்டு. ‘புரோ ஆக்டிவ்’, ‘ரீ ஆக்டிவ்’. புரோ ஆக்டிவ்
மனிதர்கள், நாளை நடப்பனவற்றை முன்கூட்டியே பட்டியலிட்டு, இது இப்படி
தான் நடக்கும் என்று திட்டமிட்டு வாழ்க்கையை நடத்தக் கூடியவர்கள்.

ரீ-ஆக்டிவ் மனிதர்கள் நிகழ்வு முடிந்த பின்னால், தோற்றுப் போன காரணத்தை
ஆராயாமல், பழியை யார் மீதாவது போட முயற்சிப்பவர்கள். தங்கள் வாழ்க்கைக்கு
தாங்கள் தான் பொறுப்பு என்று உணர்ந்திருந்த புரோ ஆக்டிவ் மனிதர்கள்தான்,
வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்கிறார் ஸ்டீஃபன் கோவே,

2. முடிவிலிருந்து தொடங்கு!

வெற்றியாளர்கள் ஒரு காரியத்தைத் தொடங்கும்போதே, க்ளைமாக்ஸ்
என்ன என்பதை மனதில் கொண்டு தொடங்குகிறார்கள். எல்லோருக்குமே
வாழ்க்கை எங்கே, எப்படி நிறைவடைய வேண்டும் என்ற ஆசை, இலக்கு
இருக்கும்.

அந்த இலக்கை முதலிலேயே திட்டமிட்டு அதற்கேற்றவாறு வாழப்
பழகிக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எப்படி வர வேண்டும்…அடுத்த
தலைமுறை, தம்மை எப்படிப் பார்க்க வேண்டும்… தம்மைப் பற்றி என்ன பேச வேண்டும்..? என்பதற்கேற்றவாறு வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்கின்றனர் வெற்றியாளர்கள்.

3. முன்னுரிமை முக்கியம்!

எத்தனை வேலைகள் செய்தாலும், அதில் முதலில் செய்ய வேண்டியது எது
என்பதைத் தீர்மானித்து, அதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். முன்னுரிமையில்
தெளிவாக இருப்பவர்களே வெற்றியாளர்களாக இருக்கின்றனர். அனுபவமே
இந்தத் தெளிவைத் தரும் என்பதும் உண்மை.

4. வெற்றிக் கூட்டணி!

தனி ஒரு மனிதரால் மட்டுமே வெற்றி கிட்டாது. பலரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அடுத்தவனைக் கீழே தள்ளிவிட்டு நாம் ஜெயிப்போம் என்கிற மனநிலை தற்காலிக வெற்றியையே தரும். அவர்களால் ஜெயிக்கவே
முடியாது.

ஆக அடுத்தவரையும் அரவணைத்துக் கொண்டு அவரையும் வெற்றி பெறச் செய்வதன் மூலமே தானும் ஜெயிக்க முடியும் என்பதை உணர்ந்தவர்கள் தான் வெற்றியாளர்கள்.

5. நில், கவனி, சொல்!

பிறரது வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம். ஒரு வாடிக்கையாளர், தொழிலாளர் என யார் வந்து என்ன சொன்னாலும், உடனே நீங்கள் பதில் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.

பொறுமையாகக் கேட்டு உள்வாங்குங்கள். பின்னர் உங்கள் தரப்பு வாதத்தை புரிய வையுங்கள். பதில் சொல்லுங்கள், வீடுகள், அலுவலகங்கள் என இடத்துக்கும் இது பொருந்தும்.

6. குழுவாகச் செயல்படு

தனி ஒரு மனிதனைவிட, ஒரு குழுவாகச் செயல்படும்போது வெற்றி இன்னும் விரைவாக வந்து சேர்கிறது. நிறைய பேர் ஒன்றாகச் சேரும்போது கருத்து வேறுபாடு அதிகரிக்கும் என்ற எண்ணம் தவறு.

நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், அதில் இருக்கக்கூடிய சில பாஸிடிவ் விஷயங்களை ஒன்றிணைத்து தாம் ஜெயிக்க முடியும். ஒரு குழுவாகத்தான் ஜெயிக்க முடியும். தனி மனித மெற்றி எங்குமே கிடையாது.

வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் பெரிய, பெரிய குழுவை அமைத்து அதன் தலைவராக இருந்துதான் வென்றிருக்கிறார்கள்:

7. தொடர்ந்து வளருங்கள்

உடல் ஆரோக்கியத்தில் தொடங்கி, மன ஆரோக்கியம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நாள்தோறும் அதை முன்னேற்றுவதற்கு, மெருகூட்டுவதற்கு தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். நான் எல்லாம் படித்துவிட்டேன்.

இனிமேல் படிக்க வேண்டிய வேலை எனக்கு இல்லை என்றால் வெற்றியின் வளர்ச்சி முட்டுச் சந்துக்கு இட்டுச் சென்று விட்டதாக அர்த்தம்,

இந்த 7 உத்திகளையுமே வெற்றியாளர்கள் தொடர்ந்து செய்ததால் தான் அவர்கள் வெற்றியாளர்கள் ஆனார்கள். இந்த 7 உத்திகளைப் பின்பற்றினால், நிச்சயம் ஜெயிக்க முடியும்.

ஜெயித்தபின் வெற்றி இருக்கையில் நாம் மட்டுமே அமர்ந்து கொள்ள எண்ணக் கூடாது.

நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் வளர்த்துவிட்டு அனுபவ ஆலோசகராக மகிழ்ச்சி அடைய வேண்டும். இது வெற்றியாளர்களின் 8-வது குணாதிசயம் என்கிறார் ஸ்டீஃபன் கோவே.

வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும். வெற்றிக்கான இந்த எட்டு இலக்குகளையும் பட்டா போட்டு வைத்துக் கொண்டு, முன்னேறுவோம்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

You might also like