ஒரு திரைப்படமானது அதன் உள்ளடக்கத்தினால், அதில் இடம்பெற்ற நடிப்புக் கலைஞர்களால், அதனை உருவாக்கிய இயக்குனரின் முந்தைய திரைப்படங்களின் வெற்றியால் அல்லது சம்பந்தப்பட்ட திரைப்படம் ஏற்படுத்தும் சர்ச்சைகளால் கவனம் பெறும்.
இயக்குனர் மோகன் ஜி மற்றும் நாயகன் ரிஷி ரிச்சர்ட் இணைந்திருக்கும் ‘ருத்ர தாண்டவம்’, ஏற்கனவே இவர்களது கூட்டணியில் இடம்பெற்ற ’திரௌபதி’யால் பெருங்கவனத்தைக் குவித்திருக்கிறது.
முந்தைய படம் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளைச் சந்தித்த நிலையில், ’ருத்ர தாண்டவம்’ ட்ரெய்லரில் பிசிஆர் சட்டம் எனப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது போன்ற கருத்து இடம்பெற்றிருந்தது.
இரு வேறு சாதிகளுக்கிடையேயான சமூக ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடுமோ என்ற பதைபதைப்பை உருவாக்கியது.
உண்மையில் படம் அப்படித்தான் இருக்கிறதா?
இளைய தலைமுறையின் போதை!
குற்றங்களைத் தடுப்பதற்கும், அது தொடர்பான விசாரணையை முடுக்குவதற்கும் எந்த எல்லையையும் தொடக்கூடிய கண்டிப்பான போலீஸ் அதிகாரி ருத்ர பிரபாகரன் (ரிஷி ரிச்சர்ட்). தர்மபுரி பகுதியிலுள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி வராஹி (தர்ஷா குப்தா).
கல்லூரி மாணவர்கள் சிலர் இளம்பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்து மிரட்டிய விவகாரத்தில், தகுந்த ஆதாரங்களுடன் அவர்களைக் கூண்டோடு பிடிக்கிறார் ருத்ர பிரபாகரன்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை துறைமுகம் பகுதியிலுள்ள கடலோர காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறார்.
கடலோரப் பகுதிகள் வழியாக போதைப்பொருட்கள் தமிழ்நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதற்காக, ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. அதற்குத் தலைமை வகிக்கும் ருத்ர பிரபாகரன், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளைக் கைப்பற்றுகிறார்.
இதனால், மனித உரிமை எழுச்சிக் கழகத்தின் தலைவர் வாதாபியின் (கவுதம் மேனன்) எதிர்ப்பைச் சம்பாதிக்கிறார்.
ஒருநாள் பள்ளிக்கு அருகே இரண்டு வாலிபர்கள் கஞ்சா விற்கின்றனர் என்ற தகவல் கிடைத்து, கான்ஸ்டபிள் ஜோசப் (தம்பி ராமையா) உடன் சேர்ந்து அவர்களைப் பிடிக்கச் செல்கிறார் ருத்ர பிரபாகரன். அந்த வாலிபர்கள் தப்பியோட முயற்சிக்க, அவர்கள் செல்லும் பைக்கை எட்டி உதைக்கிறார்.
இரண்டு வாலிபர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்படுகிறது. அந்த வாலிபர்களின் எதிர்காலம் கருதி, அவர்கள் பொதுவெளியில் சிகரெட் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து, அபராதத்தையும் கட்டி, அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்.
தலையில் காயமடைந்த வாலிபர் திடீரென்று வலிப்பு வந்து மரணமடைய, ருத்ர பிரபாகரனைக் கைது செய்ய வேண்டுமென்று போராட்டம் செய்கிறது பாதிக்கப்பட்ட தரப்பு.
குற்றவுணர்வைப் பொறுக்க முடியாமல், அந்த வாலிபர் தலையில் காயம் ஏற்படத் தானே காரணம் என்று பொறுப்பேற்கிறார் ருத்ரன்.
அவர் சரணடைவதை ஏற்காத போலீஸ் அதிகாரி, அவரை போலீஸ் படை வந்து கைது செய்யும் என்கிறார். அவ்வாறே ருத்ரன் கைது செய்யப்பட, அவர் மீது பிசிஆர் சட்டம் பாய்கிறது.
பணியில் இருந்து உடனடியாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு தடாலடியாக சிறைக்குள் ஒரு அதிகாரி தள்ளப்பட்டதை ஏற்காத நீதிபதி, இது தொடர்பாக விசாரணை செய்ய ஒரு வழக்கறிஞரை ரகசியமாக நியமிக்கிறார்.
