மணிக்கொடியின் சினிமா முகம்!

நூல் வாசிப்பு:

தமிழின் முன்னணி கவிஞரும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் எழுதிய ஆய்வு நூல் ‘மணிக்கொடி சினிமா’. தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் மணிக்கொடிக்குத் தனி முகம் உண்டு.

லண்டனில் ப்ரி பிரஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளராகப் பணியாற்றிய கு.சீனிவாசன், ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும் அப்சர்வர் போன்ற ஓர் ஏட்டைத் தமிழில் உருவாக்க விருப்பப்பட்டார். அதுதான் வ.ரா.வை ஆசிரியராகக் கொண்ட வெளியான மணிக்கொடி.

தமிழ் இலக்கிய வெளியில் படைப்பிலக்கியத்தின் சின்னமாக முன்வைக்கப்படும் மணிக்கொடியின் சினிமா முகத்தை மிக விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது இந்த நூல்.

அதற்கான மூலப்பிரதிகளைத் தேடித் தொகுத்துத் தக்க சான்றுகளுடன் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளது.

மணிக்கொடிக்கும் சினிமா உலகத்துக்குமான உறவு குறித்து நிலவெளியில் நூலாசிரியர் எழுதிய மிக விரிவான கட்டுரையும், அதன் நீட்சியாக மணிக்கொடியில் வெளியான திரைப்பட விமர்சனங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

“என் ஆய்வு நூல்களுக்கு அசூயை அடையும் எதிரிகள், ஆதரவு நல்கும் நல்வாசகர்கள் எனப் பலருக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்” என்று  குறிப்பிடுகிறார் ஆய்வாளர் கடற்கரய்.

1934 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதியிட்ட மணிக்கொடியில் வெளியான டாக்கீ தசாவதாரம் என்ற தலைப்பிலான கட்டுரை ‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக…

பேசும்பட உற்பத்தி ஏற்பட்ட வெகுநாட்களுக்குப் பிறகுதான் தமிழில் பேசும்பட உற்பத்தி ஆரம்பித்தது.

அதிலும், இதுவரை வெளியாகியுள்ள பேசும் படங்களில் பெரும்பான்மையான மீது மாகாணங்களில் தயாரிக்கப்பட்டவை.

அந்தப் படங்களுக்கு ஜனங்கள் திரள் திரளாகச் சென்று பார்த்து வந்தது சென்னையில் பிரத்யட்சம்.

தமிழ்நாட்டிலேயே நடிகர்கள் பாடல்கள் கானம் செய்யும் மேதாவிகள் முதலியோருக்கும் பஞ்சமில்லையென்றாலும், இந்த மாதிரித் தமிழ் பேசும் படங்கள் பிற மாகாணத்தாரால் தயாரிக்கப்பட்டு, அதனால் வரும் லாபம் வெளியே செல்ல நேர்ந்ததற்குக் காரணம்.

முதலாளிகள் முன்வராததுதான் என்று சொல்லப்பட்டது.

இப்பொழுது அந்தக் குறையும் நீங்கிவிட்டது. சென்னையில் தற்சமயம் நாலைந்து பிலிம் கம்பெனிகள் மும்முரமாக வேலை செய்கின்றன. அவற்றில்  ஜயவாணி பிலிம் கம்பெனியார் தயாரித்த தசாவதாரம் பேசும் படம் தற்சமயம் வெளியாகியிருக்கிறது.

அதன் முதல் வெளியீடான பிரத்தியேகக் காட்சி, கடந்த திங்களன்று சென்னை வெலிங்டன் டாக்கீஸில் காட்டப்பட்டது. இது அந்தக் கம்பெனியாரின் முதல் தமிழ் பேசும் படம் என்று தெரிகிறது.

மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களாகிய லீலைகளை எடுத்துக்காட்டும் இந்தப் படத்தில் மூன்று அவதாரங்களுக்குத்தான் முக்கியம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் மற்ற ஒவ்வொரு அவதாரத்திற்கும், காரண காரியங்களைக் கூடிய விரைவில் விளக்கிக் காட்ட முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

நரசிம்மாவதார பாகத்தில் ஹிரணியன் தர்பாரில் காட்டப்படும் நடனம், கிருஷ்ணாவாரத்தில் வரும் பால விகாரம் முதலியவற்றை நீங்கிவிட்டால், கம்பெனியாரின் முதல் முயற்சி கூடியவரை திருப்திகரமாக முடிந்ததெனலாம்.

பொதுவாக இந்தியப் படங்களில் கற்பனையற்ற பண்டிதத் தன்மை அதிகமிருப்பது ஒரு வருந்தத்தக்க நிலைமையாகும். ஜயவாணி கம்பெனியார் இந்த விஷயத்தில் விலக்காகி விடவில்லை.

புராணக் கதைகளிலும் உண்மை மாறாதபடி, கற்பனை கலந்து, கலையழகு தோன்றப் படங்கள் எடுக்க முயலவேண்டும் என்பதே நமது கோரிக்கை.

மத பக்தி நிறைந்த தமிழர்களுக்கு இந்தப் படம் மகிழ்ச்சியளிக்கும் என்று நம்புகிறோம்.

மணிக்கொடி சினிமா:
கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
வெளியீடுபதிகம் பதிப்பகம்,
142,
கிழக்கு பிரதான சாலை,
மகள் குடியிருப்பு, சங்கர் நகர்,
பம்மல், சென்னை – 75
விலை ரூ. 125

– பா. மகிழ்மதி

You might also like