தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, 2021-2025-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.மோகன்ராம் மேற்பார்வையில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.
இதில் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
என்.ராமச்சந்திரன் செயல் தலைவராகவும், வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைவராகவும், ஆதவ் அர்ஜூனா பொதுச்செயலாளராகவும், செந்தில் வி.தியாகராஜன் பொருளாளராகவும், சோலை எம்.ராஜா, டி.வி.சீத்தாராமராவ்,
எம்.ராமசுப்பிரமணி, வி.வி.ஆர்.ராஜ்சத்யன், சைரஸ் போஞ்சா, எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் துணைத் தலைவராகவும், பாலாஜி மரதபா, ஏ.சரவணன் ஆகியோர் இணைசெயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினராக டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் குமார் ராஜேந்திரன் உள்ளார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
எம்.தமிழ்செல்வன், ஹிதென் குமார் ஜோஷி, பி.செல்வமணி, ஏ.ஷபியுல்லா, பி.பிரபு, கே.அப்பாவு பாண்டியன், டி.சந்திரசேகரன், சஞ்சய் ஜெயராஜ் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
“இதற்கு முன்னர் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், டபிள்யூ.ஐ.தேவாரம், என்.ராமச்சந்திரன் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இந்த பொறுப்புக்கு நான் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐசரி கே.கணேஷ்.
மேலும், “ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற 28 விளையாட்டுகளில் இருந்தும் ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை உருவாக்குவதே எங்களது முதல் கடமை.
தமிழ்நாட்டில் ஒலிம்பிக் பவன் கட்ட வேண்டும் என்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விரும்பினார்.
அவரது ஆசையை நிறைவேற்றுவதில் முழுமையாக கவனம் செலுத்துவோம்” என்றார் ஐசரி கே.கணேஷ்.