அதன்பின் என்ன நடந்தது, அந்த வாலிபர் எவ்வாறு மரணமடைந்தார், ருத்ரன் நிரபராதி என்று நிரூபிக்கச் சாட்சியங்கள் கிடைத்ததா என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘ருத்ர தாண்டவம்’.
முந்தையை தலைமுறையை மது சீரழித்தது என்றால், அடுத்த தலைமுறையைப் போதைப் பொருட்கள் சிதைக்கின்றன என்ற கருத்தை அழுத்தமாக முன்வைத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
அடுத்தது என்னவென்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் காட்சிகள், திரைக்கதையை விறுவிறுப்பாக்குகின்றன. இதனால், இரண்டே முக்கால் மணி நேரம் படம் ஓடுவதே தெரியவில்லை.
சிறப்பான காட்சியாக்கம்!
பின்னணி இசையைப் பயன்படுத்திய விதம், மினிமலிசம் நிறைந்த காட்சியாக்கம், வேகமாக நகரும் திரைக்கதைக்கு ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் அளித்திருக்கும் உறுதுணை,
இவையனைத்துக்கும் மேலாக ராதாரவி, கவுதம் மேனன், தம்பி ராமையா, மாளவிகா ஆகியோரை குறிப்பிட்ட பாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கும் சாமர்த்தியம் ஆகியன இயக்குனர் மோகன் ஜியின் திறமையைக் காட்டுகின்றன.
’திரௌபதி’யைப் போன்றே இதிலும் ஆக்ஷன் காட்சிகளில் கலக்குகிறார் ரிஷி ரிச்சர்ட். ஆனால், அவரது முகபாவனைக்கு ஏற்றமாதிரி உடல் ஈடு கொடுக்க மாட்டேன் என்கிறது.
நாயகி தர்ஷா குப்தாவுக்கு, ரிச்சர்ட் மீது கோபத்தில் இருப்பதைத் தவிர வேறு வேலையில்லை.
சர்ச்சைக்குரிய பாத்திரம் என்றாலே ராதாரவிதான் சரியான ஆள் என்று தமிழ் திரையுலகம் முடிவு செய்துவிட்டது போல. அவரும், தனது மேடைப்பேச்சு போலவே படத்திலும் வசனம் பேசியிருக்கிறார்.
‘நாம கும்பிடுற சாமியை பிசாசுன்னு சொல்ற கும்பலை ஒரு வழி பண்ணனும்’ என்பது உட்படப் படத்தில் இடம்பெற்ற வேறு சில வசனங்களை வேறு நடிகர்கள் பேசுவது சந்தேகம் தான்!
ஒய்.ஜி.மகேந்திரன், மாளவிகா, மாரிமுத்து, மாவட்டச் செயலாளராக வரும் ராமச்சந்திரன் துரைராஜ், இரு வாலிபர்கள், இறந்து போனவரின் தாயாக வரும் தீபா என்று எல்லாருமே காட்சிகளை எளிதாக நமக்கு கடத்துகின்றனர்.
வில்லனாக வரும் கவுதம் மேனன், தான் இயக்கிய படங்களில் வரும் வில்லன்களைப் பிரதிபலிக்கிறார்.
பின்னணி இசை அமைத்த ஜுபின், ஒளிப்பதிவு செய்த பரூக் பாஷா, படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் தேவராஜ் என்று எல்லாருமே காட்சிகள் பரபரவென்று நகர உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர்.
பப்ஜி விளையாட்டு மூலமாக போதைப்பொருள் கும்பல் தகவல் பரிமாறிக் கொள்வது போன்ற விஷயங்கள் தியேட்டரில் சிரிப்பை எழுப்பினாலும், சுவாரஸ்யமாக கதை சொல்ல இயக்குனர் மோகன் ஜி முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆனாலும், தொடக்கk காட்சியில் கொடுத்த பில்டப்புக்கு இணையாக அமையாத திரைக்கதை, அவரது வசனங்களைப் போலவே பேச வேண்டிய விஷயங்களை அலட்சியமாகத் தாண்டிச் செல்கிறது. தேவையற்ற இடங்களில் கவனம் கூட்டியிருக்கிறது.
மேலும் பல சர்ச்சைகள்!
’நாடகக் காதல்’ மூலம் இளம் பெண்களை வீழ்த்தி, அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து பணம் பறிக்கிறது ஒரு கும்பல் என்ற விவகாரத்தை மையப்படுத்தியிருந்தது ‘திரௌபதி’.
ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துவதாகவும், இன்னொரு சாதியைத் தாங்கிப் பிடிப்பதாகவும் கொண்டாடப்பட்டது.
