சட்ட விரோத ஆயுதக் கடத்தல் கவலையளிக்கிறது!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சட்ட விரோதமாக கடத்தப்படும் சிறிய ஆயுதங்களை தடுப்பது தொடர்பான விவாதம் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, “பயங்கரவாதிகளும், பயங்கரவாத குழுக்களும் சட்டவிரோதமாக சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஆகியவற்றை கடத்துகின்றனர்.

இந்த ஆயுதங்கள் உதவியால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களால் பல ஆண்டுகளாக இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் எல்லை தாண்டி சட்ட விரோத ஆயுதங்களை கடத்தி வந்து தாக்குதல் நடத்துகின்றனர்.

தற்போது ஆயுதங்களைக் கடத்த ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகள் ஆயுதங்கள் குவித்து வருவது அதிகரித்துள்ளது.

அரசு ஆதரவில்லாமல் பயங்கரவாதிகள் ஆயுதங்களை சுலபமாக கடத்த முடியாது.

எனவே பயங்கரவாதச் செயல்களைச் செய்வோர், அவர்களின் சட்டவிரோத ஆயுத சேமிப்பிற்கு உதவி புரிவோர் ஆகியோர் மீது சிறிதளவும் கருணை காட்டாமல் இந்தக் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விரோத ஆயுதக் கடத்தல் உலகளவில் கவலைக்குரியதாக உள்ளது. இந்த சபை ஏற்கனவே சட்ட விரோத ஆயுதக் கடத்தலை தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதை உறுப்பு நாடுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” எனக் கூறினார்.

இதையடுத்து ஐ.நா., பொதுச் சபையில் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான கூட்டத்தில் மீண்டும் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பியது.

இதை கண்டித்து பேசிய ஐ.நா.,விற்கான இந்திய தூதுக் குழுவின் சட்ட ஆலோசகர் டாக்டர் காஜல் பத், “மீண்டும் காஷ்மீர் பிரச்சனையைக் கூறி இந்த மன்றத்தின் மாண்பை பாகிஸ்தான் குறைத்துள்ளது.

பாகிஸ்தான், திரும்பத் திரும்ப பொய் பேசி வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மிகப்பெரிய அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தான், பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதாக வேஷம் போடுகிறது.

இந்த மன்றத்தில், இந்தியா மீது சுமத்திய புகார்கள் அனைத்தையும் நிராகரிக்கிறோம்.

பாகிஸ்தான் உரையில் எங்கெங்கு இந்தியாவின் பெயர் உள்ளதோ அவையெல்லாம் நீக்கப்பட வேண்டும்.” எனக் கூறினார்.

You might also like