– மலைக்கிராம மக்களின் ஆதங்கம்
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9-ம் தேதியும் நடக்கிறது.
பதிவான வாக்குகளை எண்ணும் பணி அக்டோபர் 12-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
இந்நிலையில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (04/10/2021) மாலை 05.00 மணியுடன் நிறைவடைந்தது.
அக்டோபர் 6-ம் தேதி வரை முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள், பார்களைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் 24,417 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்பட ஒன்பது மாவட்டங்களில் ஏற்கனவே 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனிடையே ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைக் கிராமத்தில் ஓட்டுக்கு காசோ, பொருளோ பெறமாட்டோம் என ஊழல் இல்லா பஞ்சாயத்து நிர்வாகத்தை உருவாக்கும் முயற்சியில் மலைக்கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தியாலம் அடுத்த குறிஞ்சி நகர் பகுதி அமைந்துள்ளது.
மலைக் கிராமமான இப்பகுதியில் 15 முதல் 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் நந்தியாலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதியில் உள்ளவர்கள் இந்தப் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரிடமும் ஓட்டுக்கு காசோ அல்லது பொருளோ வாங்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்து அவரவர் வீட்டு சுவரில்,
‘எந்த ஒரு வேட்பாளரிடமும் ஓட்டுக்கு பணமோ, பொருளோ வாங்க மாட்டோம். பணம், காசு கொடுத்து எங்களை சிறுமை படுத்தாதீர்கள்’ என்கின்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.