‘ருத்ர தாண்டவம்’ படத்திலும், அதேபோல இரு வேறு சாதிகளைத் தொடர்புபடுத்தும் இழை மையமாக இருக்கிறது;
தேசப்பற்று படங்களில் முஸ்லிம் தீவிரவாதத்தைக் காட்டுவதோடு நியாயமான முஸ்லிம்கள் இங்கிருப்பதையும் காட்டுகிறோம் என்பது போல, இதில் தம்பி ராமையா, தீபாவின் பாத்திரங்களைத் தான் கூற வந்த கருத்துக்கு முட்டு கொடுக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கிறித்தவ மதத்துக்கு மாறியபிறகு, அரசு ஆவணங்களில் இந்துவாக அடையாளம் காணப்படுகின்றனர் என்பதைச் சொல்ல ‘கிரிப்டோ கிறித்தவர்கள்’ எனும் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறது ‘ருத்ர தாண்டவம்’.
இதற்கெதிரான குரலைச் சம்பந்தப்பட்ட சாதியினரே எழுப்புகின்றனர் என்று ‘மிகுந்த முன்னெச்சரிக்கையுடன்’ காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.
அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான தலைவர் அல்ல என்று பேசும் ராதாரவி ஏற்ற வழக்கறிஞர் பாத்திரம், தனது வீட்டில் முத்துராமலிங்கத் தேவர், அண்ணா, காமராஜர் படங்கள் இடம்பெற்றிருப்பதாகச் சொல்வது சாதிரீதியாகத் தலைவர்கள் முன்னிறுத்தப்படுவதை எந்த வகையில் எதிர்க்கிறது எனும் கேள்வியை எழுப்புகிறது.
சாதிய அபிமானத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட தலைவர்களின் படங்கள் வீட்டில் வைக்கப்படுகின்றன என்ற வாதத்தை வலுவாக்குகிறது.
இதைவிட ஒரு படி மேலே என்பது போல, ஈழத்தமிழர் விவகாரத்தில் போலியாக அக்கறை காட்டி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் கவுதம் மேனன் நடித்த வாதாபி பாத்திரம் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
‘மனித உரிமை எழுச்சிக் கழகம்’ என்ற தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஒரு சமூக இயக்கத்தின் தலைவராக அவரைக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.
அவரது அலுவலகப் பின்னணியில் வெளிநாட்டு பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது மேலும் பல சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.
இறந்துபோன வாலிபரின் நண்பரும் ருத்ர பிரபாகரனும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் எனும் வாதம் முன்வைக்கப்படுவதும், இறந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வரும் கட்சித் தலைவர் நீலச்சட்டை அணிந்திருப்பதும்,
கிறித்தவ இயக்கத்தின் தலைவராக வருபவர் கவுதம் மேனனிடம் ‘இதெல்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த கூட்டம்’ எனும்போதும் தியேட்டரில் கைத்தட்டல்கள் ஒலிக்கின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
‘திரௌபதி’யிலாவது வெறுமனே சாதி வேறுபாடு பூதாரப்படுத்தப்பட்டது; அதனை ஈடுசெய்ய, ‘நான் என் வேலையைத்தானே செஞ்சேன், என்னைப் போய் சாதி வெறியனா ஆக்கிட்டீங்களேடா’ என்று ரிச்சர்ட்டை வசனம் பேச வைத்திருக்கிறார்.
இதில் மனித உரிமைக்காகப் போராடும் போர்வையில் சில அமைப்புகள் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் காட்டுகிறார்; பிறக்கும் போது இருக்கும் மதமே இறக்கும்போதும் தொடர வேண்டும் என்கிறார்.
இதனால் உருவாகும் சர்ச்சைகளுக்கு அடுத்த படத்தில் (வசனமாக) பதிலளிப்பார் என்று நம்பலாம்.
சாதியைத் தான் தாங்கிப் பிடிக்கவில்லை என்று கூறும் மோகன் ஜி, கிளைமேக்ஸில் ரிச்சர்ட்டின் மனைவியிடம் இருந்து குழந்தையை வாங்கி ரிச்சர்ட்டிடம் கொடுக்கிறார்.
அந்த இடைவெளியில், அக்குழந்தைக்குக் கொடுத்திருக்க வேண்டிய முத்தத்தை தவறவிட்டிருக்கிறது அந்த தாய் பாத்திரம்.
தவறிப்போன அந்த சமத்துவ முத்தமே, எத்தகைய சாதீய பாரபட்சத்தை ‘ருத்ர தாண்டவம்’ முன்வைக்கிறது என்பதைப் புட்டு வைத்துவிடுகிறது.
-பா.உதய்